(Reading time: 12 - 23 minutes)

ன்னடா எதுக்கு தடுக்கற......”, ரவி மீண்டும்  எடுக்கப் போக, வர்ஷினி முகம், கை, கால் என்று அத்தனை பாகங்களிலும் உணர்ச்சியைக் காட்டி அவனை சாப்பிட வேண்டாம் என்று தடுத்தாள்.

“என்னாச்சு ரதி.... ஏன் வர்ஷினி சைகைலையே பேசறா...”

“இல்லைங்க..... நான் இன்னைக்கு மைசூர்பாகு பண்ணினேனா.... மொதல்ல எல்லாம் நல்லாத்தான் வந்துச்சு...... நானும் வர்ஷு வந்த உடன அவளுக்கு கொடுத்தேனா.....”

“என்ன ஆச்சு... எதுக்கு இப்படி மென்னு முழுங்கற..... சீக்கிரம் சொல்லு.....”

“இல்லைங்க அளவெல்லாம் கரெக்டாத்தான் போட்டேன்... எங்க மிஸ் ஆச்சுன்னு தெரியலை.... அவ வாய்ல போட்டு மென்னதுதான் அப்பறம் அவ வாயைத் திறக்கவே முடியலை.... நல்லா ஒட்டிக்கிச்சு....”

“அடிப்பாவி இப்படியா ஒரு ஸ்வீட் பண்ணுவ.... நாலு மணிலேர்ந்து ஏழு மணி வரைக்கும் இவ இப்படியே இருக்காளா..... உன்னை என்ன பண்ண....”, கடுப்பாய்க் கத்திய ரவி, வர்ஷினியை அழைத்து சென்று சிறிது சிறிதாக வெந்நீரை அவள் வாயில் ஊற்றி ஒரு வழியாக அந்த மைசூர்பாகு கோந்தை வெளியில் எடுத்தான்.

இத்தனை கலாட்டா நடந்தும் ரதி திருந்தவில்லை..... ஒரு இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்தவள் மறுபடி மைசூர்பாகு கிண்டலை ஆரம்பித்தாள்.  இந்த முறை பாத்திரம் சரியில்லை, என்று கடைக்கு சென்று புதியதாக ஒரு பெரிய வெண்கல உருளியை வாங்கி வந்து கிண்டலை ஆரம்பித்தாள்.

இந்த முறை பதம் வருவதற்கு முன்பே மாவைக் கொட்ட, அது கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கிண்டியும் பாயசப் பதத்திலேயே இருந்தது.  அன்று இரவு ரவிக்கும், வர்ஷினிக்கும் கடலை மாவு கஞ்சி என்ற புது item கிடைத்தது.

அவளும் விடாமல்   விக்ரமாதித்ய வேதாளமாக முயல கடலை மாவு கஞ்சி, கடலை மாவு பூரி, கமர்கட் என்று வித விதமாக வந்ததேத் தவிர மைசூர்பாகு மட்டும் வரவே இல்லை......

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் வாட்ஸ்ஆப், Facebook-ல் அவளின் மைசூர்பாகு ஃபோடோவைப் பார்த்த ரதியின் தோழிகள், எப்பொழுது அதை அவள் அவர்கள்  கண்ணில் காட்டப் போகிறாள் என்று கேட்க.... ரதிக்கு மானப் பிரச்சனை ஆகிவிட்டது....

இன்று எப்படியேனும் சரியாக பண்ணியே  ஆகவேண்டும் ஆரம்பிக்க...... காலையில் கிளற ஆரம்பித்து கஞ்சியாக இருந்தது..... மதியம் அல்வாவாக மாறி... மாலைக்குள் ஒரு மாதிரி கேக் பதத்திற்கு வந்தது..... இந்த முறை உஷாராக சிறு துண்டு மட்டும் வெட்டி சாப்பிட சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட வந்தது..... இதை இப்படியே வைத்து ஒப்பேத்தி விடலாம் என்று நினைக்க மாலையில் கேக்காக இருந்தது, இரவு ஆவதற்குள் கருங்கல்லாக மாறியது....  தட்டிலிருந்து எடுக்க ட்ரை பண்ண, அது காதலனைப் பிரிய மறுக்கும் காதலியைப் போல தட்டை விட்டு வரமாட்டேன் என்று அடம் பிடித்தது...... இரண்டு கத்தி, ஒரு சுத்தியல், பெரிய தட்டு உடைந்ததுதான் மிச்சம்....

