(Reading time: 2 - 4 minutes)

சிறுகதை - எதிர்மறை - அதுரா

city

வன் பேருந்தில் இருந்து இறங்கி மெதுவாக வீடு நோக்கி நடக்க தொடங்கினான். மூன்று ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்த போதிலும், அவன் நடையிலோ, முகத்திலோ உற்சாகம் இல்லை. ஏதோ ஒரு சோகம் அடி வயிற்றை புரட்டியது. தெரிந்தவர்கள் எவர் கண்ணிலும் பட்டு விட கூடாது என சுற்றிலும் பார்த்துக்கொண்டே நடந்தான். வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என்று எண்ணி நடையில் வேகத்தைக் கூட்டினான்.

அவனுக்கு நன்கு பழகிய இடங்களுக்கு பலவாறாக ஒப்பனைகள் செய்யப்பட்டிருந்த போதும், அவனது நினைவலைகளை தடுக்கவில்லை. நண்பர்களோடு விளையாடிய மைதானம், சாலையோர மரம், தான் பயின்ற தமிழ் வழிக்கல்லூரி, தோழிகளுடன் பொழுதைக்  கழித்த தேநீரகம் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டே நடந்தான்.

பின்னால் இருந்து யாரோ அவனை அழைப்பதை உணர்ந்து தன்னை அறியாமல் திரும்பினான். அவனது நண்பன்... ச்சே! வீடு செல்லும் வரை எவர் கண்ணிலும் படக்கூடாது என்று எண்ணினோமே என நொந்துகொண்டான்.

 "என்னடா 2034-ல் பார்த்தான், இப்பொது தான் ஊர்ப்பக்கம் வர நேரம் கிடைத்ததா?"  என்றான் அவன் நண்பன்.

இங்கிலாந்தில் பிறந்து இங்கே குடியேறிய தன் நண்பன் தமிழ் பேசுவது அவனுக்கு வியப்பளிக்கவில்லை.

"என் தமிழ் எப்டி?  நான்க்கும் நீ வேலை பார்க்கும் இடத்தில் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யேன்..." என்றான் நண்பன்.

அவன் நண்பனின் தமிழ்த் திறமையை வியந்து கொண்டே இரண்டு பெண்கள் கடந்து சென்றார்கள்.

"I am in a hurry... வீட்டுக்கு  போய்க்கொண்டிருக்கிறேன். will call..." என்று நண்பனை ஒருவாறாக சமாளித்துவிட்டு வீட்டுக்கு நடந்தான்.

கொஞ்ச தூரம் நடந்ததும் தன் வீட்டின் அருகில் வசிக்கும் பெரியவரை சந்திக்க நேர்ந்தது. நலம் விசாரித்த அவர் இவன் மாத வருமானம் பற்றி பேசத்தொடங்கினார். விட்டால் போதும் என்று தப்பித்து ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்தடைந்தான்.

அழைப்பு மணியை அழுத்தினான்.  கதவை திறந்த அவன் அன்னை, பாசமாக உள்ளே  அழைத்தாள்.

"Come in honey... we were missing you very badly... after all these years, finally you had some time to visit your mom...“ என்றாள்.

“Don’t start it all over again mom... Had enough of it over phone... Being born here in a small ஊர் like Houston in America... I have got a chance to work in 'Chennai' and to earn a lot more than I could ever do from here... You should be really proud of your son... I am hungry and need கொஞ்சம் food...” பல வருடங்களாக குறைவாகவே அவன் தாய் மொழியில் பேசி இருந்ததால், சற்று குளறலாகவே பேச்சு வந்தது.

வீட்டுக்குள் சென்றான் வில்லியம்.

பின்குறிப்பு: இக்கதைப்படி தமிழகம் பச்சை, நீலம், வெண்மை என அனைத்து நிறப்புரட்சிகளிலும் முழுமை அடைந்த ஆண்டு – 2030.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.