(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 18 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

முதவாணனின் திடிர் செயலில் முதலில் ஒன்றும் புரியாமல் அப்படியே சில நொடிகள் அருள்மொழி அமைதியாக நின்றிருந்தாள். அதற்குள் “ஆன்ட்டி..” என்ற குரலில் தான் அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு புரிந்து அடுத்து உடனே அவன் பிடித்திருந்த கையை அவனிடம் இருந்து இழுத்துக் கொண்டாள். அடுத்து அவள் யார் வந்திருப்பது என்று வாசலை பார்க்க, அங்கே நின்றிருந்த சுடரை பார்த்ததும் அவள் மனதில் ஆத்திரம் எழுந்தது.

அருள் கையை இழுத்ததும் தான், அமுதனுக்கே அவன் என்ன செய்து வைத்திருக்கிறான் என்பது விளங்கியது. அவளது கையில் ரத்தத்தை பார்த்ததும் அவன் அவனையே மறந்து பதட்டத்தில் அப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டான். இதில் அவனும் வாசலில் வரும் சத்தத்தை கேட்டு திரும்பி பார்க்க, அங்கே நின்றிருந்தவளை பார்த்து, உடனே அருள்மொழியின் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த கோபத்தில் அவள் சுடரை எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்று மனம் பதறியது. ஆனால் அவளோ சுடரை எதுவும் சொல்லவில்லை. அதற்கு பதில் அவனிடம் ஒட்டுமொத்த கோபத்தையும் ஆதங்கத்தையும் காட்டினாள்.

“உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. எந்த உரிமையில் இப்படியெல்லாம் செய்றீங்க.. நீங்க செஞ்சதெல்லாம் நான் மறந்துட்டேன்னு நினைச்சிட்டீங்களா? எல்லாமே எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. உங்க முகத்தையே திரும்ப நான் பார்க்க கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. இருந்தும் இப்படி உங்களை அடிக்கடி பார்க்கிற சந்தர்ப்பம் அமையுதுன்னா அது ஆன்ட்டிக்காக மட்டும் தான்.. அவங்களுக்காக தான் நான் இங்க வரேன்.. அதுவும் இன்னைக்கு தான் கடைசி.. நீங்க இல்லங்கிறதால தான் நான் வந்ததே..

ஏற்கனவே நீங்க செஞ்சது பத்தாதா? இன்னும் எனக்கு என்ன செய்யலாம்னு காத்திருக்கீங்க.. அப்போ உங்க ப்ரண்ட்க்காகன்னு அப்படி செஞ்சிங்க.. இப்போ என்ன இருக்கு.. உங்க ப்ரண்ட் நினைச்சது போல தான் அவங்க ஆசைப்பட்டது போல மகியை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்களே.. அப்புறம் என்ன..” என்று சுடரொளியை பார்த்தப்படியே பேசியவள், பின் அவனை பார்த்து கைகூப்பி.. “ ப்ளிஸ் இன்னொரு முறை இப்படியெல்லாம் என்கிட்ட நடந்துக்காதீங்க, திரும்பவும் ஒரு அவமானம் வந்தா அதை என்னால தாங்கிக்க முடியாது.. அதுக்கும் மேல எங்க அம்மா ரொம்பவுமே வேதனை படுவாங்க..” என்று கெஞ்சலாக கூறினாள். அவள் பேசியது அமுதனின் மனதை மிகவுமே வேதனைப்படுத்தியது.

அவர்களை பார்த்தப்படி நின்ற சுடரொளிக்கு ஒன்றுமே புரியவில்லை. அருள் இங்கே எப்படி? அதுவும் சமையலறையில் சார்லியுடன்.. மகிழ் தெரு முனையில் இறக்கி விட்டதும், வீட்டு எண்னை தேடி கண்டுப்பிடித்து வீட்டிற்கு வந்தவள், கதவு திறந்தே இருந்ததை பார்த்ததும்.. “சார்லி அலுவலகத்திற்கு சென்றிருப்பான், ஆனந்தி ஆன்ட்டி வீட்டில் தனியாக தானே  இருப்பார்கள்.. கதவை திறந்து  போட்டுவிட்டு  அவர்கள் உள்ளே என்ன செய்கிறார்கள்..” என்று மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டவள்.. ஆனந்தியின் உடல்நிலையை பற்றி அறிந்ததால், அவருக்கு ஏதாவது பிரச்சனையோ என்று பதறியதால், அழைப்பு மணியை அழுத்த வேண்டுமென்றோ.. கதவை தட்ட வேண்டுமென்றோ தோன்றாமல், “ஆன்ட்டி” என்று அழைத்தப்படியே உள்ளே வந்தாள்.

