(Reading time: 2 - 4 minutes)

பேயோடு விளையாடி ஆவியோடு உறவாடி - கிருஷ்ண பாபு

Graveyard

பேய்க்கதை எழுதி ரொம்ப நாளாச்சேனு எழுத உட்கார்ந்தேன்.

எதை எழுத?

சின்னவயசுல நடந்த ஒரு சம்பவத்தையே எழுதலாம்னு முடிவு செய்தேன்.

'டேய்,இந்த மரத்துல பேய் இருக்குனு எங்கப்பா சொல்வார்டா!'

'எங்கப்பனும்தான்! நாம பள்ளிக்கூடம் போகாம இங்கன கோலி வெளையாடுறது பிடிக்காம இப்டி புளுகுறதே இவனுக வேலையாகிப் போச்சு! விட்டுத் தள்ளுடா'

மரத்தின் பின் நின்ற எனக்கு சிரிப்பு வந்தது.இவன்களோடு விளையாட ஆசையானது. அவர்களுக்கு தெரியாமல் பின்பக்கமாக விறுவிறு என மரமேறினேன்.

கீழே அத்தனை பேரும் லாக் விளையாட கட்டம் போட்டுக்கிட்டு இருந்தார்கள். ஒரு கிளையை ஓங்கி உலுக்கினேன்.

சரசரசரசரசரசர……

சரசரசரசரசரசர……

பயல்கள் பூரா கிலியோட மேலே பார்க்காங்க. நான் ஒளிஞ்சுகிட்டேன்.அதில் ஒருத்தன் மட்டும் சொல்றான்.

'அணில் அல்லது ஆந்தையா இருக்கும்! நீ பயப்படாம கோலியப் போடுறா மாப்ள!'

சரி!இவன் கெட்டிக்காரனா இருப்பான் போலனு மறுபடியும் ஒரு உலுக்கு!புளியம்பழம், கொப்பு,குலை எல்லாம் கீழே விழுந்தது!

'ஐ!ஒதப்பழம்'னு ஆளுக்கு ரெண்டை எடுத்துக் கொடுத்து தின்னுகிட்டே பயமில்லாம மேலே பார்க்குறான். வெறுத்துட்டேன்.இவனை எப்டியாவது பயமுறுத்தியே ஆகணும்னு வெறியாகிப் போச்சு!

சுவத்துல கிறுக்குறதுக்கு எப்பவும் இடுப்புல கரித்துண்டு வச்சிருப்பேன்.அத எடுத்து முகம் பூரா இழுவிக்கிட்டு முதல் கொப்புல இருந்து 'தொம்'முனு அவன் மேலேயே விழுந்தேன்.

'ஐயோ! பேயீஈஈஈஈஈ'னு கத்திக்கிட்டு மயங்கி விழுந்துட்டான். மத்தவங்க ஓடியே போயிட்டானுக!

ரெண்டுநாளு பயலுக்கு பேச்சுமூச்சே இல்ல.எங்க வீட்ல கட்டி வச்சு வெளுத்துட்டாங்க என்னை.

ஒருவழியா சமாதானமாகி நாங்க ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். கோலி,பம்பரம்,கிட்டி, கிரிக்கெட்,சீட்டு,தண்ணி, தம் என எங்கள் அத்தனை பொழுதும் மரத்தோடே அமைந்தது.

இப்போதும் அங்கேதான் போய்க் கொண்டு இருக்கிறோம்.

தையை முடித்தேன்.

எழுதியதை அவனிடம் காண்பித்தேன்.

'எல்லாம் சரிதான், ஆனா பேயே வரலையே மாப்ள! இதை பேய்க்கதைனு எப்படிடா சொல்றது?'

'சரி,அப்போ இன்னிக்கு நைட் இதவிட பயங்கரமான கதை எழுதுறேன்!'

'சரி சரி! பயமுறுத்தி விளையாட போவோமா?'

'சரி'

கிளம்பினோம் - எங்கள் கல்லறைகளில் இருந்து!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.