(Reading time: 13 - 26 minutes)

ழகான பெண்கள் யாருமே என் மனசை உன் அளவுக்கு பாதிச்சதில்லை. இப்போ கண் விழிச்ச இந்த ஒரு மணி நேரமா உன்னைத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னா நீ நம்புவியா? ஆனா அதுதான் உண்மை. எனக்கு அம்மா கிடையாது. அன்னையின் அன்பை நீதான் எனக்கு தரனும். எனக்கு அதுவே போதும். கனவில் கூட உனக்கு நான் துரோகம் பண்ணமாட்டேன், என்னை நம்பு நித்யா” என்றேன்.

நித்யா எனக்கு பதில் சொல்வதற்குள் "ஹாய் அஸ்வின் ஹௌ ஆர் யூ செல்லம் " என்று கூச்சலிட்டபடி உள்ளே நுழைந்தாள் நளினி.

நித்யா தன் பெரிய கண்களால் என்னை ஆழமாக ஒருதரம் பார்த்தாள் . பிறகு மெதுவாக வெளியேறிச் சென்றாள்.

அவளை வெறுப்புடன் பார்த்தபடி உள்ளே வந்த நளினி "இவ எங்கே இங்க வந்தா...உன்கிட்ட பேசற அளவுக்கு இவளுக்கு துணிச்சல் வந்துடிச்சா? எல்லாம் ஒரு பத்து நாள் நா ஊரிலே இல்லை இன்றதால வந்த தைரியம். உனக்கு ஆக்சிடெண்ட் ஆன அன்னிக்கு நா அவசரமா ஊட்டிக்கு போக வேண்டியததாயிடுச்சி. நேத்து தான் வந்தேன். ஒருநாள் ரெஸ்ட் எடுத்துட்டு உடனே உன்னைப் பாக்க ஓடி வந்துட்டேன். எனக்கு எவ்வளோ அக்கறை பாத்தியா? சரி சரி சீக்கிரம் சரியாகி வா , உன்னோட பைக்கிலே சுத்தனும் " என்றாள்.

சரிதான். நித்யாவுக்கும் இவளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான். அழகாயிருந்தால் மட்டும் போதுமா? அவளுக்கு பைக்கில் இடம் கொடுத்ததே தவறு. மனசில் இடம் கொடுக்க முடியுமா? இது ஏன் இந்த நித்யாவுக்கு புரியவில்லை?

"இல்லை நளினி, நா சரியானாலும் ஒரு ஆறு மாசத்துக்கு பைக்கை தொடக் கூடாதுன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க" என்றேன்.

அவள் அதிர்வது வெளிப்படையாக தெரிந்தது. "இது எனக்கு தெரியாமப் போச்சே? அந்த நவீன் அப்போவே கூப்பிட்டான். அவனை அவாய்ட் பண்ணிட்டு ஓடி வந்தேன், எல்லாம் வேஸ்ட். சரி அவனை போனில் பிடிக்க முடியுதான்னு பாக்கறேன்" என்றபடி வேகமாக வெளியேறினாள் நளினி.

நிம்மதிப் பெருமூச்சுடன் நித்யா உள்ளே வருகிறாளா என்று பார்த்தேன். அவள் வரவில்லை. அதன் பிறகு நான் ஹாஸ்பிடலில் இருந்த பத்து நாட்களும் கூட அவள் வரவே இல்லை.

என்னாச்சு அவளுக்கு, ஏன் என்னிடமிருந்து விலகிப் போகிறாள்? நான் அவளை அலட்சியப் படுத்திய போதெல்லாம் என்னையே சுற்றி வந்தவள் இன்று அவள் அன்புக்காக ஏங்கும்போது ஏன் தூரப்போகிறாள், இந்தப் பெண்களையே புரிந்துகொள்ள முடியாது போலிருக்கிறதே!

 இரண்டு நாள் கழித்து எனக்கு ஒரு லெட்டர் வந்தது. நித்யாவிடம் இருந்துதான். கடிதத்தை பிரித்தேன். "அஸ்வின், உங்களை எந்த ஜென்மத்திலும் என்னால் மறக்க முடியாது. மணக்கவும் முடியாது, நீங்கள் உங்கள் மனதுக்குப் பிடித்த அழகிய பெண்ணை மணந்து சந்தோஷமாக வாழவேண்டும் என்றுதான் நான் உங்களை விட்டு விலகிப் போகின்றேன். உங்கள் மணவாழ்வுக்கு எனது வாழ்த்துக்கள். என்னைத் தேட முயற்சிக்க வேண்டாம்" என்று எழுதியிருந்தது.

அதன் பிறகு கல்லூரிக்கும் அவள் வரவில்லை. எங்கு தேடியும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அவள் என்னை நிராகரித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. மனசுக்குள் உடைந்து போனேன் நான். எனக்கு எதிலுமே நாட்டமில்லை. ஒரு வழியாக கல்லூரி படிப்பு முடிந்து அப்பா தொழிலை கவனித்துக் கொள்ளத் தொடங்கினேன். என் கவனம் முழுவதையும் தொழிலில் செலுத்தி அவளை மறக்க முயன்றேன். இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கிறேன். பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

ன்று எனக்கு முப்பத்தைந்தாவது பிறந்த நாள். ஏனோ இன்று நித்யாவின் ஞாபகங்கள் அதிகமாக இருந்தன. அவள் மட்டும் என்னை காலா காலத்தில் மணந்திருந்தால் இந்நேரம் எனக்கு பத்து வயது குழந்தையே இருந்திருக்கும். என்ன செய்வது, இதுதான் என் விதி போலும்.

என் செக்கரட்டரி சுலேகா முன்னால் வந்து நின்றாள். அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். அவளும் என்னை நெருங்க முயன்று தோற்றுப் போனவள்தான். இன்று என்னைப் பற்றி நன்கு அறிந்தவளும் கூட. நித்யாவைப் பற்றி எல்லாமே அவளுக்குத் தெரியும்.

"ஸார் ‘அமைதி இல்லம்’ போகனும்னு சொன்னீங்களே கிளம்பலாமா ...நான் எல்லாத்தையும் சரி பாத்துட்டேன். அங்கே போய் அனாதைக் குழந்தைகளுக்கு ஸ்வீட் கொடுத்துட்டு அரை மணி நேரத்துல திரும்பிடலாம்” என்றாள்.

நானும் கிளம்பினேன்.

அங்கேதான் என் நித்யாவை நான் மறுபடியும் சந்தித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. கொஞ்சம் சதை போட்டு கனிவும் கம்பீரமுமாக அந்த இல்லப் பொறுப்பாளர் பதவியில் இருந்தாள். ஆனால் அவள் கண்களில் நிரந்தரமாக ஒரு நிராசை குடிகொண்டிருந்தது.

அவளும் என்னைப் பார்த்ததும் பிரமித்து நின்றாள். அவளாலும் ஒரு நிமிடம் நம்பவே முடியவில்லை. "நீங்களா...எப்படி இருக்கீங்க ..எவ்வளோ நாளாச்சு பாத்து. இன்னும் காலேஜ்ல பாத்த அதே மாதிரிதான் இருக்கீங்க" என்றாள்.

"நானா..எனக்கு இன்னிக்கு நாப்பதாவது பிறந்தநாள்" என்றேன் அவள் கழுத்தில் தாலி இல்லாததை கவனித்தபடி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.