(Reading time: 14 - 27 minutes)

01. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்க்கையை பற்றி அளவுக்கு அதிகமாகவே தான் அளசுவதாக கூறுகிறார்களே உண்மையாகவே தான் அப்படி தான் செய்கிறோமா என்று எண்ணி பார்த்தாள். இல்லை தான் வாழ்க்கையின் நிதர்சனம் தெரிந்து நடந்து கொள்கிறோமென முடிவெடுத்தாள். ஆனால் தன் தாயாரோ தன் அக்காவோ அதை ஒத்துக் கொள்ள தயாராக இல்லையென்று தெரிந்தும் தான் என்ன செய்ய முடியுமென விட்டு விட்டாள். ஆனால் அவர்களோ அதை விட தயாராக இருந்தால் தானே. இனியா சைக்காலாஜி படித்ததால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறாளாம். அவளை தெரியாமல் படிக்க வைத்து விட்டார்களாம். அவள் ஆசைக்கு மதிப்பு கொடுத்தது தப்பாயிற்று என்று வாதாடுபவர்களிடம் போய் அவள் என்ன தான் சொல்வாள். அவள் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று புரிந்து கொண்டு அமைதியாகவே இருந்தாள்.

எப்படி தான் இன்று இவர்களிடம் தப்பிப்பது என்றே தெரியவில்லையே என்று யோசித்து கொண்டிருந்தாள். அப்போதென்று பார்த்து சித்தி என்று அபி ஓடோடி வந்தாள். இனியா குழந்தையை தூக்கி முத்தமிட்டமாறே தான் தப்பினோம் என்று நினைத்து குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள். இனியாவின் அம்மா லட்சுமியும் இனியாவை முறைத்து விட்டு மூத்த மருமகன் பாலுவை வரவேற்றாள். மூத்த மகள் ஜோதியை மாப்பிள்ளைக்கு உணவு ஏதாவது கொண்டு வரும்படி கூறினாள்.

பாலு, “இருக்கட்டும் அத்தை இப்போது தான் அபி அடம்பிடித்தால் என்று  பழச்சாறு குடித்து விட்டு வந்தோம், அது இருக்கட்டும் நான் வரும் போது ஏதோ சத்தமாக இருந்ததே என்ன அத்தை என்று விசாரித்தான்”.

லட்சுமி இனியாவை முறைக்க இனியாவோ பாலுவை முறைத்தாள். பாலுவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.

பாலு, “என்ன இனியா என அன்பாக விசாரித்தான்”.

இனியா “எத்தனை நாளாக அத்தான் உங்களுக்கு என் மீது இந்த வன்மம் என்று கேட்டாள்”.

பாலு சுத்தமாக குழம்பி போனான். கணவனின் முகத்தை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு ஜோதியே அவன் உதவிக்கு வந்தாள். "இல்லைங்க இனியாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்திக்கிட்டு இருந்தோம் நீங்க வந்ததால தப்பித்தோம்னு நினைத்திருப்பா மறுபடியும் நீங்களே அதை நினைவுபடுத்தனீங்களா அதான் உங்களை முறைக்கிறா" என்று கூறினாள்.

பாலு சிரித்துக் கொண்டே "உனக்கு திருமணம் செய்து கொள்வதில் என்னம்மா பிரச்சனை. நன்றாக படித்திருக்கிறாய், நல்ல வேலையிலும் இருக்கிறாய், வயதும் 23 ஆகிறது. அத்தை வருத்தப்படுவதிலும் நியாயம் உள்ளது தானே" என்று அத்தைக்கு பரிந்து பேசி மறுபடியும் இனியாவின் முறைப்புக்கு ஆளானான்.

அதை பார்த்த லட்சுமி மறுபடியும் மகளிடம் பாய்ந்தாள்.

