(Reading time: 15 - 30 minutes)

போலீஸ்காரர் என்னை. அதிகார தோனியில் " நீ எங்க போறாய்?"  என்று கேட்கிறார். “நான் எங்க போனால் உனக்கென்ன?” என்று கேட்க வேணும் போல இருந்தது. ஆனால் ஏன் அந்த வம்பு?

"களபூமி" என்கிறேன்.

"யார் சீதா மாமி வீட்டையா  போறாய் என்றார்?" நான் “ஓம்” என்றேன். "அப்ப நீ மணியத்திண்ட மகனா?" என்று ஆர்வமாகக் கேட்டார். நான் மீண்டும் "ஓம்" என்றேன். அப்பாச்சியைத் தவிர வேறொருவரும் அந்த ஊரில் இல்லையா? எல்லோருக்கும் அவளைத் தெரிகிறதே! 

அப்பா அந்த நாளில் லண்டன்  மற்றிகுலேஷன் பாஸ் பண்ணிவிட்டு அரசாங்கத்தில் வேலை செய்து படிப்படியாக முன்னேறி அரசாங்க மருத்துவ மனைகளில் வேலை செய்தவர். கொழும்பு, அனுராதபுறம் , கேகாலை, பதுளை, காங்கேசன்துறை என்ற பல நகரங்களில் வேலை பார்த்தவர்.   

அதிகார தோனி போய், அவர் பேசும் பாணியில் ஒரு அன்பு தெரிந்தது. "மணியம் எண்ட மச்சான்”. “அவனைக் கண்டு வருசக்கணக்காச்சு” என்று பெருமூச்சு விட்டார்".

"நானும் அவனும் அந்தநாளிலை கிட்டி, மாபில் எல்லாம் விளையாடுவோம். பனம் கொட்டையைப் எறிந்து, தென்ன மட்டையில் செய்த பட்டால் அடித்து கிரிக்கெட் விளையாடுவோம். "கசூரினா பீச் எல்லாம் சைக்கிளில் சுத்துவோம், கடலில் நீந்தி விளையாடுவோம். இப்ப அவன் நல்ல உத்தியோகத்திலை இருக்கிறான்  நான் இன்னும் போலீஸ்காரன்". அவர் பேச்சில் தான் செய்யும் வேலையில் ஒரு வெறுப்புத் தெரிந்தது. படிக்கவில்லையே என்ற கவலை தெரிந்தது.

அவர் சிறிது நேரம் கதைத்து விட்டு கடலைக் கடக்கும் பாலம் வந்ததும், “தம்பி நான் உன்னை நாளைக்கு வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு இறங்கினார்.

நான் ஜன்னலை திறக்கிறேன். இதமான மீன் வாசனையுடன் கூடிய கடல் காற்று பஸ்சுக்குள் வீசுகிறது. மீனவர் சிலர் வலையை எறிவதும் பின்னர் இழுப்பதுமாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் பாலத்தில் இருந்தபடி தூண்டில் போடுகிறார்கள்.

தாம் பிடித்த கொஞ்ச மீன்களை சிலர் கரையில் கொண்டு வந்து விற்கிறார்கள். 

அப்பா அங்கு பிடிக்கும் மீனின் உருசி பற்றிக்கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது!  “அப்பாச்சி முரல் மீனில் சொதி வைத்தால் எவ்வளவு உரிசையாக இருக்கும்!” என்று அப்பா சொல்ல, “ஓம்! நான் சொதி வைத்தால் அவருக்குப் பிடிக்காது” என்று அம்மா கத்துவாள்.

நன்றாக படித்த, குடும்பத்தில மூத்த மகன், தனது விருப்பமில்லாமல் யாழ்பாணத்தில் போய் காதல் செய்து, சீதனம் இல்லாமல், கல்யாணம் செய்தது அப்பாச்சிக்கு விருப்பமில்லை என்று அம்மா அடிக்கடி சொல்லுவா.

யாரோ என்னை பார்ப்பது போன்ற உணர்வு. என் பார்வையை பஸ்சுக்குள் திருப்புகிறேன். ஓர் அழகான பெண் என்னைப் பார்த்தபடி இருக்கிறாள். அவளுக்கு  எனது  வயது இருக்கும்.

அவளை கண்டதும் மனதில் எதோ ஒரு உணர்வு, அவளைப்  பார்ப்பது இதுதான் முதல் முறை!  உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சி. அவளோடு பல வருடங்கள் பழகியது போல் இருந்தது!

அவளது பார்வை, கவர்ச்சியான முகம் , நீண்ட கருத்த கூந்தல். மெலிந்த உடல் இவை எல்லாவற்றையும் தொட்டுப் பார்க்கமுடியாது, ஆனால் அவளை என்பார்வையில்  இருந்து அகற்றக்  கூடாது என்பது  போலத் தோன்றியது.

அவ்வளவு வேகமாக அந்த உணர்வு நேர்ந்தபோது, மனத்தின் அடித் தளத்தில் இருந்து, அங்கு எதோ  தவறிவிட்டது என்ற நினைப்பு!

அவளைப் பற்றித் தெரியாதது, எனது கற்பனையைக் கலைத்து விடுமோ என்ற ஏக்கம். நான் அவளைக் காதலிக்கிறேனோ! கண்டதும் காதலா? இருக்க முடியாது! 

அவள் என்னைப் பார்த்து என்ன நினைக்கிறாள்? அவளுக்கும் அதே உணர்வுகளா? எனது மூளைக்கு அவளது உணர்வுகளை எப்படி அறிய முடியும்?  

ஆனால் எனக்கு அவள்தான் வேணும் என்ற ஒரு உணர்வுத்தளத்துக்கு அப்பால் உள்ள ஒரு உணர்வு! இப்படி ஒரு எண்ணம் வாழ்வில் முன்னர் ஏற்பட்டதில்லை? அது நீடிக்குமா? 

அது ஒரு மிகவும் இன்பகரமான, அழகான, ஆனால் பயங்கரமான நிகழ்வு! அதை எப்படி அழைப்பது? ஒருதலைக் காதலா?

நான் கண்ட புதையல் காலங்களுக்கு நிலைக்குமோ என்று தெரியாது, ஆனால், அவள் பார்வைக்கு என்னை இளமையாக, கவர்ச்சியாக, அழகாக, அறிவாளியாக, வெளிப்படுத்தி நடந்து கொள்வதுதான் அத்தருணத்தில் நான் செய்ய வேண்டியது என்று தோன்றியது .

ஆஸ்திரேலியாவில் எத்தனையோ பெண்களுடன் பழகி இருக்கிறேன் ஆனால் அவர்கள் ஒருவரிடமும் எனக்கு இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டதில்லை! அவளுக்கும் அதே உணர்வா?    

நான் அவளைப் பார்பபதைக் கண்டு சிரித்தாள்! எனது அருகில் வந்து அமர்ந்தாள்! என்னால் நம்பமுடியவில்லை!

"என் பெயர் வினிதா!  உன் அபபாவை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் எனக்கு பல உதவிகள்  செய்திருக்கிறார்! அவர் எடுத்துத் தந்ததுதான் நான் பார்க்கும் ஆசிரியைத் தொழில்”. அவள் கண்களில் நன்றிக் கடன் தெரிகிறது. அப்பா பலருக்கு இப்படி உதவி செய்திருக்கிறார்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.