(Reading time: 8 - 15 minutes)

தாய் எப்போது தாயாவாள்? - வின்னி

Mother

தாய், தந்தை என்ற இரண்டு பொறுப்புகளையும் சாகும்வரை கையிலெடுத்த என் தந்தை, எப்போதும் என் ஹீரோதான். குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்தித்து தமது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்தார்.

எல்லாத் துன்பங்களில் இருந்தும் எம்மை பாதுகாக்க முயற்சித்தார். அவரைப்போல் மிகக் கடுமையாக உழைக்கும், பொறுமையுள்ள, மற்றவர்களை உணர்ந்து கொள்ளக்கூடிய ஒருவரை நான் என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. ஆறு பிள்ளைகளையும், மனோநிலை சரி இல்லாத மனைவியையும் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்த அவர் ஒரு உயர்ந்த மனிதர்!

அவரைப்போல அம்மாவை மட்டுமல்ல, ஏனையோரையும் உணர்ந்துகொள்ளக் கூடிய அந்த தன்மையை அடைய என் வாழ்நாள் முழுவதும் நானும் முயற்சி செய்தேன்.

அவர் தனிமையை விரும்பும் ஒரு மனிதர். எவ்வளவு கஸ்டங்களிலும்  தனது உணர்வுகளை இலகுவில் வெளிக் கொண்டு வரமாட்டார். அம்மாவின் ஒழுங்கற்று ஊசலாடுகிற, மனோநிலையை, அவர் எப்படித்தான் தாங்கினார் என்பது என் அறிவுக்கு அப்பாற்பட்டது.

எவ்வளவு சவால்கள் வந்தாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டார். மற்றவர்களுக்கு உதவுவார். மற்றவர்கள் மதிக்க நடந்து கொள்வார். அவர் உதவியவர்கள் அவருக்கு வேண்டிய நேரம் அவருக்கு  உதவவில்லை.  

ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோது நான் ஒரு அதிர்ச்சி நிலையில்தான் இருந்தேன்! அம்மாவின் வெறித்தனமான அழுகை, கத்தல், வீட்டுப் பொருட்களை எறிவது, சட்டி பானைகளை உடைப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, தானாகச் சிரிப்பது, வீட்டை விட்டு உடுத்த சேலையுடன் தெருவால் ஓடுவது என் வாழ்க்கையில் நடந்தவை.  

பிள்ளைகளை அவள் ஒருபோதும் வார்த்தைகளாலோ அல்லது வேறு விதமாகவோ புண்படுத்தியது கிடையாது. ஆனால், அப்பாவுக்கு எதிராகத்தான் எல்லாம்! அவர்தான் அவளது  எதிரி!

அப்பாவோடு ஆத்திரப்படுவது,அவரைத் கேட்ட வார்த்தைகளால் திட்டுவது, காரணமில்லாமல் குற்றம் சாட்டுவது, எம்மால் சகித்திக்கொள்ள முடியாது. அப்பா எதையும் சகித்துக் கொள்வார். அப்பா நல்ல பொறுமை உள்ளவர். அவளைக் கண்டு கொள்ளாத மாதிரி இருந்துவிடுவார்.

எல்லாம் அவள் மேல் இருந்த அன்பினாலா?

ஆனால் எனது மனம் மிகவும் வேதனைப்படும். மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தனது வாழ்வை தியாகம் செய்த அவருக்கு ஏன் இந்த துன்ப வாழ்க்கை? என் மனதுக்குள் நான் அழுவதுண்டு!  

தன்னைக் கட்டுப்படுத்த முடியாத அவளது செய்கைகள் அவளுக்கு ஏற்படும் தருணங்களில், தான் செய்வதை அவள் உணராதவள், தன்னிலை அறியாதவள் என்று எனக்குப் புரிந்தது.

என் இளம்பிராயத்திலேயே, எனது தாய் எப்போது எனது தாயாக இருப்பாள், எப்போது தாயாக இருக்க மாட்டாள் என்று அறிந்து கொண்டேன்.  

எல்லோரையும் போல எனக்கும் ஒரு அம்மாவை ஏன் அந்தக்கடவுள் தரவில்லை? என்று நினைத்த நாட்கள் உண்டு. மற்றவர் முன்னால் வெட்கப்பட்ட நாட்கள் பல.    

எனது ஆறு வயது வரை, நல்ல மனோநிலையில் இருந்த அம்மாவை நான் சிறிது அறிந்திருந்தேன். எனக்குப் பிறகு பிறந்த சகோதரர்கள் அவளை வேறு ஒரு விதத்திலும் அறிந்ததில்லை, அவர்களது நிலை என்னைவிட இன்னும் மோசமானது. அவர்களுக்குத் தெரிந்தது குழம்பிப் போயிருந்த அம்மாதான். அவள் சுய நிலையில் இருந்ததை அவர்கள் அறியாதவர்கள். 

மூத்த மகனாகப் பிறந்து, நான் ஐம்பது வயதில் அறிய வேண்டியதை பதினாறு வயதில் அறிந்துவிட்டேன்!   

அப்பா கிராமத்தை சேர்ந்தவர். அரசாங்கத்தில் நல்ல பதவி.  அம்மா அழகானவள், படித்தவள்,   நகரத்தை சேர்ந்தவள். அவர்களுக்குள் காதல். அப்பா தன் தாயின் விருப்பத்துக்கு மாறாக, அவளது சாபத்தோடு, அம்மாவை மணந்தவர். அவர் விரும்பியிருந்தால் அம்மாவை மனநல மருத்துவமனையில் தள்ளிவிட்டு, எங்களையும் கைவிட்டு, வேறு ஒருவளைத் தேடித் போயிருக்கலாம். ஆனால் கடைசிவரை அவளைக் கைவிடவில்லை.

எனது தாய் எனக்குத் தாயாக இருந்து மிக நீண்ட காலமாகிவிட்டது. அவள் ஒரு கட்டுப்படுத்த முடியாத குழந்தையாக மாறிவிட்டாள்! அவளது நிலையைப் பார்த்து எனக்கு கோபம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை!

அப்பாவுக்கு உதவுவதற்கு, எனது இளைய சகோதரர்களை பராமரிப்பதும், அவர்களைக் கட்டுப்பாடுடன் வளர்ப்பது, என் தலையில் விழுந்தது. அதனால் நான் என் நண்பர்களுடன் விளையாடுவதற்கோ வெளியில் செல்வதற்கோ எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் குறைவு.

சில வேளைகளில் என் அம்மாவை ஒரு இடைஞ்சலாகவும், வெட்கக் கேடாகவும் நினைத்தேன். எனது  நண்பர்களுக்கு இல்லாத இன்னுமொரு மேலதிகக் கடமையாகவே நினைத்தேன்!

என்னைக் கருவில் சுமந்து பெற்றவளை, நான் விரும்புகிறவளை, நேருக்கு நேர் பார்த்து இவளா என் அம்மா என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவளா என் தாய் என்று நினைத்ததுண்டு! தாய்ப் பாசத்தை தேடித் தவித்ததுண்டு! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.