(Reading time: 15 - 30 minutes)

காலையில் எழும்பினேன்! குசினியிலிருந்து யாரோ அப்பாச்சியோடு கதைப்பது கேட்கிறது. "ராத்திரி அந்த சத்தம் பிறகும் கேட்டுது! உனக்கும் கேட்டுதா?"  இது எதோ பேயோ பிசாசோ இப்ப பல நாளாகக் கேட்கிது"  “கோயில் ஐயரைக் கொண்டு எதாவது பூசை செய்ய வேணும்”.  “கத்திக் கதைக்காதே ஆனந்தன் பயந்திடுவான்".

ஆஸ்திரேலியாவின் பழம்குடி மக்களிடையே தமிழர்களிடையே இருப்பது போல் பல மூட நம்பிக்கைகள் இருப்பதாகவும், அவர்கள் பேசும் மொழியும் தமிழ் பேசுவதுபோல் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இன்னும் ஒரு  இரவு எப்படி இங்கே கழிக்கப்   போகிறேனோ என்று  எனக்குப்  பயமாக இருந்தது.

காலையில் அப்பாச்சி வேப்பம்  குச்சியை  பறித்துக்  கொண்டு  பல்  துலக்கப் போய் விட்டாள்!  நானும் பிரஷ்ஷையும் பற்பசையையும் எடுத்துக் கொண்டு கிணற்றை நோக்கிப்  போனேன். சென்செடையின் பற்பசையால் சுத்தம் செய்த என் பற்களைவிட அவளது பற்கள் மிக வெண்மையாக இருப்பதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.      

ஒருவரும் என்னுடன் நடுச்சாமத்தில் கேட்ட சத்தத்தைப் பற்றி மூச்சு விடவில்லை.

காலை எட்டு  மணிக்கு பஸ்ஸில் சந்தித்த போலீஸ் மாமா வந்திருந்தார். இப்போது அவர் போலீஸ் ஜுனிபோர்மில் இல்லை. அவரும் எங்களுடன் சேர்ந்து காலைச் சாப்பாட்டை சாப்பிட்டார். "தங்கச்சி கொஞ்சம் தண்ணி கொண்டுவா என்றார் ".

என் கண்களை நம்ப முடியவில்லை! நான் ச்நதித்த அதே வித்யாதான்,குசினியில் இருந்து வந்தாள்! இரண்டு மூக்குப்பேணிகளில் தண்ணீர் கொண்டு வந்தாள். மாமா அவளைத் தனது மகளென்று எனக்கு அறிமுகம் செய்தார்.  

நல்ல மஞ்சள் நிற உளுந்துத் தோசை, செத்தல் மிளகையில் தேங்காத் திருவலு டன் புளியும் சேர்த்து அரைத்த சம்பல். அப்படித் தோசை நான் ஒரு நாளும் சாப்பிடவில்லை.

அப் பாச்சிக்கு நான் ஒவ்வொரு தோசையாக எடுத்தெடுத்துப் போட்டு சாப்பிடுவதை பார்த்து நல்ல பெருமை. "இன்னும் சாப்பிடு!, இன்னும் சாப்பிடு! “என்ற சொல்லிக் கொண்டே இருந்தாள்.    

சாப்பிட்டு முடிந்ததும் போலீஸ் மாமா, "வா நாங்கள் ஊரை சுற்றிப் பார்த்து விட்டு வருவோம்" என்றார். ஈழத்து சிதம்பரம் என்று அழைக்கப்படுகிற மிகப் பழைய சிவன் கோவில், அப்பா படித்த இந்துக் கல்லூரி, அவர் சயிக்கிளில் சுற்றித் திரிந்த கசூரினா பீச், இன்னும் பல இடங்களை சுற்றிப் பார்த்தோம். வித்யாவும் வந்திருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

பஸ்ஸில் குடித்துவிட்டு வந்தவனைக் கண்டோம். அவன் பய பக்தியாக எங்களைக் கண்டதும் ஒரு பக்கம் ஒதுங்கி நின்றான். போலீஸ் மாமாவுக்கு அவன்  பயப்படுவது தெரிந்தது. மாமா அவனோடு கதைத்தார். அவர்கள் பேசியதில் இருந்து அவன் அப்பாச்சி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவன் என்றும் அவன் குடிக்கத் தொடங்கியதே அவன் காதலித்த பெண் அவனை ஏமாற்றி விட்டாள் என்பதால் என்றும் தெரிய வந்தது.  

களைத்து வீடு வர ஐந்து மணியாகி விட்டது. கடைசியாக சாப்பிட்டது கோவில்  சர்க்கரைப் பொங்கலும் அவிச்ச கொண்டல் கடலையும்.

அப்பாச்சி போட்டுத் தந்த வேர்கொம்பு, மல்லி, ஏலம் எல்லாம் சேர்ந்த சுக்குக் காப்பி, முறுக்கோடு நன்றாக இருந்தது.

