(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - பிழையாகும் கணக்குகள் - ஐ.கிருத்திகா

goat

முத்தம்மா தவிப்புடன் வாசலைப்பார்ப்பதும், சோற்றை கிளறுவதுமாக இருந்தாள். கொடி அடுப்பில் குழம்பு கொதித்து கொண்டிருந்தது. இரண்டுநாள் பெய்த மழையில் விறகு நனைந்து போய் புகைச்சலடிக்க , முத்தம்மா கண்களை கசக்கி கொண்டு வெளியே வந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாத்தப்பன் புலப்படவில்லை.

" அய்யனாரு கணக்கா கெளம்பி போனாரு. வெட்டிட்டு வான்னா வேரோட புடுங்கிட்டு வருவேன்னு வீராப்பு பேச்சு வேற. ஆனா ஆளக்காணுமே...."

முத்தம்மா மனதுக்குள் முணுமுணுத்தாள். நேரம் ஆக, ஆக ஒருமாதிரி பயமாயிருந்தது. அந்த பக்கமாக வந்த அலமேலு, முத்தம்மா தவிப்போடு நின்றிருப்பதை பார்த்து அருகில் வந்தாள்.

" என்னாக்கா, யாரை எதிர்பாத்து வாசலாண்ட நிக்கற? ஒம்புருசனையா....?"

முத்தம்மாவுக்கு அவளிடம் பேச்சு கொடுக்க விருப்பமில்லை. லேசாய் தலையசைத்து விட்டு தெருமுனையில் பார்வையை பதித்தாள். 

சீட்டுக்காரனை நினைத்தபோது வயிற்றில் அமிலம் சுரந்தது. டாணென்று ஏழுமணிக்கு வந்து வாசலில் ஒற்றை காலை ஊன்றி பெல்லடிப்பான். காசிருந்தால்,

" இதோ வந்துட்டேன்" என்ற குரலோடு வேகமாக வெளியே வரலாம். இல்லையென்றால்,

" மேலுக்கு சொகமில்ல...அதனால வெளில எங்கியும் வேலைக்கு போவல. நாளைக்கு வாங்களேன் தம்பி" என்று உள்ளிருந்தவாறே நாலு இருமல், தும்மலோடு பதில் சொல்ல வேண்டியிருக்கும். சீட்டுக்காரன் என்ன லேசுப்பட்டவனா....எத்தனை வீடுகளில் இந்த மாதிரி வசனங்களை கேட்டிருப்பான். ஐயோ பாவம் என்று நினைத்தால் அவன் என்ன சீட்டுக்காரன்?

" கொடுக்கறத கொடுக்கலீன்னா நான் எடுக்க வேண்டியத எடுத்துக்கிட்டு போயிடுவேன் " என்று இடக்குமடக்காக வசனம் பேசிவிட்டு போவான். அதே மாதிரி எடுத்துக்கொண்டும் போய்விடுவான். இலவச இணைப்பாக முச்சந்தி அர்ச்சனை வேறு.

" அக்கா, என்னா யோசனை? "

அலமேலு தோளை குலுக்க, முத்தம்மா நினைவு கலைந்தாள். 

 " இ....இல்ல அலமேலு, சீட்டுக்காரன் வருவான், தவணை குடுக்கணும். அதான் இந்தாள எதிர்பாத்துகிட்டு நிக்கறேன்."

" இருவத்தஞ்சு வருசமாயும் உம்புருசனும் திருந்தல, நீயும் திருந்தல. இன்னும் அந்தாளை நம்பிகிட்டு கெடக்கறியே. உம்புள்ள கொத்தனார் கைக்கு போய் ஒரு நாளைக்கி இருநூறு, முன்னூறுன்னு சம்பாதிக்கிறான். அவங்கிட்ட காசு கேட்டாலும் நியாயமுண்டு. அத வுட்டுட்டு வராத பஸ்ஸு எத்தினி மணிக்குன்னு கேக்கறியே....என்னமோ போ...."

அலமேலு முணுமுணுத்து கொண்டே போனாள். 

முத்தம்மாவுக்கும் சலிப்பாகத்தான் இருந்தது. சாத்தப்பனை நம்பி ஒரு பிரயோஜனமுமில்லை என்றானபிறகும் சில சமயங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது. இத்தனைக்கும் சாத்தப்பன் ஒன்றும் வேலை வெட்டி இல்லாதவனில்லை. ஒரு வீட்டில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறான். மாதம் நாலாயிரம் சம்பளம்

" இந்த மாசமாவது முழுச்சம்பளத்தையும் குடுய்யா...மச்சாங்கார் வூட்டு விசேசத்துக்கு போவணும். தங்கச்சி பொண்ணு சடங்குக்கு ஏதாவது செய்யணும். வூட்டுல அரிசி, பருப்பு தீந்து போச்சு. வாங்கி போடணும்" என்று முத்தம்மாவும் மாதந்தவறாமல் ஏதாவது அறிக்கை வாசிப்பாள். 

" சத்தியமா தந்திடுறேன் புள்ள. என்னைய நெனச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னா பொழப்பு எம்பொழப்பு...குடும்பத்த பாக்காம குடிச்சிகிட்டு....." என்று காந்தியம் பேசிவிட்டு பளிச்சென்று திருநீறு சகிதம் வேலைக்கு செல்வான். மாலையில் போதை தலைக்கேற கீழே விழுந்து வாந்தியெடுப்பான். முத்தம்மா சட்டைப்பாக்கெட்டுக்குள் துழாவி மீதமுள்ள நோட்டுக்களை பத்திரப்படுத்துவாள். 

இன்றும் போகும் போது சாத்தப்பன் உத்திரவாதம் அளித்து விட்டே சென்றிருந்தான். 

" நீ சொல்லித்தான் தெரியணுமா...சீட்டுக்காரன் வந்து கத்துவான்னு எனக்கு தெரியாதா என்ன... மொத்த சம்பளத்தையும் ஒங்கையில தந்துபுடறேன், குடுக்கவேண்டியத குடுத்து கணக்கை நேர் பண்ணிடு. அவ்ளோதான்...." என்றவனை நம்புவதா, வேண்டாமா என்று முத்தம்மாவுக்கு குழப்பமாக இருந்தது. 

முத்தம்மா அயர்வாய் அமர்ந்திருந்தாள். சோறு பொங்கி வழிய, நினைவிலிருந்து விடுபட்டவளாய் குண்டானை கவிழ்த்து கஞ்சியை வடியவிட்டு அடுப்பிலிருந்து விறகை இழுத்து தண்ணீர் தெளித்து குளிரவைத்தாள். மனசு தணல் துண்டாய் தகித்தது. 

சீட்டுக்காரனிடம் கடன் வாங்கி பழக்கமில்லை அவளுக்கு. ஏதோ தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தவளுக்கு மாதவிடாய் ரூபத்தில் பிரச்சனை வந்தது. 

" உனக்கு அம்பது வயசாவுது. இந்த வயசுல பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை வரத்தான் செய்யும்....பயப்படாத...சரியாப்போயிரும். ரொம்ப வேலை செய்யாத. இந்த மருந்து , மாத்திரையெல்லாம் சாப்பிடு....." என்று பெண் மருத்துவர் எழுதித்தந்த மாத்திரை சீட்டோடு வந்தவளுக்கு அயர்வாய் இருந்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.