(Reading time: 6 - 11 minutes)

முற்பகல் செய்யின் - லேகா

Broken heart

ப்போ நீ முடிவா என்ன தான் சொல்ற?”

“அவங்க இனிமேல் இங்க வரக்கூடாது”

“லூசா நீ? அவ இந்த வீட்டுல எனக்கு முன்னாடி பொறந்தவ. இங்க எனக்கு இருக்குற உரிமை அவளுக்கும் இருக்கு.”

“அதுதான் அவங்கள புகுந்த வீட்டுக்கு அனுப்பியாச்சே. சும்மாவா அனுப்புனீங்க? நல்லா நகை, நட்டு போட்டு தான அனுப்புனீங்க? இப்போ எதுக்கு அடிக்கடி இங்க வராங்களாம்?”

“என்ன பேச்சு பேசுற? அவ என் அக்கா. அவளுக்கு பண்ணாம யாருக்கு பண்ணுவோம்? அதுவும் அவளுக்கு கலியாணத்துக்கு அப்புறம் எதுவுமே செய்யல, அவ வீட்டுலயும் செய்ய விடல. பக்கத்து தெருவுல இருக்குறவ அவ அப்பா, அம்மாவ பாக்க வர்றா, அத எப்படி வரவேண்டாம்ன்னு சொல்றது?”

“அது என்ன அவ்வளவு பாசம்? நான் என்ன இப்படி தினமும் என் அம்மா வீட்டுக்கு போய்ட்டா இருக்கேன்? ஆனா இங்க, காலங்காத்தால வந்து உக்காந்துக்க வேண்டியது”

‘சாயந்திரம் தான வர்றா? அதுவும் அரைமணி நேரம் கூட இல்ல. நீயும் வாரவாரம் நூறு கி.மி. தாண்டி உன் அம்மாவ போய் பாத்துட்டுதான வர்ற’ எனக் கேட்க நினைத்து கேட்க முடியாமல் போனது அவனுக்கு.

மேற்கண்ட வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது அரவிந்திற்கும் அவன் மனைவி மாலதிக்கும். இருவருக்கும் திருமணம் நடந்து இரு வருடங்களாகிறது. புதிதாக வந்தபொழுது மாலதியும் எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவுமே இருந்துவந்தாள். அதன்பின் தான் இந்த மாற்றம். வயதான மாமியாரைத் தன்னுடன் சமையலில் உதவி செய்யச்சொல்லி பாதிக்கும் மேலான வேலைகளை அவரிடம் தள்ளினாள்; மாமனாரை வெளி வேலைகள் பார்க்க தள்ளாத வயதில் அனுப்பினாள். பெரியவர்கள் இருவரும் தங்கள் வீட்டு வேலைகளை தாம் செய்யாமல் வேறு யார் செய்வர் என நினைத்துக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் செய்தனர்.

இதனைப் பார்த்துவிட்டு விமலா, அரவிந்தின் அக்கா கேட்டதிலிருந்து வெடித்தது சண்டை. விமலாவும் வெளிப்படையாக மாலதியை குற்றம்சாட்டவோ கேட்கவோ இல்லை. முடிந்தளவு தன் தாய் தந்தையருக்கு ஓய்வு எடுக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு தான் கூறினாள்.

இப்போது இங்கு எடுத்திருக்கும் வாதம், விமலா தன் வீட்டிற்க்கு வரக்கூடாது என்பது தான். இதற்கு பெரியதாக ஒன்றும் காரணம் இல்லை, மாமனார் வீட்டின் விலைமதிப்பை அறிந்ததைத் தவிர. அதிலிருந்து, எங்கே கணவனின் தமைக்கையார் பங்கு கேட்பாரோ என்று தான் இந்த “வீட்டுக்கு வர தடை உத்தரவு”.

சொல்லிப்பார்த்து சலித்த அரவிந்த் மாலதியின் தாக்குதல் தாங்காமல் தன் அக்காவிடம் வீட்டிற்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டான். காரணம் அறிந்த விமலாவும் ஒதுங்கிவிட்டாள். இந்த சூழ்நிலையை உணர்ந்த அரவிந்தனின் பெற்றோர், அனைத்து சொத்த்துகளையும் விமலாவின் சம்மதத்தோடு மகனுக்கே எழுதி வைத்துவிட்டனர்.

ஆனால் அத்தோடு நிற்கவில்லை மாலதி. இந்தப் பிரிவினையை குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தினாள். ஒரு நாள் அரவிந்த் விமலாவின் குழந்தைகளை வழியில் பார்த்தபோது பக்கத்திலிருந்த கடையில் இனிப்பு வாங்கிக்கொடுத்து அனுப்பிவைத்ததை அறிந்து ஆடித் தீர்த்துவிட்டாள். அதிலிருந்து எங்கேயாவது விழாக்களில் பார்த்துக்கொண்டால் பேசிக்கொள்வதோடு சரி. இப்போது அந்த பேச்சும் நின்றுபோய் வெறும் தலையசைப்போடு நின்றுவிடும் அளவுக்கு வந்துவிட்டது.

