(Reading time: 12 - 23 minutes)

ன்ன ரதி, அம்மாட்ட பேசிட்டியா... எப்படி இருக்காங்க.... டிக்கெட் புக் பண்ணிட்டாங்களாமா.....”

“இல்லைங்க உங்க பெரியப்பா ஊருல இருந்து வர்றாங்களாம்.... நம்ம வீட்டுலதான் தங்கப்போறாங்களாம்..... அதனால வரலைன்னு சொல்லிட்டாங்க”

“ஓ என்னாலையும் லீவ் எடுக்க முடியாது.... வேணும்ன்னா தீபாவளி அன்னிக்கு சாயங்காலமா கிளம்பிப் போகலாம்.....”

“ஹ்ம்ம் சரிங்க.... சரி நீங்க குளிச்சுட்டு கிளம்புங்க.... எனக்கு கடைலேர்ந்து கொஞ்சம் சாமான் எல்லாம் வாங்கணும்.....”

“ஏம்மா ரெண்டு நாள் முன்னாடிதானே போய் லிஸ்ட் கொடுத்து சாமான் வாங்கிட்டு வந்தோம்... அதுக்குள்ள காலி ஆகிடுச்சா.....”

“இல்லைங்க.... அத்தை உங்களுக்கு மைசூர்பாகு பிடிக்கும்ன்னு சொன்னாங்க.... அதையே தீபாவளிக்கு பண்ணிடலாம்ன்னு நினைச்சேன்.....”, என்று ரதி கூற, ‘ஆ அம்மா  வச்சு செஞ்சுட்டீங்களே’, என்று மைன்ட் வாய்ஸில் புலம்பினான் ரவி.

“அது சின்ன வயசுல ரதி.... இப்போலாம் எனக்கு ஸ்வீட்டே பிடிக்கறதில்லை..... உனக்குதான் தெரியுமே.......”

“சும்மா சொல்லாதீங்க..... எனக்கு கஷ்டம்ன்னுதானே நீங்க இப்படி சொல்றீங்க.....”, ‘உனக்கு இல்லைடி.... எனக்கும் என் பொண்ணுக்கும்தான் கஷ்டம்.....’,மீண்டும் மைன்ட் வாய்ஸில் ரவி.

“சரிம்மா... தீபாவளிக்குதான் இன்னும் ரெண்டு வாரம் இருக்கே.... அதுக்கு இன்னைக்கே எதுக்கு சாமான் வாங்கப் போகணும்....”

“என்னங்க புரியாமப் பேசறீங்க.... எப்பவுமே ஸ்வீட் எல்லாம் பெரிய லெவெல்ல பண்றதுக்கு முன்னாடி சின்ன லெவெல்ல பண்ணிப் பார்க்கணும்ங்க....”,ரதி சொல்ல, இருக்கும் மூணு பேருக்கு பண்ணுவதில் பெரிய லெவல் என்ன, சின்ன லெவல் என்ன என்று புரியாமல் பார்த்தான் ரவி.

“என்ன புரியலையா... இப்போ தீபாவளிக்கு ஒரு ரெண்டு கப் போட்டு பண்ணப்போறோம்னு  வைங்க.... முன்னாடி ட்ரயல்க்கு ஒரு அரை கப் போட்டு சரியா வருதான்னு பார்க்கணும்.... ½ கப்  சரியா வந்துடுச்சுன்னா அப்போ 2 கப்பும் சரியா வந்துடும்”, என்று ரதி கூற... உன் லாஜிக்கில் தீயை வைக்க என்று பொருமினான் ரவி.

ரவியும் எத்தனயோ விதமாகத் தடுத்தும் தான் மைசூர்பாகு பண்ணியே தீருவேன் என்று தீர்மானித்து விட்டதாகக் கூறி அவனை கடைக்குக் கிளப்பினாள் ரதி.

“ஏம்ப்பா உங்களுக்கு இந்த கமர்கட்,  வேர்கடலை உருண்டை இப்படி எல்லாம் பிடிச்சிருக்கக்கூடாதா.... அம்மா அப்படியே கடைலேர்ந்து வாங்கி வச்சுருப்பாங்க... இப்போ பாருங்க உங்களோட சேர்ந்து நானும் மாட்டிக்கிட்டேன்”,வர்ஷினி ரவியிடம் புலம்பினாள்.

