(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - நிறம் மாறாத நேசம் - K.சௌந்தர்

True Love

"ஹாய் நளினி , சாரிடா இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடிச்சி" என்றபடி பைக்கை நிறுத்தினேன் நான் .

"பரவாயில்லை அஸ்வின், போற வழியில கொஞ்சம் ஷாப்பிங் மால்ல ட்ரோப் பண்ணிடு" என்றபடி பைக்கில் ஏறி அமர்ந்தாள் நளினி. என் கல்லூரியின் அழகு தேவதை. பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த மற்ற பெண்களெல்லாம் கொஞ்சம் பொறாமையோடு பார்க்க பைக்கை ஸ்டார்ட் செய்தேன் நான்.

சற்று தொலைவில் தனியாக நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள், நித்யா. வெள்ளையில் பிங்க் நிற பூக்கள் போட்ட சல்வார் அவளது மாநிறத்தை மேலும் கருப்பாக காட்டியது .அவளைப் பார்த்தும் பாராமல் நான் ஸ்டைலாக தலையை திருப்பிக்கொண்டு பைக்கில் வேகம் பிடித்தேன். இது தினம் நடப்பதுதான். எப்போது என்னைக் கடந்தாலும் அவள் என்னை நிமிர்ந்து பார்க்காமல் சென்றதில்லை. அது எனக்கும் தெரியும். இருந்தாலும் அவளை நான் கண்டுகொள்வதே இல்லை.

"நளின், அது யாருடா அந்த பிங்க் கலர் சல்வார்?" என்று தெரியாத மாதிரி நளினியை கேட்டேன்.

“ஓ அவளா... அவள் பேரு நித்யா. என்னோட ப்ரண்ட். மத்த எல்லோருக்கும் என்னோட பிரண்டா இருக்க பயம். ஏன்னா என் பக்கத்துல யாரு நின்னாலும் நான்தான் அழகா தெரியுவேன். ஆனா இவளுக்கு அதைப்பத்தி கவலை இல்லை.இவளுக்கும் அழகுக்கும்தான் சம்பந்தமே இல்லையே. அதால தான் என் கூட தைரியமா பழகறா” என்றாள்.

நளினிக்கு எப்போதுமே தன் அழகைக் குறித்து கர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தோழியைப் பற்றி இவ்ளோ கேவலமாக அவள் தோழியே சொல்லுவதா...என்று யோசித்தபடி வண்டியை நிறுத்தினேன் நான்.

"என்னாச்சுடா..." என்றாள் நளினி.

"ஒண்ணுமில்லை. ஒரு முக்கியமான வேலை இருக்கு. இங்கேர்ந்து ஷாப்பிங் மால் பக்கம்தானே..நீயே ..."

"ஓகே ஓகே நல்லா புரிஞ்சுது. அங்கே யாராவது உனக்கு தெரிஞ்சவங்க வந்துடுவாங்களோன்னு உனக்கு பயம். பரவாயில்லை , நானே போய்க்கறேன்" என்றபடி கீழே குதித்த நளினி ஹை ஹீல்ஸ் சப்திக்க டக் டக் என்று நடக்கத் தொடங்கினாள்.

நானும் சற்று நேரம் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைத் திரும்பியே பார்க்கவில்லை.

எனக்கு ஏனோ நித்யாவின் ஞாபகம் வந்தது. அன்பான கண்களில் அக்கறையான பார்வை. என்னைக் கண்டதும் தாமரையாக மலரும் வதனம்..என்ன செய்வது அவள் அழகாயில்லையே. , அழகிருக்கும் இடத்தில் அன்பில்லை , அன்பிருக்கும் இடத்தில் அழகில்லை. ‘அவள் நிஜமாகவே அழகாக இல்லையா? அப்புறம் ஏன் எப்போதும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற மனசின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தலை குனிந்த நான் ஒரு பெருமூச்சுடன் வண்டியைத் திருப்பினேன் ,எதிரில் வந்த லாரியை கவனிக்கவில்லை.

ருத்துவமனை.

வலதுகாலில் பெரிய கட்டுடன் நான். வேலைக்கார அம்மா ஹார்லிக்ஸ் கலந்து கொண்டிருந்தார். என் கல்லூரி நண்பர்கள் பட்டாளம் உள்ளே நுழைந்தது. அதில் நித்யா இல்லாததை கவனித்த நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.ஒருவேளை நான் நினைவில்லாமல் கிடந்த அந்த நாட்களில் வந்து பார்த்துவிட்டு போயிருப்பாளோ? அப்படித்தான் இருக்கவேண்டும்.

என்னை கவனித்துக் கொள்ளும் வேலைக்கார அம்மாவை மெல்ல விசாரித்தேன். "அம்மா இவுங்கல்லாம் டெயிலி வர்றாங்களா?" என்றேன்.

"இல்லப்பா இவுங்கல்லாம் இன்னிக்குத்தான் வர்றாங்க ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான் இந்த பதினஞ்சு நாளா தெனம் வந்துக்கிட்டு இருந்துது. உன் நெத்தியில பூசிவிட சொல்லி தெனம் விபூதி கொண்டுவந்து தரும். ஆனா இன்னிக்கு ஏனோ இன்னும் காணோம்" என்றார்.

எனக்குப் புரிந்து விட்டது. அது நித்யாதான். நளினி விபூதியை கையால் கூட தொட மாட்டாளே. ஏனோ நித்யாவை உடனே பார்க்கவேண்டும் போல இருந்தது. ஆனால் எனக்கு நினைவு வந்துவிட்டது தெரிந்தால் அவள் வர மாட்டாள். தூர நின்று விழிகளால் விழுங்குவதைத் தவிர என் அருகில் நெருங்கி பேசும் துணிச்சல் இன்னும் அவளுக்கு வரவில்லை. ஒருவேளை என் அழகோ அல்லது பணத் திமிரோ அதற்கு காரணமாக இருக்கலாம். நானும் அதே காரணங்களாலேயே அவளிடம் பேச இதுவரை முயற்சிக்கவில்லை.

ஆனால் இன்றோ மனம் அவளின் அன்பான பரிவான ஒரு பார்வைக்காக ஏங்கியது. அன்னையின் ஸ்பரிசம் நான் அறியாத ஒன்று. தந்தையோ வெளிநாட்டில் பணம் ஈட்டுவதில் குறியாக இருந்தார். மனம் போனபடி திரிந்த எனக்கு அன்பு ஒரு பொருட்டாக படவில்லை. ஆனால் அடிபட்டு சோர்ந்து போயிருக்கும் இன்றோ ஒரு அன்பான நெற்றி தொடுகைக்கும் ஒரு பரிவான வருடுதலுக்கும் மனம் ஏங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.