இன்னும் தெளிவாக இருந்த என் மூளையோ, ‘ஏய்… சைட் அடிக்கிறன்னு நினைத்தால், நீ என்ன இப்படி நிக்கிற?’ என என் மனதின் மானத்தை வாங்க, அதனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் என் நெஞ்சம் மீண்டும் லவ்வியது அவனை.
நாங்கள் செல்லும்வரை அவனை பின்தொடர்வதே என் கண்களுக்கு வேலையாகப் போனது. நேரமாக, நான் என் தாயைத் தேடி சென்றுகொண்டிருந்தபோது எதர்ச்சையாக அவன் பேசுவதைக் கேட்க நேர்ந்தது.
யாரிடமோ காதல் நிச்சயம் கைகூடும் என்றும் அவன் கைவிடமாட்டான் என்றும் வாக்களித்துக்கொண்டிருந்தான். யாராக இருக்கக்கூடும் என்று நான் பார்க்க, அங்கே நின்றிருந்தது ஒரு பெண். இருவரது பேச்சையும் கேட்டு அவர்கள் காதலிக்கிறார்கள் என புரிந்துகொள்ள நொடிகளே போதுமானதாக இருந்தது.
அந்த நிமிடம், என் மனம் மட்டுமல்ல… மதியும் அறிந்து கொண்டது, ஏதோ பருவக்கோளாறு என்று நினைத்து விளையாட்டாக ஒதுக்கியது எப்போழுதோ காதலாக மாறிவிட்டதென்று. என் காதலை இப்படியா அறியவேண்டும்?
எப்படியோ, வீடு வந்து சேர்ந்தேன். அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீரை என் அறைக்குச் சென்று திறந்து விட்டேன். ஒரு வாரம் கடந்ததும் சென்னை என்னை வரவேற்றது.
மாதங்கள் ஓட, அந்த இயந்திர வாழ்விற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டாலும், அது பழுதாகாமல் ஓட வைத்துக்கொண்டிருந்தன அவன் நினைவுகள்.
ஒரு நாள் என் நண்பன் ஒருவன் என்னை பார்க்க ஒரு மாலுக்கு வருமாறு கூற, நானும் அவனைக் காண சென்றிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது.
அவர் பெயர் பிரபாகர்; திவாகரின் தம்பி. சென்னையில் தான் பணிபுரிகிறார். ஆனால் இருவரும் இதுவரை இங்கே சந்தித்துக்கொண்டதில்லை. இருவருக்கும் பரிச்சயமாதலால் பொதுப்படையான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, தனக்குத் திருமணம் என ஒரு பத்திரிக்கையை நீட்டினார் அவர். அதனைப் பிரித்துப் பார்த்த எனக்கோ (ஆனந்த) அதிர்ச்சி!!!
மணமகள் என்ற இடத்தில் அன்று நான் கண்ட பெண்ணின் புகைப்படம். நான் கேள்விக்குறியோடு அவர் முகம் பார்க்க, அவர் முகமே பல கதைகள் கூறியது காதல் திருமணமென்று.
அதனை ஊர்சிதப்படுத்துமாறு, “அண்ணன் தான் முன்னே நின்னு ஏற்பாடு செய்தது. இரண்டு குடும்பத்துக்கும் ஆகவே ஆகாது. ஆனால், எங்க இருவருக்கும் விருப்பம். என்ன செய்வது என்று இருவரும் தவித்தபோது எங்க அண்ணாதான் எல்லாமே சமாளிச்சார். அவர் மட்டும் இல்லைன்னா… இவ்வளவு சீக்கிரமா சுபம் போட்டிருக்க முடியாது” என்று அவன் அண்ணாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தார் அவர்.
நான் அவர் கூறுவதையெல்லாம் புல்லரித்துக் கேட்டபடி இருந்த சமயம், “ஹாய்!” என வந்தமர்ந்தான் என் நண்பன். இந்த நாரதர் சங்கத்து உறுப்பினர்கள் இருப்பாகளே… அவர்களுக்குத் தலைவன்; அரவிந்தன், என்னைப் பற்றி அனைத்தும் அறிந்த என் நெருங்கிய தோழன்.
இருவரையும் பரஸ்பரம் நான் அறிமுகப்படுத்தி வைக்க, தன் லீலையை செவ்வனே செய்தான் என் நண்பன். பிரபாகரை திவாகர் என நினைத்துக்கொண்டு, “இவரைத்தானே ஊரில் மீட் பண்ணேன்… ரொம்ப புடிச்சிருக்கு… ஆனா இவருக்கு லவ்வர் இருக்கு, அது இதுன்னு சொல்லி அழுதுட்டு இருந்தே… இன்னைக்கு இவ்வளவு சந்தோசமா பேசிக்கிட்டு இருக்க?” என அவன் சரியாக போட்டுடைக்க, என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார் பிரபாகர்.
என் முகத்தில் கோபத்தையும் மீறி வழிந்த அசடைத் துடைத்தவாறே… ஒரு சாரியை உதிர்த்துவிட்டு அரவிந்தனை நோக்கி, “அது இவரோட அண்ணன்” என ரகசியமாக மொழிந்துவிட்டு, மேலும் அவன் எதுவும் உளரும் முன் அவனுடன் நகர்ந்தேன், அவன் செய்த காரியத்திற்கு வெகுமதி அளிக்க.
அன்று இரவு என் ஹாஸ்டல் அறையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன், பிரபாகரை சந்தித்ததைப் பற்றியும் அதன் பின் நடந்தவற்றைப் பற்றியும். அரவிந்தன் மீது கோபம் வர, அவனைத் திட்ட டயல் செய்தால், அட்டெண்ட் செய்து, ‘தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் செவிகள் இடைவிடாத சொல்லர்ச்சனைகளால் பஞ்சராகியுள்ளதால் தற்போது பேச இயலாது’ என சொல்லிவிட்டு கட் செய்துவிட்டான்.
எரிச்சலுடன் நான் போனைப் பார்க்க, ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. ஏனோ, நான் இணைப்பை எடுக்காமலே தெரிந்தது யாரென்று.
படபடக்கும் இதயத்துடன் அட்டெண்ட் செய்து “ஹலோ!” என்றேன்.
அப்புறம் என்ன… அடுத்து எல்லாமே அசுர வேகம்தான்… நம்ம ஹீரோவோட சைட் கதைய நான் சொல்லலையே!! நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க பாஸ்…
இவளுக்கு நான் வைத்த பேரே ‘முட்டைக் கண்ணழகி’ (மேடம் முறைக்குறாங்க… பரவாயில்லை… சமாளிப்போம்). மதுவை முதல் முதலில் அவங்க அப்பா அறிமுகப்படுத்தின போதே எனக்கும் பிடித்திருந்தது. ஆனால், படிக்கும் வயதில் அவள் மனதைக் குழப்புவதில் எனக்கு இஷ்டமில்லை.