(Reading time: 13 - 26 minutes)

தாயிருந்தால் இதெல்லாம் கேட்காமலேயே கிடைத்திருக்கும். வேலைக்கார அம்மாளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? இந்த நித்யா ஏன் இன்று மட்டும் வரவில்லை? அவளிடம் உரிமையுடன் கோபித்தபடி படுத்திருந்த எனக்கு அவள் என் மனதில் குடியேறி வெகு நாட்கள் ஆனது புரிந்தது . அதுதான் உண்மை. அதனால் தான் அவளைப் பற்றி தவறாகக் கூறிய நளினியை பாதி வழியில் இறக்கி விட்டிருக்கிறேன். அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு எதிரே வந்த லாரியை கவனிக்காமல்.....நினைவுச் சங்கிலி வெளியே கேட்ட நித்யாவின் பேச்சுக் குரலில் அறுந்தது.

 நான் விழித்திருப்பதைக் கண்டால் நிச்சயம் உள்ளே வர மாட்டாள். கண்களை மூடி தூங்கிவிட்டது போல பாவனை செய்தபடி படுத்திருந்தேன்.

 அவளைக் கண்டதும் பார்வதி அம்மாள் "வாம்மா உன்னைத்தான் இவ்வளோ நேரம் நெனைச்சுக்கிட்டிருந்தேன், இன்னிக்குத்தான் தம்பிக்கு நினைவு திரும்பிச்சு. எல்லோரப்பத்தியும் விசாரிச்சுது" என்றார்.

"என்னது நினைவு திரும்பிடிச்சா, இப்போ எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? நா வேண்டிக்கிட்டது வீண் போகலை. இன்னிக்கு மலைக் கோவில் வரைக்கும் நடந்து வர்றதா வேண்டிக்கிட்டு நடந்தே போயிட்டு வர்ரேன். என் வேண்டுதல் பலிச்சிடுச்சி " என்றாள்.

எனக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. மலைக்கோவில் இங்கிருந்து எவ்வளோ தூரம் என்பது எனக்கும் தெரியும். அவ்வளோ தூரம் எனக்காக நடந்தே போய் வருகிறாளா? இந்த அன்பை என்னவென்று சொல்வது.

“சரிம்மா நீ கொஞ்ச நேரம் தம்பி கிட்ட இரு, நா இதோ வந்துடறேன்” என்றபடி காபி வாங்க சென்றாள் பார்வதி.

நித்யா என் பக்கத்தில் அமர்வது தெரிந்தது. அப்போதுதான் விழிப்பது போல கண்களை திறந்து அவளைப் பார்த்தேன் நான்.

கண்கலங்க என்னை பார்த்தாள் அவள். "எப்படி இருக்கீங்க..பைக்கைப் பாத்து ஓட்டக் கூடாதா? உங்களுக்கு இப்படின்னு தெரிஞ்சதும் நா செத்தே போயிட்டேன் தெரியுமா? காலிலே பட்ட இதே அடி தலைலே பட்டிருந்தால்?" அதற்குமேல் பேச முடியாமல் விம்மி அழத் தொடங்கினாள் நித்யா.

“நித்யா ப்ளீஸ் அழாதே. நீ அழறதத் தாங்கற சக்தி எனக்கு இல்லை" என்றேன்

நித்யா அழுகையை நிறுத்தி என்னை ஆச்சரியத்துடன் ஏறிட்டாள் "நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள்

"ஐ லவ் யூ ன்னு சொல்றேன். ஆமாம் நித்யா உன்னோட காலம் பூரா வாழணும்னு ஆசை., நீ என்னை சுற்றி சுற்றி வந்ததெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனைச்சியா? எனக்கு நீ எப்போதுமே வேண்டும். அதனால எங்கப்பா கிட்ட உன்னைப் பத்தி சொல்லப்போறேன் ".

ஒரு நிமிடம் தாமரையாக மலர்ந்த அவள் முகம் உடனே வாடியது.

"ப்ளீஸ் அஸ்வின் இப்படியெல்லாம் என்னை கேலி பண்ணாதீங்க” என்றாள் வேதனையுடன்.

“சத்தியமா உன்னை கேலி பண்ணவில்லை நித்யா. நேத்து வரை இருந்த அஸ்வின் இன்னிக்கு இல்லை. என் திமிர், விளையாட்டுத்தனமெல்லாம் நா லாரில அடி பட்டப்பவே செத்துப் போச்சு. இப்போ நா அன்பு பாசத்துக்கு ஏங்குற ஒரு சாதாரண இளைஞன். என்னை மன்னிச்சு மணந்துகொள்வாயா" என்றேன் .

“இல்லை அஸ்வின். நீங்க இத்தனை நாள் நடந்துக்கிட்டதுதான் இயல்பு. இப்போ நடந்துக்கறது அப்நார்மலா தெரியுது. இத்தனை நாள் நீங்க என்னை திரும்பி கூட பாத்தது கிடையாது. உங்க மேல எந்த தப்பும் இல்லை. நா அழகா இல்லைன்னு எனக்கே நல்லா தெரியும். வானத்து நிலவை, ஒரு அழகான மலரை பாக்கற மாதிரிதான் நானும் உங்களை உங்க அழகை ரசிச்சது. நீங்க எனக்கு எப்பவுமே சொந்தமாக முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கும் எனக்கும் அழகில் அந்தஸ்தில் அத்தனை இடைவெளி இருக்கு. இப்பல்லாம் சாதாரண ஆண்களே அழகான பெண்ணைத்தான் தேடுறாங்க. உங்க அழகுக்கு உலக அழகிதான் உங்க பக்கத்துல நிக்க முடியும். நம்ம நளினி ரொம்ப அழகு .அவளை கல்யாணம் பண்ணிகோங்க. அப்படி நடந்தா அதை நா என் கண்ணால பாத்தா நிச்சயம் சந்தோஷப் படுவேன்" என்றாள்.

“இது என்ன உளறல்?” என்றேன் நான்.

“நா உளரலை. யதார்த்தத்தை சொல்றேன் . இன்னிக்கு ஏதோ உடலும் மனமும் பலவீனப் பட்டிருக்கிற இந்த நிலைல நீங்க பேசுறது உண்மை இல்லை. இந்த நிலைல உங்களுக்கு அன்பு தேவை. அதனால அன்பு காட்டுற என் மேல உங்களுக்கு காதல் வந்திருச்சு. ஆனா இதுவே கல்யாணம் ஆனா ஒரு பத்து நாளைக்கு நிலைக்காது. நாளைக்கே ஒரு அழகான பெண்ணைப் பாத்தா மனசு அலை பாயும். நான் உங்களுக்கு கழுத்திலே கட்டின கல் போல பாரமாயிடுவேன்”.

“நிறுத்து நித்யா...நீ என்னப் பத்தி அவ்வளோ மோசமாவா நினச்சிக்கிட்டு இருக்கே? இப்பொவும் நா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு எந்த நிர்பந்தமும் இல்லை. நானே விரும்பித் தான் கேட்டேன். நா இத்தனை நாள் உன்கிட்ட பேசலையே தவிர உன்னை எப்பவுமே அவாய்ட் பண்ணினது கிடையாது. நீ என்னைப் பாக்குறா மாதிரி நானும் உன்னை பாத்துக்கிட்டு தான் இருந்தேன். உன் அன்பை உணராமல் இருக்க நா ஒன்னும் வானத்து நிலவு அல்லது அழகான மலர் போல ஜடப் பொருள் இல்லை நித்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.