(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 17 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

காலையில் சுடர் ஆனந்தியை பார்க்க தயாராகிக் கொண்டிருந்தாள். நேற்று மகி அப்படி பேசியதால் ஆனந்தியை பற்றி எதுவும் அவனிடம் கூறவில்லை. அவன் கோபமாக வெளியில் சென்றதும் தான் காரணத்தை சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. சரி திரும்ப வந்ததும் சொல்லலாம் என்று நினைத்து படுத்தவள் உறங்கியிருந்தாள்.

இப்போது கிளம்பும் போது அவனை மூட்அவுட் செய்ய வேண்டாமென்று நினைத்தவள், ஆனந்தியை பார்க்க தான் செல்கிறேன் என்று சொல்ல முடிவெடுத்தாள். ஆனால் அதற்கு முன்னரே மகி அவளிடம்,

“சுடர் தனியா போக வேண்டாம்.. நான் உன்னை கூட்டிட்டுப் போறேன்..” என்று கூறினான்.

அவளோ ஆச்சர்யத்தோடு, “நான் அமுதன் வீட்டுக்கு போறேன் ஞாபகம் இருக்கா?” என்றுக் கேட்டாள்.

“ஞாபகம் இருக்கு.. என்ன இருந்தாலும் அமுதன் உன்னோட ப்ரண்ட்.. அது மட்டுமில்லாம மன்னிக்கிறது தான் மனுஷ குணம்.. சும்மா அவன் மேல கோபத்தை பிடிச்சு வச்சிட்டு இருக்கறதால என்ன ஆகப் போகுது.. இப்போ நீ அமுதனை மட்டும் பார்க்கப் போகல.. அவங்க அம்மாவையும் பார்க்கப் போற.. அவங்க உடம்பு சரியில்லாம இருக்க இந்த நேரத்துல, நீ அமுதன் கூட பேசாம இருந்தா அதுக்கும் அவங்க கஷ்டப்படுவாங்க.. அதனால அவன் மேல இருக்க உன்னோட கோபம் குறைஞ்சதும் நல்லதுக்கு தான்..” என்றான்.

ஆனால் உண்மையிலேயே அவன் மீது இருந்த கோபம் அவளுக்கு குறையவில்லை. மகி முன் அவனை விட்டுக் கொடுக்க கூடாதென்று தான் அவள் அமுதன் மீது கோபம் இல்லாதது போல் நடந்துக் கொண்டாள். ஆனால் இப்போது மகிழ் சொல்வதை பார்த்தால், ஆனந்தி ஆன்ட்டிக்காக சார்லி செய்ததை மறந்து அவனை மன்னிக்க தான் வேண்டும் போல.. நேற்றும் ஆனந்திக்காக தானே அவனிடம் பேசினாள்.

“என்ன யோசனை போலாமா?”

“ஆமாம் ஆனந்தி ஆன்ட்டி இங்க வந்தது உனக்கு எப்படி தெரியும்?”

“எப்படியோ தெரியும்.. உனக்கெதுக்கு இப்போ அது..”

“சித்தி தானே சொன்னாங்க.. அதை என்கிட்ட சொல்றதுக்கு என்ன?”

“ஆமாம் எழில் அத்தை தான் சொன்னாங்க.. இப்போ கிளம்பலாமா?” என்றதும், சரி என்று தலையாட்டினாள்.

அங்கே அருள்மொழியும் அன்னையிடம் தோழியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி தான் ஆனந்தியை பார்க்க கிளம்பியிருந்தாள். அவரும் ஏன்? எதற்கு? என்று கேட்டு அவளை தொல்லை செய்யவில்லை. நிச்சயம் நின்று போயிருந்ததால் அவரும் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார். மகளும் வருத்தப்பட்டுக் கொண்டு இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் அவள் வெளியில் கிளம்பி செல்லும் போதெல்லாம் சரி என்று சம்மதம் தெரிவித்தார். மகள் இப்படி வீட்டிலிருக்கும் சமயம் எங்கேயும் அனாவசியமாக வெளியில் செல்ல மாட்டாளே.. தொடர்ந்து மூன்று நாட்களாக வெளியில் செல்கிறாளே என்று கலை யோசிக்கவில்லை. அவரது அப்போதைய மனநிலையில் அதையெல்லாம் யோசித்து பார்க்க அவருக்கு தோன்றவில்லை.

ஆனால் பூங்கொடி அதெல்லாம் யோசித்து பார்த்தார். தினம் அருள் வெளியில் செல்வதும், அதற்கு கலை ஒத்துக் கொண்டது அவருக்கு அதிசயமாக இருந்ததே தவிர, அவரும் அருள் வெளியில் செல்வதை தவறாக சந்தேகிக்கவில்லை. ஏனென்றால் அருள் அம்மா பொண்ணு.. கலை சொல்வதற்கெல்லாம் அப்படியே சரி என்று தலையாட்டுவாள். வீட்டிலிருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வாள். அதிலும் அம்மா சொல்வது தான் அவளுக்கு வேதவாக்கு.. ஆனால் அவள் வாழ்க்கை குறித்து அவர்கள் எடுத்த முடிவெல்லாம் இப்படி ஆகிப் போனதில் வருத்தமாக இருந்தது. அதனால் பூங்கொடியும் கலையரசி  போல், அருள் மனதில் நிச்சயம் நின்றதில் வருத்தம் இருந்தாலும், இப்படி மனதை வேறு திசையில் திருப்பினாள் சரியாவாள் என்று நினைத்தார். 

அருள்மொழிக்கு தான் அன்னையிடத்தில் பொய் கூறிவிட்டு வந்ததில் மனதிற்கு உறுத்தலாக இருந்தது. அன்னையிடம் அவள் எதையும் மறைத்ததில்லை. அமுதவாணன் விஷயத்தில் தான் முன்னேயும் சரி, இப்போதும் சரி இப்படி மறைக்கும் நிலை வந்தது. அதனால் நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தாலும், இப்போது அன்னையிடம் சொல்வதும் சரியிருக்காது என்று தான் மறைத்தாள். என்னத்தான் எழிலரசியிடம் சொல்லிவிட்டு தான் ஆனந்தியை பார்க்க கிளம்பியிருந்தாலும் கூட, கலையிடம் சொல்லாது அவளுக்கு வருத்தம் தான், இது வேறு எதுவும் புது பிரச்சனையை கொண்டு வராமல் இருந்தால் போதும்.. ஆனந்தியிடம் தெளிவாக தன் நிலையை விளக்கிக் கூறி, இனி இப்படி அன்னையிடம் பொய்யுரைக்கும் சந்தர்ப்பம் வராமல் பார்த்துக் வேண்டும் என்று நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.