(Reading time: 8 - 15 minutes)

வளது வாழ்வை நினைத்து நான் கவலைப்படுவதுண்டு, பரிதாபப்படுவதுண்டு ஏன் வெட்கப்படுவதுகூட உண்டு. அவள் தன்னை அறியாமல் செய்யும் செய்கைகளுக்கு அவளைக் குறை கூற முடியுமா? அப்பா கஷ்டப்பட்டு உழைத்த காசெல்லாம் அவள் மருத்துவத்துக்கு விரயமானதே ஒழிய  அவளை சுய நினைவுக்கு கொண்டுவர முடியவில்லையே என்ற கோபம் எனக்கு!   

முடிவில் அவளை யோசித்து நான் கவலைப் படுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். மனதில் நினைப்பது வேறு, செய்கையில் அது சாத்தியமா? அவளை நினைத்து வெட்கப்படுவதில்லை! என்று என்னால் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா?

மனநோயிலிருக்கும் ஒருவள் தாயாக இருப்பது சிக்கலானது, வேதனை கொடுப்பது. ஒரு மனக்கஷ்டம் கொடுக்கக் கூடிய சங்கடமான நிலை.   

நான்  அவளுடன் ஒரு இறுக்கமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தேன். அவளை மன்னித்து விடுவதாக அவளுக்கு சொல்ல விரும்புகிறேன். அவள் அதைக் கேட்க வேணும். மற்றவர்கள் அவள் எனக்கு ஒரு வெட்கக்கேடு என்று நினைப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அதைத் தான் என் தந்தையும் விரும்பினார்!

காலை எழும்பி வீட்டு வேலைகளை பார்க்கிறேன். அடுப்பிலிலிருந்து சமைத்த கறிகளை இறக்கி வைக்கிறேன். சோறு பதமாக இருக்கிறதா என்று பார்க்கிறேன். இரவு சலவை செய்த வெள்ளை ஷேர்ட்டையும், நீலக் காற்சட்டையையும் போடுகிறேன். ஒரு துண்டு பாணை எடுத்து ஜாமைப் பூசி அவசர அவசரமாக வாயில் போட்டுக்கொண்டு, நாலு வயதான தம்பிக்கு “கதவைச் சாத்திவிட்டு கவனமாக இரு” என்று சொல்லிவிட்டு, பாடசாலைக்கு ஓடுகிறேன். அம்மாவுக்குச் சொல்லி என்ன பலன் அவளுக்கு ஒன்றும் விளங்காதே! அப்பா அதிகாலை வேலைக்கு கிளம்பிவிட்டார்.

மதியம் சரியான பசி வீட்டுக்கு வருகிறேன். தம்பி ஒரு மூலையில் குந்தி இருக்கிறான். ஏதோ நடந்து விட்டது! அம்மா கட்டிலில் படுத்திருக்கிறாள். சமையல் அறைக்குள் போகிறேன்.

சோறு, கறி எல்லாம் உடைந்த பானையுடன் அடுப்பில் கொட்டியிருப்பதைக் காணுகிறேன்.நான் கஷ்டப்பட்டு சமைத்ததெல்லாம் அடுப்பில் கொட்டிக் கிடக்கிறது! பசியோ வயிற்றைப் பிடிக்கிறது. தலை சுற்றுகிறது! எமக்குச் சமைத்துப் போட வேண்டியவளே செய்த அநியாயம் அது!  

அவளிடம் போகிறேன் என் வாயில் வந்த வார்த்தைகளால் அவளைத் திட்டுகிறேன். ஏன் அவள் அப்படி நடக்கிறாள் என்று கேட்கிறேன். அவள் ஒன்றும் அறியாதவள் போல் அமைதியாக ஏதோ யோசனையில் படுத்திருக்கிறாள். நான் சொல்வது ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை!

எனக்கு வந்த பசியைவிட என் சகோதரர்களுக்கு பசி என்பதே எனது கோபம். அவர்களும் ஒவ்வொருவராக பாடசாலையால் வந்துவிட்டார்கள்! கோபத்தை அடக்கிக் கொண்டு, சமைக்கத் தொடங்குகிறேன். அம்மா சமையல் அறை வாசலில் வந்து நிற்கிறாள். அவளுக்கும் பசி! அன்று மாலை ஒருவரும் பாடசாலை போகவில்லை.   

இரவு வீட்டுக்கு வந்த அப்பாவுக்கு என்னை விடக் கோபம். அவரும் அவளைத் திட்டத் தொடங்கி விட்டார். அப்பா அவளை ஒருநாளும் அப்படித் திட்டியதை நான் கேட்டதில்லை! அவர் அவளுடன் கோபப்பட்டு நான் கண்டதும் இல்லை!

அவரும் பொறுமையின் எல்லையைத் தாண்டி விட்டாரோ?  

அவளுக்கு பொறுக்க முடியவில்லை சமயலறையிலிருந்த தேங்காய் உடைக்கும் அந்த பெரிய கத்தியை எடுத்து, அப்பாவின் தலையில் ஒரே வெட்டு! தலையிலிருந்து இரத்தம் பெருகுகிறது. நான் அவளைப் பிடித்து தள்ளிவிட்டு அவருக்கு என்னால் இயன்ற முதலுதவி செய்கிறேன். இரத்தத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை! அவர் மயங்கி விட்டார்! நான் தடுமாறி விட்டேன்!

ப்பா மருத்துவ மனையில்!

ஒருபோதும் உதவிக்கு வராத அம்மாவின் சகோதரர்கள், அவளை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து மனநல மருத்துவமனையில் சேர்க்கும்படி சொல்லி விட்டு சென்று விட்டார்கள். அவர்கள்தான் வீட்டுப் பக்கம் வருவதில்லையே! இப்ப மாத்திரம் எங்கிருந்து வந்தது அவர்கள் அக்கறை?

இரண்டு கிழமைகளில் அப்பா தலையில் பண்டேஜூடன் வீட்டுக்கு வந்துவிட்டார். அவருக்கு தலையில் பதினைந்து தையல்கள். அம்மா ஒரு மூலையிலிருந்து அவரது தலையைப் பார்த்தபடி இருக்கிறாள்! அவள் அப்பாவுக்குக் கொடுத்த தண்டனை அவளுக்குப் புரிகிறதா? அவள் மனோநிலை யாருக்குப் புரியும்?

அப்பா அவளை மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுவாரோ என்று நான் பயந்தேன்!

மனநல மருத்துவமனைக்கு அவளை அனுப்புவது நரகத்துக்கு அனுப்புவது போன்றது!

அவளால் எப்படி அங்கு வாழமுடியும்? வீட்டில் கிடைக்கும் அன்பு அவளுக்கு அங்கு கிடைக்குமா?

அவள் தன்னை அறியாமல் செய்வது சரியோ, பிழையோ நாம்தான் பொறுத்துப் போக வேண்டும்!

அம்மா அவரைப் பார்த்து சிரிக்கிறாள்! அப்பா அவளை பார்த்து புன்னகைக்கிறார்! அவர் தலையை வந்து தடவுகிறாள்.

அவள் என்ன கொடுமை செய்தாலும் அவள் அவரது மனைவி! அவரது ஆறு பிள்ளைகளின் தாய்!   

அப்பாவின் புன்னகை, அவள் வீட்டில் இருப்பதுதான் நல்லது என்கிறது!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.