(Reading time: 12 - 23 minutes)

மிஷன் மைசூர்பா(க்) - ஜெய்

Mysorepak

ன்னடா ஜில்ஸ்  காலைலேர்ந்து அதி தீவிரமா கம்ப்யூட்டர்லையே உக்கார்ந்து இருக்க?”, ஞாயிறும் அதுவுமாக காலை காப்பியைக் கண்ணில் காட்டிவிட்டு கணினியில் உட்கார்ந்த மனைவியைக் கேட்டபடியே வந்தான் ரவி.

“என்னை மட்டும் அரை மணி நேரத்துக்கு மேல எந்த எலெக்ட்ரானிக்ஸும் வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லுவ... இப்போ நீ மட்டும் மார்னிங் 7 லேர்ந்து இதோ இப்போ 10 வரைக்கும் யூஸ் பண்ற”, போர்க்கொடியைத் தூக்கியபடியே வந்தாள் அவர்களின் செல்ல மகள் வர்ஷினி.

“ஏண்டி நீயும், நானும் ஒண்ணா.... சும்மா compare பண்ணாத......”

“நீ மட்டும் என்னை பக்கத்து வீட்டு மாலுவோட compare பண்ற.....”

“சரி... சரி... அம்மாவும், பொண்ணும் காலைலேயே ஆரம்பிக்காதீங்க.... breakfast பண்ற வேலையைக் கூட விட்டுட்டு அப்படி என்ன பார்த்துட்டு இருக்க ரதி.....”

“தீபாவளிக்கு ஏதானும் புதுசா பண்ணலாம்னுதாங்க.... எப்பவும் அதே அதிரசம் பண்ணிப் பண்ணி போர் அடிக்குது..... அதுவும் உங்க அம்மா மாவு ரெடி பண்ணிக் கொடுத்துடுவாங்க... எனக்கு வெறும் பொரிச்சு எடுக்கற வேலைதான்.  இதுல எங்க இருந்து என் திறமையைக் காட்ட....”, ரதியின் திறமையைக் காட்டுவதா என்று  அதிர்ச்சியாகி அப்பாவும், பொண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.  

நம் ரதியின் சமையல் திறன் அத்தனை பிரசித்தி வாய்ந்தது.  ஒரு முறை அவள் சமைத்ததை எப்படி இருக்கிறது என்று கேட்க...  ரவியும், வர்ஷிணியும் ரசம் நன்றாக இருப்பதாகக் கூற... டென்ஷனாகிவிட்டாள் ரதி.  ஏழெட்டு ப்ளாக்ஸ் பார்த்து அதில் நாலை வடிகட்டி, நாலில் இருந்தும் ஒரு ஒரு ரெசிப் எடுத்து அதைக் கலந்து கட்டி சாம்பார் வைத்தால், அதை ரசம் என்பதா.... ரதி நெற்றிக்கண்ணை திறக்க...... ‘இல்லடா அதுல பருப்பே இல்லையா... அதுதான் ரசமோ அப்படின்னு நினைச்சுட்டேன்’, என்று சமாளித்தான் ரவி.... ‘அது பருப்பு போடாத சாம்பார்... புதுசா பண்ணலாம்னு பண்ணினா கொஞ்சம் கூட உங்களுக்கு ரசனையே இல்லை’, என்று  விடாமல் ஒரு வாரம் காய்ச்சி எடுத்தாள் ரதி.   அதன்பிறகு உஷாரான ரவியும், வர்ஷிணியும்... உணவின் பெயரை  தவிர்த்து நன்றாக இருப்பதாக மட்டும் சொல்லி வந்தார்கள்.  இதில் அவ்வப்போது புதுமையாகக் பண்ணுகிறேன் என்று படு கொடுமையாக எதையாவது செய்து அவர்களை படுத்தி வந்தாள்.

“ஏங்க உங்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்ன்னு சொல்லுங்க.... அதையே இந்த வருஷம் பண்ணிடலாம்...”, ரதி கேட்க..... அப்பா அப்படி எதுவும் சொல்லிடாதீங்க என்று கெஞ்சுதலாக ரவியைப் பார்த்தாள் வர்ஷினி.

