(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - பால்ய நினைவுகள் - ராகா

Gopuram

1995ன் தொடக்கத்திலிருந்தே அந்தக் கோவிலின் புராதன வாசம் நுனி மூக்கில் நிரம்பியிருக்கிறது.சுற்றிலும் வெளவால்களின் ‘டப டப’ சத்தம். எதற்காக இந்த வெளவால்கள் இப்படி தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன ? என்று வருடக் கணக்கில் யோசித்திருக்கிறேன்.

இப்போதும் அந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தால், தேசிய கீதம் இசைக்கும் போது மயிர் சிலிர்ப்பது போல் சிலிர்க்கும்.

அந்தக் கால கோவில் அது. சிவப்பு செங்கல் தரை. ஆங்காங்கே புறாக்களின் எச்சம் பட்டு அத்தரை வெள்ளை வெள்ளையாய் காட்சியளிக்கும்.

அர்த்த ஜாம பூஜையின் போது சிவனடியார்களால் பாடப்படும் தேவாரமும், திருவாசகமும் கேட்கும் போது கண் கலங்கி என்னை அறியாமல் கன்னத்தை நனைக்கும்.

மார்கழி மாத காலை உணவு பெரும்பாலும் மிளகுப் பொங்கல் தான். இப்போது வெண்ணை வாங்கி காய்ச்சி, நெய்யால் தளும்ப தளும்ப சமைத்துண்டாலும் அந்த உள்ளங்கை இளஞ்சூட்டு, பிரசாத பொங்கலுக்கு தனி சுவை உண்டு.

சொத்தை பல்லில் முழு மிளகு மாட்டிக்கொள்ளும். அதை நாவால் எடுப்பது ஒரு கலை. இன்றும் அந்த மார்கழி மாத பொங்கலை நினைத்தால் புசித்த பின்னும் பசிக்கும்.

பின் தலையை முதுகோடு ஒட்டிப் பார்த்தால் தான் கோபுர தரிசனம் கிட்டும். ராஜ கோபுரமது. திருவிழாக் காலங்களில் நாதஸ்வரம், மேளதாளம் என கோலகலமாய் திகழும்.

'சிவ சிவ' என்ற எழுத்துக்கள் சீரியல் பல்புகளால் மின்னும்.

அந்த கோபுரத்தில் ஏறிப்பார்த்தால் நடுக் கடல் தெரியும் என்று விஜய் அடிக்கடி கூறுவான். எனக்கு பயம்.

'கோபுரத்தில் எல்லாம் ஏறிப் பார்க்க கூடாது. சாமி கண்ணை குத்திடும் '

என்று என் அப்பா கூறுவார்.

சில நேரம் ஏற முடியாமல் தோற்றேன். கீழே விழுந்து கை கால்களில் காயங்களை பரிசாய் பெற்றேன். பல நேரம் அப்பாவிடம் மாட்டிக்கொண்டு என் சிறிய முதுகில் சிறப்பாய் அடிவாங்கினேன். எத்தனை அடிவாங்கினாலும் மரத்திலிருந்து விழுந்த காக்கையின் எச்சத்தினை துடைத்துக் கொள்வது போல் துடைத்துக் கொண்டு ஓடி விடுவேன்.

சிறுவர்கள் தாவிக்குதித்து மரக்கிளையை பிடிக்க முயற்சி செய்வது போல் பல முறை நானும் முயற்சி செய்து ஒரு வழியாக பாதி கோபுரம் ஏறிவிட்டேன்.

அரை அடி படிகள். ஏற ஏற தலைச் சுற்றல். இதை எல்லாம் கவனத்தில் கொள்ளவே இல்லை. முழு கவனமும் உச்சி கோபுரத்தில் ஏறி கடலை பார்க்கவேண்டும் என்பதில் தான் இருந்தது.

கைக்கெட்டும் தூரத்தில் அமிர்தமிருந்தும் பட்டினி கிடந்து பழகியதுண்டா ? என்று வைரமுத்து ஒரு கவிதையில் கூறுவார். அந்த வரிக்கிணங்க கடைசி படி வரை ஏறி பயத்தால் சட்டென அந்த கடல் காட்சியை பார்க்காமல் திரும்பிய நாட்களும் ஏராளம்.

எப்படியோ விஜய் ஒருமுறை என் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.முதலில் அவன் சென்றதால் புறாக்கள் அவன் முகத்தில் அறைந்தது. அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல், எவ்வித சலனமில்லாமல் முன்னேறி சென்றான். நான் கழுத்தில் அணிந்திருந்த ஆஞ்சநேயரின் டாலரை இறுகப்பற்றிக் கொண்டேன்.

புறாக்கள், வெளவால்களை சாதுர்யமாய் ஏமாற்றிவிட்டு எப்படியோ உச்சிக் கோபுரம் சென்றுவிட்டேன். கடலை பார்த்தாகிவிட்டது. கிட்டதிட்ட 4 கி.மீ . கடலுக்கும் கோபுரத்திற்கும். தரையில் நீல வண்ண தார்பாயை விரித்து வைத்தாற் போலத் தான் எனக்கு காட்சியளித்தது.

கடல் அலையின் இசை செவிகளில் கேட்டது.

இந்தக்கடலில் நீந்தி இலங்கை கடற்கரையை அடைந்தது போலொரு மகிழ்ச்சி. என்னதான் பிளைட்டில் கடல் தாண்டி பயணித்திருந்தாலும், வேலை நிமித்தமாய் அவ்வப்போது கப்பலில் பயணித்திருந்தாலும் அவை எல்லாம் இந்த கோபுரத்தில் ஏறி கடலை பார்த்தற்கு இம்மியளவு கூட ஈடாகாது. அந்த சந்தோஷத்தையும் திருப்பித்தராது.

இன்று விஜய் ஐ.டி.யில் வேலை பார்க்கிறான். தூக்கமின்மையால் கண்ணிற்கு கீழே சுருக்கங்களுடன் கூடிய கருவளையம். உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்பட்ட தொப்பை. 34 ஹிப் சைஸ். பித்த நரை. காரைக்குடியில் இருந்துக் கொண்டு கலிபோர்னியா வில் இருக்கேன் என்று தன் கிளைய்ண்ட்டிடம் அழகாய் அமெரிக்கன் இங்க்லீஷில் பீலா விட்டுக் கொண்டிருக்கிறான்.

சித்திரை திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருக்கிறான். பயந்து பயந்து ஏறிய கோபுரத்தை கூட அவனால் தலை சாய்த்து பார்க்கமுடியவில்லை.

"சிஸ்டம்ல உக்காந்து உக்காந்து கழுத்து வலி மச்சி" என்கிறான்.

"கோபுரத்துல ஏறி கடல பாப்போமாடா ? "

"அது எல்லாம் ஒரு காலம் டா " என சிரித்துக்கொண்டே பின் கழுத்தை பிடித்தவாறு கோவில் கோபுரத்தை அன்னாந்து பார்க்கிறான்.

அவன் சிரித்ததற்கு பின் உள்ள சோகம் எங்களிருவருக்கு மட்டும் தான் புரியும்...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.