(Reading time: 11 - 21 minutes)

டுத்து இந்த குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் அறிவழகன்..பூங்கொடியின் தங்கை மங்கையின் மகன், மகிழ்வேந்தனை விட ஆறு மாதமே பெரியவன், மங்கை வாழ்க்கைப்பட்டிருக்கும் இடம் ஒரு குக் கிராமம், அங்கிருந்து பள்ளி தூரம், அதனால் தன் சகோதரி வீட்டில் தங்கி தன் மகனை படிக்க வைக்க விரும்பினார் அவர், புகழேந்தியும் பூங்கொடியும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை..

மங்கையின் கணவர் மாணிக்கம் எதிலும் கறாராக இருப்பவர், அறிவழகனின் படிப்பு செலவுகளை அவர் பார்த்துக் கொள்வதாக இருந்தாலும், சாப்பாடு, தங்கும் இடம் இதற்கான செலவுகளை புகழேந்தி தானே பார்க்க வேண்டும், சொந்தம் என்பதால் அவர்களிடம் அதற்கான பணத்தை கொடுப்பதும் சரியாக இருக்காது என்று யோசித்தார்… இத்தனை பேர் இருக்கும் குடும்பத்தில் இவன் ஒருவன் இருப்பது எங்களுக்கு ஒன்றும் பாரம் இல்லை என்று புகழேந்தியும், பூங்கொடியும் கொஞ்சம் வலுவாக கூறியதால் அரை மனதாக அதற்கு சம்மதித்தார்…

அறிவழகனுக்கு இலக்கியா என்று ஒரு தங்கை உண்டு, ஆனால் பெண் பிள்ளையை யாரை நம்பியும் அனுப்ப மாணிக்கம் தயாராய் இல்லாததால் அவளை தங்களுடனே வைத்துக் கொண்டனர்…

மகிக்கும் அறிவுக்கும் ஒரே வயது என்பதால் ஒரே பள்ளியில், கிட்டத்தட்ட ஒரே வகுப்பிலும் படித்தனர்…. புகழேந்திக்கு தன் பிள்ளைகளில் யாராவது ஒருவர், தன்னைப்போல் பேராசிரியராக வர வேண்டுமென்பது ஆசை, கிட்டத்தட்ட அதை மகியிடம் எதிர்பார்த்தார்… அதேபோல் அறிவழகனின் தந்தையும், தன் மகன் படித்து, ஒரு பெரிய அலுவலகத்தில் பணிபுரிய வேண்டுமென்று நினைத்தார்..

ஆனால் மகி, அறிவு இருவருமே ஹோட்டல் மேனேஜ்மென்ட் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தனர்.. படித்து முடித்ததும் வெளிநாட்டில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வேலைக்கு போக விரும்பாமல், அவர்களே ஒரு ரெஸ்ட்டாரன்ட் ஆரம்பிக்க நினைத்தனர்.. தங்கள் ஆசையை பிள்ளைகள் நிறைவேற்றவில்லையென்றாலும், அவர்களுக்கென்று ஒரு குறிக்கோள் வைத்து இருவரும் அதை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்வதால், இருவரின் தந்தைகளும் அதற்கு தடை சொல்லவில்லை..

இருவரும் நினைத்தப்படி படித்தும் முடித்ததும் அவர்கள் தந்தைகளின் உதவியோடு ஒரு ரெஸ்ட்டாரன்ட்டை ஆரம்பித்தனர்… நம் நாட்டு உணவு மட்டுமல்லாமல், சைனீஸ், இத்தாலி, பர்மா நாட்டு உண்வு வகைகளும் கிடைக்கும்படி அந்த ரெஸ்ட்டாரன்ட்டை நடத்தினர்… அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகவே அந்த ரெஸ்ட்டாரன்ட் நடந்துக் கொண்டிருக்கிறது… அவர்களின் லட்சியமே, ஹோட்டல் சரவணபவன் மாதிரி உலகமெங்கும் கிளைகள் திறக்க வேண்டுமென்பது தான்..

அறிவு படிக்கும் வரையில் அவன் பெரியம்மா வீட்டில் தங்குவது பரவாயில்லை.. ஆனால் அதன்பிறகும் அவன் அங்கே தங்க வேண்டாமென்பது மாணிக்கத்தின் எண்ணம், அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அங்கு கொடுத்துவிட்டு தங்கலாம், ஆனால் புகழேந்தியோ, இல்லை பூங்கொடியோ அதை விரும்பமாட்டார்.. அதனால் தனியாக ஒரு அறை எடுத்து அறிவழகனை தங்க சொன்னார்.. அவனும் தந்தை பேச்சை மீறாமல், ஒரு தனி அறை எடுத்து அங்கு தங்கிக் கொண்டான்.. ஆனால் பேருக்கு தான் அவன் அந்த அறையை வாடகை எடுத்திருந்தான்.. மத்தப்படி அவன் அதிகநேரம் புகழேந்தியின் வீட்டில் தான் இருப்பான்..

ஏனென்றால் அவனால் அந்த வீட்டு சமயலை சாப்பிடாமல் இருக்க முடியாதென்பது ஒரு காரணம் என்றால், மகியும் அவனும் எப்போதும் ஒன்றாகவே இருப்பது இன்னொரு காரணம், இப்போது ஒன்றாக வேலை பார்ப்பதால் வேலை முடிந்தும் அந்த வீட்டிலேயே மகியோடே தூங்கியும் விடுவான்.. எப்போதாவது தான் தன் அறைக்கு செல்வான்.. ரெஸ்ட்டாரன்ட் சம்பந்தமான கணக்கு வழக்குகளை பார்க்கவும் அந்த அறையை மகியும் அவனும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அறிவழகன் அங்கேயே இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த வீட்டு சூழல் தான்.. அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக அந்த வீட்டில் வசிக்கவில்லையென்றாலும்,  கிட்டத்தட்ட அப்படி ஒரு சூழல் அந்த வீட்டில் இருக்கும், அந்த வீட்டில் புகழேந்தி குடும்பம் மட்டுமல்லாமல், கலையரசியும் தன் பிள்ளைகளோடு அங்கே தானே இருக்கிறார்.. கூட அறிவழகனும் அந்த வீட்டில் ஒருவனாக மாறியிருந்தான்.. இதில் எழிலரசி தனியே தன் கணவன் பிள்ளைகளோடு வசித்தாலும், முக்கால்வாசி நாட்கள் தன் தாய் வீட்டிலேயே தான் இருப்பார்..

எழிலரசியின் குடும்பத்தை தவிர தனக்கென்று உறவுகள் இல்லாததால், கதிரவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.. புகழேந்தியுடன் ஒன்றாக பணியாற்றியதாலும், நல்ல நட்பும், கல்லூரியில் கதிரவனுக்கு புகழேந்தி சீனியர் என்ற முறையில் அவரிடம் மரியாதையும் வைத்திருந்தார் கதிரவன்.. அதனால் அவரும் கூட எழிலரசியுடன் சில சமயங்களில் தங்கிவிடுவார்.. மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். அதனால் தாய் வீட்டுக்கு அடிக்கடி வருவதற்கு எழிலரசிக்கு எந்த பிரச்சனையுமில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.