சிறுகதை - தாயுமானவர் - சா செய்யது சுலைஹா நிதா

“என்னடா ரவி இன்னிக்கு எத்தனை கம்பெனிக்கு இன்டெர்வியுவிற்க்கு போலாம்னு இருக்க?”என கேட்ட தங்கையை ஒரு முறை முறைத்து விட்டுக் கிளம்பினான் ரவி.
இன்றாவது தன் மகனுக்கு வேலை கிடைத்து விடும் என நம்பிக்கையுடன் அவனுக்கு விபூதி வைத்து வழியனுப்பி வைத்தாள் பங்கஜம்.அதை தூரத்தில் இருந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் அவனது தந்தை முத்துராஜ்.
தான் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கிய பொழுது தந்தை வாங்கித் தந்த வண்டியில் கெத்தாக ஏறி உட்கார்ந்தான் ரவி.அவன் கிளம்பி விடுவானோ என மூச்சிரைக்க ஒடி வந்து யாரும் பார்த்திராதவாறு அவனது கையில் காசை திணித்தார் முத்துராஜ்.பின் எல்லோருக்கும் கேட்கும் வகையில் “இன்றைக்காவது வேலையுடன் திரும்பி வா” என சொல்லிய அவரை “இன்றைக்காவது அவனை நிம்மதியாக கிளம்ப விடுங்களேன்” என கடிந்து கொண்டாள் பங்கஜம்.
போகும் வழியில் தன் அப்பாவின் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை அசை போட்டான்.
டிகிரி முடித்த பின் தன் படிப்பிற்க்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு கம்பெனியின் வாசலிலும் ஏறி இறங்கிய நாட்கள் நரகம் போல் இருந்தது.தன்னைப் போல் தனது நண்பன் சேகருக்கும் வேலை கிடைக்க தாமதம் ஆனதால் இருவரும் ஒன்றாகவே வேலை தேடினர்.நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கைக் குறையத் தொடங்கியிருந்தது.அந்த நேரத்தில் மற்ற அப்பாக்களைப் போல் முத்துராஜ் தனது மகனை திட்டவோ இல்லை தண்டச்சோறு என முத்திரை குத்தவோ இல்லை.அவன் முயற்சி செய்கிறான் என அவருக்குத் தெரியும்.ஆதலால் அவனை அவன் போக்கிலேயே விட்டு விட்டார்.
ஒருநாள் அவன் மிகவும் சோர்வுடன் காணப்பட்டான்.அதைக் கண்ட முத்துராஜ், முதன் முதலாக தன் மகனிடம் வேலையைப் பற்றிப் பேசினார்.
ரவி, உன்னிடம் நான் கொஞ்ச நேரம் பேசலாமா?
“சொல்லுங்கப்பா” என தன் படுக்கையில் சிதறிக் கிடந்த காகிதங்களை எல்லாம் வேக வேகமாக எடுத்து வைத்தான்.
அப்பொழுது, ஒரு காகிதம் தன் தந்தையின் காலடியில் சிக்கியதை பதற்றத்துடன் எடுத்தான்.இதைக் கண்ட முத்துராஜ்,
”ரவி, நீ இவ்வளவு பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை” என கூறி வாய் விட்டுச் சிரிக்கலானார்.
இதைக் கண்ட ரவிக்கு ஒன்றும் புரியவில்லை.குழப்பத்துடன் இருந்த அவனை பாசத்துடன் கட்டி அணைத்தார்.தான் பட்ட துயர் அனைத்தும் பறந்து போனது போல் இருந்தது அவனுக்கு.தன் விழி ஒரத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு தன் அப்பாவிடம் பேச ஆரம்பித்தான்.இங்கு அவனைப் பேச வைத்தது அவனது அப்பாவின் கோபம் அல்ல, பாசமே.
”அப்பா! நானே உங்களிடம் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன்”.
அதை அறிந்துதான் நானே உன்னைப் பார்க்க வந்தேன் ரவி.உன்னை இன்று,நேற்று அல்ல இருபத்தி மூன்று வருடங்களாக அறிந்து வைத்திருப்பவன் நான்.உன் நடத்தையை வைத்தே நீ என்ன நினைக்கிறாய் என தெரிந்து கொண்டேன்.பின் என் நண்பன் ராமமூர்த்தி உன்னை வங்கியில் பார்த்ததாக கூறினான்.அதிலிருந்து ஒரளவு என்னால் யூகிக்க முடிந்தது.யூகம் எல்லா விஷயங்களிலும் சரியாக இருக்காது என்பதனால் நான் உன்னிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகத்தான் வந்தேன்.உனக்கு விருப்பம் இருந்தால் நீ என்னிடம் கூறலாம் என கூறினார்.
அதைக் கேட்ட பின் ரவியினால் உண்மையை மறைக்க இயலவில்லை.”அப்பா! என்னை மன்னித்து விடுங்கள்.என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த உங்களிடம் வேலை கிடைத்து விட்டது என பெருமையாய்க் கூறலாம் என எண்ணினேன்.எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே வேலை கிடைத்து விட்டது.ஆனால்,எனக்கு அந்த வேலையில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.என் மனது முழுவதும் தொழில் ஆரம்பிப்பதிலேதான் இருந்தது.இதை உங்களிடம் கூறினால் உங்கள் மனம் வருத்தப்படும் என நினைத்தேன்.அதனால்தான் உங்கள் யாரிடமும் கூறவில்லை.அதை ஆரம்பிப்பதற்கு எனக்கு நிறைய பணம் தேவைப்பட்டது.உங்களைக் கேட்க என் மனம் இடம் தரவில்லை.ஏற்கனவே என் படிப்பிற்க்காக நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள்.ஆகவே, அந்த வேலையில் கிடைத்த சம்பளத்தையும் பின் வங்கியில் சிறிது கடனும் பெற்று தொழில் தொடங்கலாம் என எண்ணிதான் வங்கிக்குச் சென்றேன்.அங்குதான் ராமமூர்த்தி மாமா என்னைக் கண்டார் என நினைக்கிறேன்.இதை தங்களிடம் மறைக்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை,தொழில் தொடங்கிய பின்னர் உங்களிடம் மகிழ்ச்சியுடன் கூறலாம் என நினைத்திருந்தேன் என தன் பங்கு நியாயத்தை எடுத்துரைத்தான்.
இதைக் கேட்டவுடன் முத்துராஜ் பதில் ஏதும் பேசாமல் எழுந்துச் சென்று விட்டார்.