“நீ என்ன பண்ணினாலும் நான் சாப்பிடுவேன் ரதி.... ஆனா உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திக்கற... எப்பவும் போல அதிரசமே பண்ணிடேன்.....”, தாங்கள் அவளின் சமையல் படுத்தலிலிருந்து தப்பிக்க ஆலோசனை கூறினான் ரவி.

“இல்லைங்க.... நான் முடிவு பண்ணிட்டேன்... இந்த முறை அதிரசம் கிடையாது.... உங்கக்கிட்ட கேட்டா நீங்க சொல்ல மாட்டீங்க... நான் அத்தைக்கு ஃபோன் பண்ணிக்கேட்டுக்கறேன்”

“ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க.... மாமா எப்படி இருக்காரு.....”

“நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் ரதி.... நீங்க எப்படி இருக்கீங்க... வர்ஷினிக்குட்டி கிளாஸ்க்கு போயிடுச்சா”

“இன்னைக்கு அவளுக்கு கிளாஸ் இல்லை அத்தை.... நீங்க தீபாவளிக்கு இங்க வர டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா”

“இல்லைம்மா இங்க உங்க மாமாவோட ஒண்ணு விட்ட அண்ணன் குடும்பம் வர்றாங்க.... அவங்க நம்ம வீட்டுலதான் ஒரு வாரம் தங்கப்போறாங்க... நேத்துதான் ஃபோன் வந்துச்சு.  அதனால நாங்க வரலை.....”

“என்ன அத்தை இப்படி சொல்லிட்டீங்க.... இவருக்கும் லீவ் போடமுடியாதுன்னு சொல்லிட்டாரு.  இல்லைனா எப்பவும் போல நாங்களாச்சும் அங்க வந்திருப்போம்.....”

“என்ன பண்ணம்மா வராதவங்க வரேன்னு சொல்லும்போது ஒண்ணும் சொல்ல முடியலை...”

“சரி அத்தை.... நான் எதுக்கு ஃபோன் பண்ணினேனா.... உங்க பையனுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும் அத்தை.... அவரைக் கேட்டா சொல்ல மாட்டேங்கறாரு.....”

“பொதுவா எல்லாமே சாப்பிடுவான்மா.... ஆனா மைசூர்பாகுன்னா ரொம்பப் பிடிக்கும்....”, இந்த முறை ரதியே இந்தப் பெயரைக் கேட்டு கொஞ்சம் அதிர்ச்சியானாள்.  மிக நன்றாக சமைப்பவர்க்கே மைசூர்பாக் வேலை காட்டும்.... இதில் தன்னால் எப்படி முடியும்.....

“அது பண்றது ரொம்பக் கஷ்டம் இல்லை அத்தை..... அதைத் தவிர வேற என்ன அவர்க்கு பிடிக்கும் அத்தை....”

“கஷ்டமே இல்லைமா.... சரியான அளவு கடலை மாவு, சக்கரைலாம் போட்டேனா.... நொடில பண்ணிடலாம்.... நீதான் கம்ப்யூட்டர் பார்த்து ஏதோ புதுசு புதுசா எல்லாம் பண்றேன்னு ரவி சொன்னான்.... அப்பறம் என்ன... எல்லாம் ஈஸியா பண்ணிடுவ.... சக்கரை பாகு பதம் மட்டும் சரியா பார்த்துக்கோ.... ஒரு கம்பிப்பதம் வந்த உடனே வறுத்த மாவைக் கொட்டி கிளற ஆரம்பிச்சுடு.....  சரிம்மா வாசல்ல யாரோ வந்திருக்காங்க... நான் போய்ப் பாக்கறேன்.... அளவு எல்லாம் உனக்கு நான் watsappல அனுப்பி விடறேன்.... அதும்படியே போட்டேன்னா கரெக்டா வந்துடும்...”, என்று கூறி தொலைபேசியை வைக்க..... யோசித்தபடியே வந்து அமர்ந்தாள் ரதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.