சனி, ஞாயிறு மாமாவுக்கு வேலை இல்லை. அவரும் அங்கே படுத்துவிட்டார்

பன்னிரண்டு மணி அதே சத்தம். நான் மாமாவை எழுப்புகிறேன் அவர் சேர்ட்டை போட்டுக்கொண்டு சத்தம் வரும் வேலியை நோக்கி நடக்கிறார்.

அப்பாச்சி அவரைத் தடுக்கிறார். அவள் சொல்வதை அலச்சியப் படுத்திவிட்டு  அவர் போகிறார்.

சத்தம் பெரிதாகி, பெரிதாகி, யாரோ வேலியில் விழுவது போல் கேட்கிறது!

“என்னை அடிக்காதேங்கோ!” யாரோ கத்துகிறார். மாமாவுக்கு ஏதோ நடந்து விட்டதோ? மாமாவை பேய் அடித்து விட்டதோ? 

சிறிது நேரத்தில் மாமா அந்தக் குடிகாரனை இழுத்தபடி வருகிறார். அவனுக்கு நிற்கமுடியவில்லை! அவனைப் பேய் அடித்துவிட்டதோ?  

பேயுமில்லை! பிசாசும் இல்லை! அவன்தான் ஒவ்வொரு இரவும் நடுச்சாமத்தில்   குடித்துவிட்டு, வெறியில், வேலியில் அரைந்து அரைந்து சத்தம் செய்து கொண்டு போயிருக்கிறான். சத்தத்தின் மர்மம் புரிந்துவிட்டது.

அடுத்தநாள் நான் வெளிக்கிட ஆயத்தமாகிறேன். நான் சந்தித்த எல்லோரும் அங்கே கூட்டமாக நிற்கிறார்கள் என்னை வழி அனுப்ப!

அப்பாச்சியின் கையில் ஒரு பழைய ஏடு. நடுவில் ஓட்டை துளைத்து கயிற்றால் கட்டப்பட்ட பன ஓலையில் செய்தது.l " இதை அப்பாட்ட குடு" என்றாள். ஒரு பெட்டி நிறைய பலகாரமும் தந்தாள்.

எல்லோருக்கும் விடை சொல்லி விட்டு அங்கிருந்து புறப்படுகிறேன். வைத்த கண் வைக்காமல் என்னையே பார்த்தபடி அங்கே நின்றாள் வித்யா. எனக்கு அவளை விட்டுப் போக மனமில்லை!

உன்னோடு மனம் திறந்து கதைக்க முடியவில்லையே என்று சொல்ல வேணும் போல எனக்குத் தோன்றியது, ஆனால் முடியவில்லை! அவள் வேறு யாரையும் காதலிப்பாலோ என்று எனக்கு ஒரு சந்தேகம்!

என் புதிய அனுபவங்களை நினைத்துக்கொண்டு யாழ்பாணம் போய் சேருகிறேன்.

அப்பாவிடம் அப்பாச்சி தந்த ஏட்டைக் கொடுக்கிறேன். அம்மாவிடம் அவள் தந்த பலகாரப் பெட்டியை கொடுக்கிறேன்.

அப்பா சாத்திரக் காரனிடம் போய் வருவதாக கூறியபடி ஏட்டையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

எனது இரண்டு வார விடுமுறை முடிந்து விட்டது!

“யாழ்தேவி” புகையிரதத்தில் என்னை கொழும்பு அனுப்ப அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். நாளைக்கு கொழும்பிலிருந்து சிட்னி பயணம். அப்பா என் கையில் ஒரு கடிதஉறையைத் தந்து "இதைப் பார்" என்றார.

கடிதஉறை யைத்  திறக்கிறேன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை, அது வித்யாவின் படம்! "உனக்கு இவளைப்  பிடிச்சிருக்கா?" அம்மா கேட்கிறாள்.

கரும்பு தின்னக் கூலி வேணுமா? அம்மாவைக் கட்டிப் பிடித்து "ஆம்" என்றேன். காதல் செய்து,பல கஷ்டங்களுக்கிடையே கல்யாணம் செய்தவளுக்குத் தெரியாதா எனது உணர்வுகள்?    

“ஏடு” வித்யாவின் சாதகம் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

சீதனம் வாங்கி ,சாதகம் பார்த்து, ஒருவரை ஒருவர் பார்க்காமல், பேசிப் பழகாமல் திருமணம் செய்வது எனக்கு பிடிக்காதது.

ஆனால் இப்போது அப்பா சாதகப் பொருத்தம் பார்த்தது எனக்குச் சாதகமாக அமைந்து, காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக மாறியது. 

அவர்கள் திட்டமிட்டு என்னை ஆஸ்திரேலியாவிலிருந்து வரவழைத்து, காரைநகர் அனுப்பி, வித்தியாவைச் சந்திக்க வைத்தது, எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு நிட்சயமாகத் தெரியும் அது ‘ஒருதலைக் காதலல்ல’!   

எல்லாம் கற்பனையே. ஒருவரையும் குறிப்பதில்லை

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.