(Reading time: 15 - 30 minutes)

நான் யாரென்பது அவளுக்கு எப்படித் தெரியும்? அவள் சொல்வது எனது மனதில் பதியவில்லை, நான்தான் வேறு உலகத்தில் இருக்கிறேனே! "நீ அழகாக இருக்கிறாய்" என்று சொல்லவேணும் போல இருந்தது!

மற்றவர்கள் எங்களைப் பார்ப்பதைக் கண்டு “நான் வாறன்”  என்று சொல்லிவிட்டு எழுந்து பொய் விட்டாள். என் மனதில் அவள் உருவம் அழகாகப் பதிந்துவிட்டது.

அவளுக்கு வந்த துணிச்சல் எனக்கு வரவில்லையே என்று எண்ணிக்கொண்டு, என் பார்வையை வெளியே செலுத்துகிறேன்.

ஒருவர் தள்ளாடித் தள்ளாடி கண்டக்டரை தள்ளி விட்டுக்கொண்டு ஏறுகிறார்.

"இவன் வந்திட்டான் புளிச்ச கள்ளைக் குடிச்சுப்போட்டு. ”சண்முகம் எங்க போறாய் ?”, “காசை எடு", ஆத்திரத்தில் கத்துகிறார் கண்டக்டர்.

அவன் தடுமாறித் தடுமாறி சில்லறைக் காசை எடுத்து கண்டக்ட ரிடம். கொடுக்கிறான். கீழே விழுந்த மிகுதி சில்லறைக் காசை அவனிடம் எடுத்துக் கொடுத்து  "இதிலை இரு" என்று அவனை எனக்குப் பக்கத்தில் இருத்திவிட்டார்.

அவன் வாயிலிருந்து வரும் நாற்றம் என் மூக்கை துளைக்கிறது! வாந்தி வரும் போல் இருக்கிறது!

ஆனால் அவனோ "அவள் பறந்து போனாலே....." என்று வாயைத் திறந்து பாட ஆரம்பித்துவிட்டான். காதலில் தோல்வியோ அல்லது  பனம் கள்ளின் மகிமையோ? அவனுக்கு வாழ்கையில் என்ன விரக்தியோ?

நானும் காதலில் விழுந்தால் எனக்கும் அதே கதியா? 

காரைநகரில் எங்கு பார்த்தாலும் பனை மரங்கள். கள்ளுக்குப் பஞ்சமில்லை!

“அண்ணை என்னை வலந்தலை சந்தியில இறக்கி விடு”, வெறியில் கத்தினான் அவன். "உன்னை இறக்கி விட ஏலாது தூக்கிக் கொண்டுதான் போகவேணும்" கண்டக்டர் திருப்பிக் கத்தினார். “கஷ்டப்பட்டு உழைக்கிற காசெல்லாம்  கள்ளிலை செலவழிக்கிறான் படுபாவி, காதலாம்! கத்தரிக்காயாம்!” என்றார் கண்டக்டர்.

சற்று அயர்ந்திருந்த கிழவியும் நித்திரையால் விளித்து எழும்பி,"நானும் வலந்தலையில்தான் இறங்க வேணும்" என்றாள். "அவனையும் தூக்கிக் கொண்டு போ" என்றார். அவர்களின் சுவாரஸ்யமான பேச்சு எனக்குப் பிடித்தது.    

காரைநகரில் இருந்தவர்கள் பலர்யாழ்ப்பாணத்தில் பல ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும், வியாபாரம், வேலை என்று சென்றுவிட்டார்கள். “காகம் பறக்காத இடமில்லை, காரைதீவான் போகாத  ஊரில்லை”  என்று சொல்லுவார்கள்!

ஸ்ரீ லங்கா கடற்படை அங்கு இருப்பதாலும், போரின் தாக்கத்தாலும் மேலும் பலர்  வெளிநாடுகளுக்கும் போய்விட்டார்கள். 1950 ல் 45,000 ஆக இருந்த சனத்தொகை,  2007ல் 9,000 ஆகக் குறைந்து விட்டது.

வீட்டு வாசலில் அப்பாச்சி எனக்காகக் காத்து நின்றாள். அவளைக் கண்டதும் வீட்டு  வாசலிலேயே பஸ்ஸை சடுதியாக நிறுத்திவிட்டார் சாரதி. அப்பாச்சிக்கு அந்த ஊரில் நல்ல மரியாதை! பஸ்தரிப்பில் இருந்து அந்த வெயிலில் எனக்கு நடக்கத் தேவை இல்லை.   

கல்லால் கட்டப்பட்ட பெரிய பழைய வீடு. வீட்டைச் சுற்றி பனை ஓலையால் அழகாகக் வேய்ந்த வேலி. அதில் ஒரு மரத்தால் செய்த வெளி வாயிற்கதவு. எனக்கும் அது ஒரு பழகிய இடம்போல இருந்தது! அப்பா பிறந்து வளர்ந்த வீடல்லவா? "ஆனந்தன் அந்த படலையை திறந்து கொண்டு போ" என்றாள் அப்பாச்சி.

கடலோரம் என்பதால், வெள்ளை வெளேரென்ற மண்! ஈக்கில் துடைப்பத்தால் யாரோ மண்ணில் அழகாக பெருக்கிய கீறல்கள், கோலம் போட்டதுபோல், மண்ணை அலங்கரிக்கிறது.

என்னைப் பார்பதற்கு அப்பாவின் உறவினர் பலர் கூடியிருந்தார்கள். சிறுவர் சிறுமியர் அங்கும் இங்கும் ஓடித் திரிந்தார்கள். என்னைக் கேட்காமல் என் மடியில் வந்து உரிமையுடன் அமர்ந்து விட்டார்கள். எனக்கு பலத்த வரவேற்பு.

என் பெட்டியை திறந்து அப்பாச்சிக்கு அம்மா வாங்கித்  தந்த சாரியை  கொடுக்கிறேன். ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவந்த லின்ட் சுவிஸ் சொகலேட்டை அங்கிருந்த எல்லோருக்கும் கொடுக்கிறேன்.   

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவனல்லவா !, என்னிடம் ஆயிரம் கேள்விகள்? எல்லாருக்கும் பதில் சொல்லி முடிய இரவு எழு மணியாகி விட்டது.  

எனக்கென்று விசேஷமாகத் தயாரித்த சாப்பாடு! இடியப்பம் , புட்டு, மீன் குழம்பு, சம்பல், அப்பாவுக்குப் பிடித்த முரள்மீன் சொதி, இன்னும் பல. எல்லாவற்றையும் நன்றாகச் சாப்பிட்டு விட்டு பதினோரு மணியாகியும் நித்திரை வரவில்லை.

“ஆனந்தன்! "என்ன நித்திரை வரவில்லையா? புது இடம்,அப்படித்தான் இருக்கும்" என்றால் அப்பாச்சி.

சரியாகப் பன்னிரண்டு மணி எதோ "சர்.. சர்... சர்… சர..,சர.., சர,,,,சர...  என்ற சத்தம் ஜன்னலூடாகக் கேட்கிறது.

பேயோ பிசாசோ என்று பயந்தபடி, ஷீட்டால் முகத்தையும் காதுகளையும் மூடிக்கொண்டு படுத்துவிட்டேன். மற்றவர்களை எழுப்பிச் சொல்ல வெட்கம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.