(Reading time: 13 - 25 minutes)

நான் கேள்வியாய் பார்க்க,

“முக்கியமா எதுவோ சொல்ல தானே என்னை தேடி வந்திருக்கீங்க, சொல்லுங்க....” என்றான்.

எங்கே தொடங்குவது, எப்படி சொல்வது என்று நான் மீண்டும் யோசிக்க,

“யாரையாவது லவ் செய்றீங்களா? அதை சொல்ல தான் வந்தீங்களா?” என்று கேட்டு என்னை திகைக்க வைத்தான்.

திகைப்பை மறைத்து, அவனை பார்த்து நேராக நான் கோபமாக முறைக்க,

“இல்லைங்க, இது வரைக்கும் மூணு பேர் லவ் செய்றேன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டாங்க.... இரண்டு பேர் என்னை பிடிக்கலைன்னு நேராவே சொல்லிட்டாங்க.... நீங்க என்ன சொல்லி எஸ்கேப் ஆக போறீங்க?” எனக் கேட்டான் அவன்.

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“அஞ்சு பேருக்கே இவ்வளவு பீல் செய்றீங்களே.... அப்போ நான் என்ன சொல்றது?” என்றேன் அவனை தேற்றும் வண்ணம்.

“உங்களுக்கு என்னங்க குறைச்சல்??? என்னை மாதிரி எதுவும் பிரச்சனை இருக்க மாதிரி தெரியலையே?”

நிஜமாகவே என் காதில் தேனருவி பாய்ந்தது... எத்தனை வருடங்கள் ஆகி விட்டது என்னிடம் குறையில்லை என்ற வார்த்தைகளை கேட்டு....!

தேனருவியின் ஜிலு ஜிலுவின் கூடவே என் அறிவும் விழித்துக் கொள்ள, எதிரில் அமர்ந்திருந்தவனை சமாதானப் படுத்துவது போல பேசினேன்...

“உங்களுக்கு மட்டும் என்ன குறைச்சல்??? நல்லா தானே இருக்கீங்க...!”

“கமான்! வயசானவங்களுக்கு வழுக்கை வந்தாலே தர்மசங்கடமா இருக்கும்...”

அவன் பேச்சை முடிக்க காத்திருக்காமல்,

“வழுக்கை இருக்கவங்க ஜீனியஸ்ன்னு சொல்வாங்க... அறிவாளிங்களா இருப்பாங்களாம் உங்களுக்கு தெரியாதா?” என்றேன் பட்டென்று!

என்னை போலவே அவதி பட்ட ஜீவன் என்பதையும் மீறி அவனின் வருத்தம் என்னை பாதிக்கின்றது என்பது எனக்கு புரிந்தது.

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமாம்ங்க...! மத்தபடியும் முடி இருக்கிறது இல்லாதது எல்லாம் சில சமயம் நம்மளை மீறின விஷயம்.... அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? யாரு தான் பர்பெக்ட்டா இருக்காங்கன்னு சொல்லுங்க.... எல்லோர் கிட்டேயும் நிறை குறை இருக்க தான் செய்யுது.... இப்போ நான் சப்பியா இல்லையா.... அது மாதிரி.....”

“என்னது நீங்க சப்பியா???? நல்ல ஜோக் போங்க....”

அவனை பார்த்து முறைத்தேன்.

“முறைக்காதீங்க....! சீரியசாகவே தான் சொல்றேன்...”

“ஹலோ, உங்களுக்காக நான் பேசினதுக்காக எனக்காக நீங்க பேசுறீங்களா?”

“ஓ! அப்போ, சும்மா எனக்காகன்னு தான் பேசுனீங்களா??? நான் கூட நிஜம்ன்னு ஒரு நிமிஷம் நம்பினேன்...”

“நம்பினதை மாத்த வேண்டாம் சார்.... நான் நிஜமா தான் சொன்னேன்...”

“நானும் நிஜமா தான் சொன்னேன்....”

“அப்படிங்களா சார்? நம்பிட்டேன்....”

“நிஜம் சுஜா...! என் கண்ணுக்கு நீங்க மிஸ் யூனிவர்ஸா தான் தெரியுறீங்க... உங்க எலகன்ஸ், மெஜஸ்டிக் லுக் எல்லாம் எத்தனை பேர் கிட்ட இருக்கு.... உங்க படிப்பு, இப்போ இருக்க பொசிஷன் எல்லாம் கேட்டு நான் திறந்த வாயை இன்னும் மூடலை.... இந்த யங் எஜில எத்தனை பேரால இதை அச்சீவ் செய்ய முடியும்? அது மட்டுமில்லாமல் இப்போ எனக்காக பேசினீங்க பாருங்க.... என்ன சொல்றதுன்னு தெரியலை... ஐ ஆம் கம்ப்ளிட்லி ஃப்ளாட்...”

“இப்போ இவ்வளவு பேசுறீங்க.... அப்புறம் ஏன் என்னை நேரா பார்க்க வேண்டாம்னு அப்பா கிட்ட சொன்னீங்க???”

என்னை நேராக ஒரு சில வினாடிகள் பார்த்தவன்,

“அது.... அது... வந்து... என்னை நேரா பார்த்தால் பிடிக்கலைன்னு சொல்லிடுவீங்களோன்னு பயமா இருந்தது.... எத்தனை தடவை தான் வலிக்காத மாதிரி நடிச்சு ரிஜக்ஷனை ஏத்துக்குறது சொல்லுங்க...” என்றான்.

“நல்லா பயந்தீங்க போங்க.... அதென்ன பார்க்காமலே கல்யாணத்திற்கு சம்மதிக்குறதுன்னு உங்க கூட சண்டை போட தான் கிளம்பி வந்தேன்..... நீங்க என்னடான்னா பழைய ப்ளாக் அண்ட் வைட் படம் ரேஞ்சுக்கு பீல் செய்து விட்டா அழக் கூட செய்வீங்க போலிருக்கு.... போனா போகுது பொழச்சு போங்க....”

என்னுடைய பேச்சை சகஜமாக எடுத்துக் கொண்டு புன்னகைத்தான் அவன்....

அது எனக்கு பிடித்திருந்தது....! நகைச்சுவை உணர்வு இல்லாத மனிதனுடன் வாழ்வதை பற்றி என்னால் யோசித்து கூட பார்க்க முடியாது....!

என்னது வாழ்வதா??? ‘ஜீரோ’வுடன் வாழ்வதா? ஏன் அப்படி தோன்றியது?

என் கேள்வியை தெரிந்துக் கொண்டவனை போல பேசினான் சரவணன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.