(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - முன்னாள்(ல்) காதலி! - ராகா

Mobile hearts

ர்செல் நெட்வொர்க்கில் 2000 த்தின் ஆரம்பத்தில் ' நீயும் நானும்' சிம் கார்ட் அறிமுகமானது என நினைக்கிறேன்.( இல்லை என ஆதாரத்துடன் சண்டைக்கு வரவேண்டாம்).

அந்த பேக்கில் ஒரு 'ஹார்ட்' படம் வரைந்திருக்கும். 45 என்று ஒரு நம்பர் முடிந்தால், அதற்கு அடுத்த நம்பர் 46 என்று முடியும். அந்த இரு நம்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ் ஃப்ரீ. எவ்வளவு பேசினாலும் ஃப்ரீ. இத்தனை கால், இத்தனை S.M.S என்ற கணக்கெல்லாம் கிடையாது.

காதலர்களுக்கு பிடித்த சிம் கார்ட் அது. காதலி இல்லாத பலரும் ( என்னைப் போல். கவனிக்க.) அந்த சிம் கார்டை வாங்கினார்கள். நூறு ரூபாய் என்று சொன்னால் வாங்கியிருக்க மாட்டேன். சிம் கார்ட் முற்றிலும் இலவசம். ஆக்டிவேட் செய்ய 50 ரூபாய். அதுவும் டாக்டைமாய் மொபைல் பேலன்ஸில் வரவு வைக்கப்படும்.

நானும், அசோக்கும் தான் அந்த சிம் கார்டை முதலில் வாங்கினோம். அப்போது நானும் , அவனும் ஒரே ஃபோன் Nokia 1100. சின்ன பின் சார்ஜர். உப்பிய பேட்டரி. என்னுடைய பேட்டரி, பேட்டரி கணெக்டரை விட்டு சற்று பின்னே நகர்ந்திருக்கும். ஒரு சிகரெட் அட்டையை சிறிதாக வெட்டி, பேட்டரியின் பின் பக்கத்தில் வைத்து பேக் டோரை போட்டு விடுவேன். ( கம்பெனி காரனுக்குத் தெரிந்தால் கடையை சாத்திக்கொண்டு ஓடிவிடுவான்.)

தீமிதி திருவிழாக்களில் விற்கப்படும், சிறுவர்களை வெகுவாக கவரும் 'வாக்கி டாக்கியை' போல தான் அதை நானும் , அசோக்கும் பயன்படுத்தி வந்தோம். பத்தடி தூரத்தில் இருந்துக் கொண்டு போனில் பேசிக்கொள்வோம்.

காதலர்களுக்கான சிம் கார்ட் அது. ஆனால் அதை நானும், அசோக்கும் நண்பர்களுக்கான சிம் கார்டாய் மாற்றிவிட்டோம். நிறைய சிம்கார்ட் வாங்கினோம். அத்தனையும் ஏர்செல் கம்பெனி. சில சிம் பேக்குகளில் MP3 சி.டியும் இனாமாக கிடைக்கும். அந்த சி.டி.க்காக வாங்கிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையை பத்து விரல்களுக்குள் அடக்கி விட முடியாது.

ஒரு சமயம் அசோக் அந்த சிம் கார்டை என்னிடம் இருந்து போனோடு பிடிங்கிக் கொண்டான். அவன் காதலிக்கும் பெண்ணிடம் பேசுவதற்காகத் தான்.

இரவு பகல் பாராது அவன் காதலி 'சந்தியாவுடன்' பேசிக்கொண்டிருந்தான். ஸ்கூல், காலேஜ் வரை அவனது காதல் தொடர்ந்தது. காலேஜ் இறுதி நாட்களை கடக்கும் போது அவன் காதலில் சற்று விரிசல் ஏற்பட்டது. தாடி வளர்க்காத தேவதாஸ் ஆனான்.

இன்று திருவிழாவிற்கு வந்தவனிடம்,

"அந்த நீயும், நானும் சிம் கார்ட் நம்பர் ஞாபகம் இருக்கா மச்சி ? " என்றேன்.

"நேத்து 408 ரூபா ரீசார்ஜ் பண்ணி நெட் யூஸ் பன்ற "ஜியோ" நம்பரே எனக்கு தெரியாது. இதுல பல வருஷத்துக்கு முன்னாடி ஓசில கெடச்ச நீயும், நானும் ஏர்செல் சிம் கார்ட் நம்பர் மட்டும் எப்படி மாமா ஞாபகம் இருக்கும் ? " என தன் சிங்கப் பல் தெரிய கல கலவென சிரித்தான்.

சந்தியாவை நினைத்து பார்த்தான். அருகில் அவன் மனைவி ஸ்வேதா நின்றுக் கொண்டு,

" எத நெனச்சு அண்ணா இப்படி ரெண்டு பேரும் சிரிச்சிகிட்டு இருக்கீங்க ? " என என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"ஜியோ ரீசார்ஜ் இன்னும் பண்ணலம்மா. ரீசார்ஜ் பண்ணலாமா, வேணாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கன் என்றேன். "

"என்கிட்ட உங்க சிம் கார்ட கொடுங்க அண்ணா ! நான் ரீசார்ஜ் பண்ணி யூஸ் பண்ணிக்குறன் " என்றாள்.

சந்தியாவிடம் பேச அசோக் என் சிம் கார்டை பிடிங்கிக் கொண்டது ஏனோ என் நினைவுக்கு வந்தது !

சந்தியா தன் கணவனுடன் தூரத்தில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அசோக்கை ஜாடை காட்டி சந்தியாவை பார்க்க சொன்னேன்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அருகில் இருக்கும் 'ஹார்டின்' போட்ட திருவிழா பலூனை பார்த்து திரு திரு வென விழித்துக் கொண்டிருந்தான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.