இங்கு அருள் இருப்பாள் என்றோ.. இருவரும் இப்படி ஒரு நிலையில் நிற்பார்கள் என்றோ நினைக்கவில்லை.. அதில் திடிரென்று அருள் இப்படி பேசவும்.. அது மனதிற்கு வருத்தமாக இருந்தது. அப்படியே வாசலுக்கு அருகில் தான் நின்றிருந்தாள்.

அதற்குள் ஆன்ட்டி என்ற சத்தமும், அதை தொடர்ந்த பேச்சும் அறைக்குள் இருந்த ஆனந்திக்கு கேட்டதால், “அருள் யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாள் என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டே அவர் அறையிலிருந்து வெளியே வந்தார். அங்கே வாசலில் நின்றிருந்த சுடரொளியை பார்த்ததும் மகிழ்ந்தவர், “சுடர் வா வா..” என்று மகிழ்ச்சியோடு கூப்பிட்டப்படியே அவள் அருகில் வந்தவர், அப்போது தான் சமையலறையில் நின்றிருந்த அமுதனையும் அருள்மொழியையும் பார்த்தார்.

“இவன் எப்போது வந்தான்..?” என்று தோன்றிய கேள்வியோடு அருள்மொழியை பார்க்க அவள் முகமே ஏதோ பிரச்சனை என்று சொல்லியது. அமுதன், சுடர் முகமும் கூட சரியில்லை. ஏற்கனவே நடந்த விஷயங்கள் அவருக்கு தெரியும் என்பதால், சுடரொளியை பார்த்தது தான் அருள்மொழிக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தார். அவருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. இரண்டுபேருமே முக்கியம் தான்.. அதனால் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்.

அருள்மொழிக்கும் அவர் நிலை புரிந்தது போல.. அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டவள், “ஆன்ட்டி உங்களை பார்க்க தான் கெஸ்ட் வந்திருக்காங்க போல.. நீங்க கூப்பிட்டுகிட்டு போய் பேசிட்டு இருங்க.. நான் கொஞ்ச நேரத்தில் டிஃபனும், காஃபியும் எடுத்துட்டு வரேன்..” என்று கூறினாள். அதில் நிம்மதியடந்த ஆனந்தி சுடரொளியை அறைக்கு கூட்டிச் சென்றார்.

அமுதன் இன்னும் அதே இடத்தில் நிற்க, *உங்களுக்கு தனியா சொல்லணுமா.. எதுக்கு இன்னும் இங்க நிக்கறீங்க.. உங்க ப்ரண்ட் தான் வந்திருக்காங்கல்ல.. போய் அவங்க கூட பேசுங்க” என்று கோபமாக பேசினாள். அமுதனும் அதன்பின் அங்கே நிற்காமல் ஆனந்தியின் அறைக்குச் சென்றான்.

உள்ளே வந்ததும் சுடர் ஆனந்தியின் உடல்நலம் பற்றி விசாரித்தாள். அதை தாண்டி மூவரும் வேறெதுவும் பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அருள் காஃபி மற்றும் சேமியா கிச்சடி செய்துக் கொண்டு வந்து தந்தவள், உடனே கிளம்புவதற்கு ஆனந்தியிடம் அனுமதி வேண்டினாள். ஒரு முக்கியமான விஷயம் பேச தான் அவளை ஆனந்தி அழைத்திருந்தார். ஆனால் இப்போது அதைப்பற்றி பேசுவதற்கான நேரமில்லை என்பதை உணர்ந்தவர், அவள் செல்வதற்கு அனுமதி தந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.