(Reading time: 7 - 13 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

கட்டியிருந்தேன்னா..கல்யாணத்துக்குப் பிறகு வேற யாராவது உன்னை விட அழகா கண்ணுல பட்டாங்கன்னா...அவங்க அழகுல மயங்கி உன்னைய டைவர்ஸ் பண்ணிட்டு...அவங்களைக் கட்டினாலும் கட்டிக்குவான்!...அப்புறம் அதே மாதிரி...தொடர்ந்துக்கிட்டே இருப்பான்!...அவன் ஒரு தொடர் கதை!...கல்யாண மன்னன்!” சவிதா சொல்லி விட்டு பற்களை “நற...நற”வென்று கடித்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் சொல்றதுதாங்க உண்மை!...அவனோட சுயரூபம் எனக்கு இப்பத்தாங்க புரியுது!....இத்தனை வருஷம் என்கிட்ட நல்லவனாட்டம் நடிச்சிருக்கான்!..நய வஞ்சகன்!” அந்த மைதிலி தன் நெஞ்சின் மீது கை வைத்துக் கொண்டு சொன்னாள்.

“அம்மா தாயி..ஏதோ இந்த மட்டிலாவது புரிஞ்சுக்கிட்டியே...அந்த அளவுக்கு பரவாயில்லைன்னு நெனச்சுக்கோ!” என்றாள் சவிதா.

சில நிமிடங்கள் அவர்கள் மூவரும் அவஸ்தையான அமைதியில் திளைத்திருக்க, மைதிலி கேட்டாள்.

“இப்ப புரியுதுங்களா?...நான் ஏன் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன்!னு?”

அந்தக் கணம் அர்ச்சனா பெருமிதம் கொண்டாள். தன் செய்த அக்காரியம் பலர் மனதைப் புண்படுத்தி விட்டதற்காய் தன்னைத் தானே நொந்து கொண்டு கிடந்தவள் லேசாய் மகிழ்ந்தாள். “ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை என் செயல் காப்பாற்றி இருக்கின்றதென்றால்...அதனால் எத்தனை பேர் மனம் புண் பட்டாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை!” என்று அவள் மனம் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டது.

அர்ச்சனா முகத்தில் தோன்றிய பிரகாச ஒளியின் காரணத்தைப் புரிந்து கொண்ட சவிதா, “பாத்தியா அர்ச்சனா?...“தப்பு செஞ்சிட்டேன்!...தப்பு செஞ்சிட்டேன்!”ன்னு புலம்பிக்கிட்டிருந்தியே?...நீ செய்தது தப்பில்லை...அது பெண் குலத்தைக் காக்க அந்த இறைவன் உன் மூலமா விளையாடிய விளையாட்டுன்னு இப்ப்ப் புரிஞ்சுக்கிட்டியா?”

அப்போது பேரர் இரண்டு காஃபி கொண்டு வந்து வைக்க,

“பேரர்...இன்னொரு காஃபி கொண்டு வா!” என்றாள் அர்ச்சனா.

“இல்லை...பரவாயில்லை...வேண்டாம்!” அந்த மைதிலி நாசூக்காய் மறுக்க,

“ப்ச்...பரவாயில்லை சாப்பிடும்மா!..”என்று சொல்லி பேரரை அனுப்பினாள் அர்ச்சனா.

மூவரும் காஃபி அருந்திய பின் ரெஸ்டாரெண்டை விட்டு வெளியேற, அப்பெண் போகும் முன் மீண்டுமொரு முறை அர்ச்சனாவிற்கு நன்றி சொல்ல,

“கடந்த காலத்தைக் கசந்த காலமாய் நினைத்து ஒதுக்கிட்டு...வரும் காலத்தை வசந்த காலமாய் ஆக்கு!...வீட்டுல பெரியவங்க மூலமா ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டு...நல்லா சந்தோஷமா இரும்மா!” என்று வாழ்த்தி அனுப்பினாள் அர்ச்சனா.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.