(Reading time: 13 - 25 minutes)

இது என்னுடைய காதல் கதை....! – பிந்து வினோத்

Love story

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ன் மன்னன் எங்கே, என் மன்னன் எங்கே... நீ கொஞ்சம், சொல்வாயோ...!

எங்கேயோ ஒலித்த பாடல் கேட்டு என் காதை பொத்திக் கொண்டு, எதிரே இருந்த கண்ணாடியில் என்னை பார்த்தேன்...

கொஞ்சம் பூசின உடல் வாகு... வட்ட முகம்... சராசரி உயரத்திற்கு கொஞ்சம் குறைவான உயரம்...! மாநிறம்....!

பழைய பாடல் தான் என்றாலும், சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த பாடலை கேட்டாலே என் மனம் அதன் பாட்டில் கனவுலகிற்கு பறந்து சென்று விடும். என் அக்காவின் திருமணம் முடிந்து, ‘உனக்கு ரூட் கிளியர் ஆகிடுச்சு’ என்று உறவினர்கள் சொன்னதைக் கேட்டு 4ஜி வேகத்தில் தொடங்கிய கனவு அது...!

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது என்பதால், திரைப்படங்களில் வருவது போல கல்லூரியில் என் ‘மன்னன்’ இருக்கிறானா என்று எத்தனையோ நாள் நோட்டம் விட்டிருக்கிறேன்... ‘என் மன்னன்’ அப்படியே அங்கே இருந்தாலும் கூட அவனை எப்படி தெரிந்துக் கொள்வது??? ஏதேனும் அறிகுறி தெரியுமோ???? ஹுஹும்... எப்படி பார்த்தும் ஒரு பயனும் இல்லை. ஒரு அறிகுறியும் தென்படவில்லை!

அதற்காக  நான் படிக்காமல் எல்லாம் இல்லை... அது அதன் பாட்டில் சரியாக தான் சென்றது.... அதன் கூடவே ‘கொசுறாக’ தான் இந்த ‘மன்னன்’ பற்றிய கனவுகள்...

நாட்கள் ஓட, கல்லூரி படிப்பும் முற்று பெற்றது.... நான் ஒரு பக்கம் வேலை தேட, என் பெற்றோர் எனக்கு கல்யாணத்திற்கு வரன் தேடும் வேலையை தொடங்கினார்கள்.....

அவ்வளவு தான், கேட்கவா வேண்டும்! பிரித்திவிராஜ் – சம்யுக்தா ஸ்டைலில் என் கனவு கதாநாயகன் என்னை தேடி வர போகிறான் என்று பல பல கனவுகளுடன் காத்திருந்தேன்...!

சென்னையிலேயே ஒரு ஐடி நிறுவனத்தில் எனக்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்த நேரம், முதன் முதல் பெண் பார்க்கும் படலம் ஏற்பாடானது...!

என்னுள் எழுந்த பரபரப்பை அடக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது...!

வந்தவர்கள் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு,

“உங்க பெரிய பொண்ணை மாதிரி இருப்பான்னு நினைச்சோம்... குண்டா இருக்காளே... கலரும் கம்மி... தெரிஞ்சிருந்தா, உங்க மூத்த பொண்ணுக்கே என் தம்பியை பேசி இருந்திருக்கலாம்....” என்றார்கள்.

என் காது பட சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் என் மீது அமிலமாக விழுந்தன.... என் சுய மரியாதையை இழந்து விட்டது போன்ற ஒரு உணர்வு...

என் தோற்றத்தை வைத்து சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை எனக்கு எடுத்து சொல்லியது... என்னை போன்ற குண்டு சம்யுக்தாவை தேடி கம்பீரமான ப்ரித்திவிராஜ் வர மாட்டார் என்று புரிய தொடங்கியது...

என்ன தெரியும் இவர்களுக்கு என்னை பற்றி? சற்றே குண்டாக இருப்பது இமாலய குற்றமா???

தன் பின்.... போட்டோவை பார்த்து பிடிக்கவில்லை என்று நிராகரித்தவர்கள் சிலர்... பொண்ணு சுமாரா தான் இருக்கா, அதுக்கும் சேர்த்து கொஞ்சம் கூடுதலா நகை போடுவீங்களா என்று பேரம் பேசியவர்கள் சிலர்...

வெறுத்து போனது....!

என்னையும் மீறி என்னுள் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை மெல்ல உருவாக தொடங்கியது... ஆனால் என் அறிவு சரியான நேரத்தில் விழித்துக் கொண்டு எச்சரிக்கை மணி அடிக்க, சுதாரித்துக் கொண்டு மனதை கட்டுப்படுத்தி அந்த கசப்பான நினைவுகளை ஒரு ஓரமாக தள்ளினேன்....

இவர்கள் யார் என்னை பற்றி பேச, எனக்கு எந்த மன்னவனும், நல்லவனும் வேண்டாம்...!

முடிவு செய்து விட்டு வேலையில் என் முழு கவனத்தையும் திருப்பினேன்... அதற்கு பலனாக வேலையில் சுறுசுறுப்பாக முன்னேற்றம் காண தொடங்கினேன்.

ஆனால் நான் முடிவு செய்து விட்டால், என்னை பெற்றவர்கள் விட்டு விடுவார்களா என்ன? அவர்கள் பாட்டிற்கு என் திருமண ‘மிஷனை’ (mission) தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

அது ‘மிஷன் இம்பாசிபிள்’ என்ற நம்பிக்கையில் நானும் கண்டுக் கொள்ளாமல் இருந்தேன்.

ருநாள் என் அப்பா ஒரு புதிய ‘லேட்டஸ்ட் மாடல்’ குண்டை தூக்கி போட்டார்... இன்னுமொரு பெண் பார்க்கும் படலம்....! ஆனால் இந்த முறை வருபவனின் படிப்பும், வேலையும் சுமார் தான்...!

அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த இயலாமை & கோபம் பொங்கி எழ, சீறினேன்...

“எப்படியாவது உங்களுக்கு என்னை எங்கேயாவது தள்ளி விட்டுடனும், அவ்வளவு தானே?”

பதிலுக்கு என் அப்பாவும் பொங்கி எழுந்தார்....

“என்ன பேசுற நீ? தினம் உன்னை நினைச்சே எனக்கு எவ்வளவு டென்ஷன்னு உனக்கு தெரியுமா? உனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடக்குற வரைக்கும் நாங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்?”

அவருக்கு என்னை நினைத்து டென்ஷனாம்! அவர் ஏற்பாடு செய்யும் இந்த பெண் பார்க்கும் படலங்கள் என்னுடைய சுய மரியாதையை குறைப்பதை அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.