இப்படியாக ரதியும், ரவியும் கடைக்கு சென்று சாமான்களை வாங்கி வர, மறுநாள் திங்களன்று நல்ல நேரம் பார்த்து மிஷன் மைசூர்பாகை ஆரம்பித்தாள் ரதி.

தன் மாமியார் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி இருந்த அளவுமுறையை ஒரு இருவது முறைப் படித்து மனனம் செய்த ரதி..... எதற்கும் இருக்கட்டும் என்று பெரிய சார்ட் பேப்பரில் கொட்டை எழுத்தில் எழுதி  அடுப்பிற்கு நேரே ஒட்டிவிட்டாள்.

கடலை மாவை நெய்யில் வறுத்து தனியாக வைத்து, அடுப்பில் சர்க்கரை பாகு காய்ச்ச ஆரம்பிக்க, சனி சர்க்கரை உருவில் வந்தார். 

அரை கப் சர்க்கரை அளவு என்று கூறி இருந்த மாமியார் அதற்கு தண்ணீர் அளவுக் கூறாததால்.... சாதம் வடிப்பதுபோல் ஒன்றுக்கு இரண்டு என்று  தாராள மனப்பான்மையுடன் 1 கப் தண்ணீரை விட்டு பாகு காய்ச்ச ஆரம்பிக்க அது பதம் வருவேனா என்று ஆட்டம் காட்டியது.... ஒரு வழியாக அடுப்பை Low Flame, High Flame, Medium Flame என்று மாற்றி மாற்றி வைத்து கொஞ்சம் கடின பதத்திற்கு கொண்டு வந்தாள்.  இப்பொழுது கையில் எடுத்து பார்க்க அது ஒரு கம்பிக்கு பதிலாக, ஏழெட்டு  கம்பிப் பதம் காட்ட... இன்னும் வரவில்லைப் போல என்று திரும்ப காய்ச்ச ஆரம்பிக்க, ரதி காய்ச்சிய காய்ச்சலில் சர்க்கரைத் தண்ணி மீண்டும் சர்க்கரையாக உருப்பெற்றது....

உடனடியாக அவள் அம்மாவிற்கு அழைத்துக் கேட்க அவர், ஒன்றும் பிரச்சனை இல்லை மீண்டும் தண்ணீர் விட்டுக் கலந்தால் சர்க்கரைப் பாகு வந்துவிடும், ஆனால் தண்ணீர் மிகக் குறைந்த அளவில் விடும்படிக் கூற, அதைப்போலவே விட்டு இந்த முறை பாகு சிறிது திக் ஆனவுடன் கடலை மாவைக் கொட்டி கிளற ஆரம்பித்து விட்டாள்.  ஸ்வீட்டும் ஒரு மாதிரி திரண்டு வர அதைத் தட்டில் கொட்டி வில்லைகள் போட ஆரம்பித்தாள்.  அவள் செய்தவுடன் வில்லைகள் போட்டதால் மிக நன்றாக வந்தது மைசூர்பாகு.... உடனே தன் அத்தை, அம்மா எல்லாருக்கும் அழைத்து தன் பிரதாபத்தைக் கூற... அவர்களும் அவளைப் பாராட்டினார்கள்.  போதாத குறைக்கு அவளின் மைசூர்பாகு வாட்ஸ்ஆப்பிலும், ஃபேஸ்புக்கிலும் படங்களாக வலம் வந்தது.   

ஏழு மணிப்போல வீட்டிற்கு வந்த ரவிக் கண்டது எதிரெதிர் ஸோபாவில் ஒருவரையொருவர் முறைத்தபடி அமர்ந்திருந்த அம்மாவையும், பெண்ணையும்தான்.

“என்ன ஆச்சு...... டெஸ்ட் எதுலயானும் கம்மி மார்க் வாங்கிட்டு அம்மாக்கிட்ட திட்டு வாங்கினியா வர்ஷுக்குட்டி.....”, கேட்ட தந்தையை முறைத்தாள் வர்ஷினி.

“என்ன ஆச்சு ரதி.... ஏன் ரெண்டு பேரும் இப்படி முறைச்சுட்டு இருக்கீங்க”, ரவி கேட்க, ரதி கண்ணால் தங்கள் எதிரில் இருந்த தட்டை காண்பித்தாள்.

“அட... அதுக்குள்ள பண்ணிட்டியா.... பார்க்கவே சூப்பரா இருக்கே....”, என்று ஒரு ஸ்வீட்டை எடுக்கப் போக பாய்ந்து வந்து தடுத்தாள்  வர்ஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.