தன்பின் வருடங்கள் ஓடிவிட்டன. மாலதியின் தம்பி அர்ஜுனன் வளர்ந்து திருமண வயதை எட்டியபோது தான் இன்னொரு புது பூகம்பம் முளைத்தது. மாலதியின் தந்தை இல்லையென்ற காரணத்தாலும், தாய்க்கு பெண் தேடுவதில் அவ்வளவு திறமை இல்லையென்பதாலும் பெண் பார்க்கும் பொறுப்பு அந்த குடும்பத்திற்கு மருமகனான அரவிந்தனிடம் வந்துசேர்ந்தது.

ஐந்து வருடங்களாகிவிட்டது, வரன் பார்க்க ஆரம்பித்து. இன்னும் அமைந்த பாடில்லை. வரும் பெண் தனக்கு அடக்கமாக இருக்கவேண்டும் என்று மாலதி எதிர்பார்த்தால் எப்படி அமையும்? அம்மா வீட்டில் இருந்து தனக்கு வரும் சில சலுகைகள் தம்பியின் திருமணத்திற்குப் பின்னும் வரவேண்டுமல்லவா? ஏதாவது ஒரு காரணம் சொல்லி, வரும் இடங்கள் யாவையும் தட்டிவிட்டாள் மாலதி. சில இடங்கள் அர்ஜுனுக்கும் பெண்ணுக்கும் பிடித்திருந்தாலும் மாலதியால் தடங்கலாகி நின்று போயிற்று.

ஒரு நாள் மாலதிக்கு அதிகாலையில் அவள் அம்மாவிடமிருந்து அலைபேசி அழைப்பு, உடனே புறப்பட்டு வரும்படி. என்னவோ ஏதோவென்று அவசரகதியில் கிளம்பி அங்கு சென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அர்ஜுனன் தனக்குப் பார்த்த பெண்களில் ஒருத்தியைக் காதலித்து அவளையே திருமணமும் செய்துகொண்ட விவரம். அதன்பின் என்ன செய்வது எனத் தெரியாமல் மாலதியின் அம்மாவை சமாதானப்படுத்தி புதுமணத் தம்பதியரை வாழ்த்திவிட்டு வந்தனர் அரவிந்தனும் மாலதியும்.

ஆனால் அர்ஜுனனின் திருமணத்திற்குப் பின்னும் மாலதி தன் தாயிடம் ஏதேனும் கேட்டு வாங்கத் தவறியதில்லை. தன் கணவனின் சம்பாத்தியம் இப்படி எல்லாம் போக ஒரு மனைவி எவ்வாறு அனுமதிப்பாள், அதுவும் அவர்களுக்கே போதாது என்னும்போது? வந்தது தடை உத்தரவு, இப்போது மாலதிக்கு, அவளது அன்னையின் வீட்டிலிருந்து. இதைக் கேட்டபோது நடந்த தகராறில் அர்ஜுனன் தன் மனைவியின் பக்கம் நிற்க, மாலதி அவமானப்பட்டு வெளியேறவேண்டியதாயிற்று.

அங்கிருந்து வந்த நாட்களில் தன் தம்பியையும் அவன் மனைவியும் ஆத்திரத்துடன் திட்டித் தீர்த்தாலும், கோபம் வடிந்தபின் யோசித்தபோது தான் தெரிந்தது அவளுக்கு தன் பக்கம் இருந்த தவறும், தான் விமலாவுக்கு செய்ததும்.

ஒரு பெண்ணிற்கு பிறந்த வீட்டிற்கு வந்து போகும் சுதந்திரம் அவளது புகுந்த வீட்டாரின் முடிவை சார்ந்தது மட்டும் அல்ல, அவளது பிறந்த வீட்டில் வாழ வரும் பெண்ணைப் பொருத்துமே அமையும். அப்படி ஒரு பெண் கிட்டினால் மட்டுமே ஒரு அந்த பெண் நல்லபடியாக தன் தாய்வீடு சென்றுவர முடியும். இவை எல்லாம் மாலதி உணர்ந்தபோது காலம் அவள் கையில் இல்லை. மன்னிப்பு கேட்க நினைத்தபோது மாலதியும் விமலாவும் கண்கொண்டு பார்க்கக் கூட முடியாத அளவு விலகிப் போயிருந்தனர். மாலதிக்கு என்றாவது ஒரு நாள் தன்னை அரிக்கும் இந்த தப்பை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிட்டுமா? அந்தக் கடவுளுக்கு மட்டுமே வேண்டும்.

“தோழிகளே! தோழர்களே! நம்மில் பலர் மேற்கண்டாற் போலவோ, அல்லது இதற்கு மேலோ கண்டிருக்கலாம், அல்லது அனுபவித்திருக்கலாம். ஆனால், இலைமறை காயாக நடைபெறுவதால் பெரும்பாலும் வெளியே தெரியாமலேயே இருந்துவிடுகின்றன. சில பெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் வேண்டும் என்று நினைக்கும் சுதந்திரத்தில் பாதி கூட தான் வாழ வந்த வீட்டில் பிறந்த பெண்ணுக்கும் கொடுக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. அதனை சொல்லவே இந்த பதிவு. ஆனால், இதையெல்லாம் தாண்டிய தோழமையுடன் பழகுபவர்களும் உள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.