இத்தனை முயன்றும் வரவில்லையே நாளை வரும் தோழிகளுக்கு எதைக் கொடுக்க என்று கலங்க ஆரம்பித்து விட்டாள் ரதி..... ரவிக்கும், வர்ஷினிக்கும் அவளைப் பார்க்க பாவமாகிவிட்டது.....

“அப்பா நீங்க அம்மாவைக் கூட்டிட்டு வாக்கிங் போயிட்டு வாங்க..... வெளிய போனா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க.....”, என்றுக் கூறி பெற்றோரை வாக்கிங் அனுப்பினாள்.

வாக்கிங் சென்று வந்தபின்னும் இரவு முழுவதும் ரதியின் புலம்பல் தொடர்ந்தது.

மறுநாள் மாலை ரதியின் தோழிகள் வர, அவர்களை வரவேற்று ஜூஸைக் கொடுத்து பேசிக்கொண்டிருந்தாள்.  அவர்கள் மைசூர்பாகைப் பற்றி பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் வேறு வேறு டாப்பிக்கிற்கு மாறி அவர்களை திசைத் திருப்பினாள்.

“என்ன ரதி இது..... எல்லாம் பேசறியேத் தவிர, உன் மைசூர்பாகைத் தர மாட்டேங்கறியே.....”, என்று கேட்க...., ‘அது வந்து’, என்று ரதி மழுப்பலாக ஆரம்பிக்க.... ‘ஒரு நிமிஷம் ஆன்ட்டி’, என்று உள்ளே சென்ற வர்ஷினி, பொன் வண்ணத்தில் மிளிர்ந்த மைசூர்பாகுகளை அழகாக தட்டில் அடுக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை சாப்பிட்ட அவளின் தோழிகள் அவளைப் புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.  இப்படி ஒரு மைசூர்பாகை அவர்கள் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு தோற்றுவிட்டது என்று ஒரே புகழாரம்.  ரதி மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் ஒரு மாதிரி அசட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.  ஒரு வழியாக ரதியின் தோழிகள் கிளம்பினார்கள்.

“வர்ஷினி, எங்க இருந்துடி இந்த மைசூர்பாகு வந்துச்சு..... நான் பண்ணினதுதான் நேத்து தட்டைவிட்டே வரலையே..... தட்டோட தூக்கி இல்லை குப்பைத்தொட்டில போட்டோம்”

“உங்க friends சொன்ன அதே கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லேர்ந்துதான்மா வாங்கிட்டு வந்தேன்.  நேத்து நீங்க புலம்பின புலம்பல் தாங்கலை.... நீங்க அந்தப் பக்கம் வாக்கிங் கிளம்பின உடன நான் இந்தப்பக்கம் கடைக்குப் போய் வாங்கிட்டு வந்து வச்சுட்டேன்”

“ரொம்ப தேங்க்ஸ்டி வர்ஷுக்குட்டி... என் மானத்தைக் காப்பாத்திட்ட.... உனக்கு என்ன வேணும் சொல்லு... அம்மா இப்போவே கடைக்கு கூட்டிட்டுப்போய் வாங்கித் தரேன்”

“அம்மா எனக்கு எந்த கிஃப்ட்டும்  வேணாம்.... ஆனா அதுக்குப் பதிலா நீங்க ஒரே ஒரு ப்ராமிஸ் பண்ணனும்.... இனிமே புதுசா எந்த ஸ்வீட்டும் பண்ண மாட்டேன்னு மட்டும் ப்ராமிஸ் பண்ணுங்க போதும்...... இந்த ரெண்டு வாரமா நானும், அப்பாவும் பட்ட கஷ்டம் இனிப் பட முடியாது.....”, என்று கூற, அசடு வழிந்தபடியே தலையாட்டினாள் ரதி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.