(Reading time: 3 - 5 minutes)

சிறுகதை - மெய்நிகர் - அதுரா

Virtual

"தற்காக நான் இங்கே உட்கார்ந்து இருக்கிறேன், இங்கே எப்படி வந்தேன்" என்று எண்ணிக்கொண்டே சுற்றிலும் வேகமாக பார்வையை செலுத்தினான் குமார். திறந்த புல்வெளி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள், தூரத்தில் நாயுடன் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, பதினைந்து நிமிடத்தில் மறையப் போகும் சூரியன், பறவைகளின் சத்தம் - அனைத்தும் ஒரு நொடியில் மூளைக்குள் சென்று தலை வலித்தது. தலையில் கையை வைத்துக்கொண்டு எழுந்தான்.

கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தான், மணி ஆறு. காலையில் அரசு பள்ளியில் பணித்தேர்வுக்கு சென்றது நினைவில் இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு எண்ணினான். பின் நடந்தது எதுவும் நினைவில் இல்லை. அலைபேசியை எடுத்து தேதியை பார்த்தான், 24-12-20-------51. "வாய்ப்பே இல்லை" தேதி ஏன் தவறாக காட்டுகிறது என்று யோசித்தான். சரி பார்த்தான், வலைத்தள நேரம் பிழையாக வாய்ப்பு இல்லையே என்று யோசித்தான். தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நோக்கி நடந்தான்.  

"பாப்பா, இங்கே தனியாக  என்ன செய்கிறாய், உன்னுடன் யாரும் இல்லையா" என்றான். "நீங்கள் இருக்கிறீர்களே!" பளிச்சென்று பதில் வந்தது. "உன் பெயர் என்ன?" என்றான். பதிலை எதிர் பாராமல் "இன்று என்ன தேதி தெரியுமா?" என்றான்.

"பெயர் வேண்டுமா? தேதி வேண்டுமா? பெயர் மீனா, தேதி 24- டிசம்பர்" என்றது குழந்தை. "வருடம்?" என்றான், "2025" என்றது குழந்தை.

தனக்கு நினைவில் இருந்த தேதியை குழந்தை கூறியவுடன் தனக்குள் சிரித்துக்கொண்டான். "இங்கிருந்து எப்படி வெளியே செல்வது?" என்றான்.  "எனக்கு தெரியவில்லை.. நான் வெகு நேரமாக இங்கே இருக்கிறேன், ஒரு சில மணி நேரம் முன்பு இந்த நாய் வந்ததது.. சற்று முன் நீங்கள் வந்தீர்கள்" என்றது குழந்தை. 

"வந்தேன் என்றால்... எந்த வழியாக வந்தேன் என்று பார்க்கவில்லையா?" என்றான் குமார். "நான் பார்க்கும் பொது நீங்கள் அமர்ந்து இருந்தீர்கள்" என்றது குழந்தை. சுற்றியும் பார்த்தான் பரந்த புல்வெளி தவிர வேறு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும் இருட்டாகி இருந்தது. ஒரு மனதாக முடிவு எடுத்து நடக்க தொடங்கினான். சில அடி எடுத்து வைத்து விட்டு, ஏதோ யோசித்தவனாக திரும்பி பார்த்தான். நாய் நின்று கொண்டு இருந்தது, குழந்தையைக் காணவில்லை. மேலும் இருட்டியது, குழந்தையைத் தேடுவதா என்று யோசித்தான், இருட்டும் முன் வழியைக் கண்டுபிடிப்பது அவசியம் என்று தோன்றியது. திரும்பி நடக்க தொடங்கினான்.

பீப்... பீப்... பீப்... கண்ணில் மின்னல் வெட்டுவதை போல் ஒரு ஒளியை உணர்ந்தான்.

கண்ணை திறந்து பார்த்தான், கணினிகள் சூழ்ந்த அறை, தலையில் அணிந்திருந்த இயந்திரத்தை கழட்டினான். அழகிய பெண்ணின் குரல் "மெய்நிகர் தோற்ற (Virtual  Reality) பணித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.."

காரணம்:

  1. குழந்தையின் பாதுகாப்பு குறித்து கவலையின்மை.
  2. சுய மையமாக நடந்து கொள்ளுதல்.

இந்த தேர்வு முடிவு மத்திய தகவல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்டது. உங்களது சிந்தனை செயல்முறை ஆசிரியர் பணிக்கு உகந்ததாக இல்லை. வேறு துறையில் முயற்சிக்கவும்."

கூடத்தை விட்டு குமார் வெளியேறினான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.