"என்னடி முறைக்கிறாய் மற்ற வீடுகளில் இருக்கும் மாப்பிள்ளைகளை போல் அல்லாமல் உன்னை தன் தங்கை போல் நினைத்து அறிவுரை கூறும் மனிதரை போய் முறைக்கிறாய். உனக்கு நானே தான் அதிக இடம் கொடுத்து கெடுத்து விட்டேனு உங்க அத்தைங்க சொல்லும் போதெல்லாம் நான் அதை கண்டு கொண்டதில்லை, ஆனால் இப்ப தானே புரிகிறது" என்று புலம்பி கொண்டே போனவளை பாலு தான் பேசி நிறுத்தினான்.

"விடுங்க அத்தை நான் உண்மையாகவே இனியாவை என் தங்கையை போல் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இனியாவிற்கு என்னிடம் எல்லா உரிமையும்     இருக்கிறது எனவே என் தங்கையை இப்போது திட்டாமல் இருப்பீர்களாம் " என்று சொல்லி என்ன அத்தை என்று வேறு கேட்டான்.

லட்சுமியால் என்ன தான் செய்ய முடியும், சரியென்று குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வரலாம் என திரும்பினாள். திரும்பிய இடத்தில் அபி படுத்துக் கொண்டிருந்தாள். குழந்தையை பார்த்த லட்சுமிக்கு மனது கஷ்டமாகி போனது இவளது பிரச்சனையில் பேத்தியை கவனிக்கவில்லையே என்று, அருகில் போய் பேத்தியின் தலையை மென்மையாக வருடினாள்.

உடனே விழித்த அபி பாட்டியிடம் முகத்தை திருப்பினாள்.

"என்னடா செல்லம்" என்று அவள் அருகில் அமர்ந்தாள் லட்சுமி.

"வீட்டிற்கு செல்லக்குட்டினு என்ன கொஞ்சறது எல்லாம் சும்மா தான், நான் எதிர்லயே வந்திருக்கேன் என்ன கண்டுக்காம சண்டை வளத்துட்டு இருக்கீங்க அதுவும் என் செல்ல சித்திக் கிட்ட" என்று பொரிந்து தள்ளினாள்.

ஒருவழியாக அவளை சமாதான படுத்தி அனைவருக்கும் உணவு கொடுத்து முடிப்பதற்குள்ளே லட்சுமிக்கு ஒரு வழியாகி போனது. சோர்ந்து போய் காணப்பட்டாள்.

இனியாவிற்கு தாயை பார்த்து வருத்தமாகி போனது. தாயிடம் சென்று “என்னம்மா சோர்வாக தெரிகிறாய். தலை வலிக்கிறதா தைலம் தேய்த்து விடட்டுமா காலையும் பிடித்து கொண்டிருக்கிறாயே காலையும் பிடித்து விடட்டுமா அம்மா” என்று பரிவாக கேட்டவளையே உற்று பார்த்தாள் லட்சுமி.

“எத்தனை நாள் இனியா இவ்வாறு என் மேல் பாசம் இருப்பது போல் நடிக்க போகிறாய்”  என்று கேட்டாள்.

இனியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. “என்னம்மா என்ன கூறுகிறாய்? நான் நடிக்கிறேனா அதுவும் நான் உன் மேல் வைத்திருக்கும் பாசத்திலா அம்மா சந்தேக படுகிறாய்” என இனியா துடித்து போனாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த பாலுவுக்கும் ஜோதிக்குமே தாங்கவில்லை.  பாலு  “என்ன  அத்தை  இப்படி பேசி விட்டீர்கள்”    என     கேட்டான்.

 

“பின்ன என்ன மாப்பிள்ளை இவளுக்கு வயது என்ன ஆகிறது என்று பார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள். எத்தனை வரன் வந்தது ஒன்றுக்கும் பிடி கொடுக்க மாட்றாளே, வயது ஏறிக் கொண்டே போகிறதே அது இவளுக்கு ஏன் புரிய மாட்டுது, இல்லை இவளுக்கு மட்டும் வயது குறைகிறது என்ற எண்ணமா, ஒவ்வொரு வரன் வருகிற போதும் இவளிடம் எவ்வளவு கெஞ்சி பார்க்கிறேன் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இப்போது வந்து எனக்கு உடம்பு சரியில்லையென்று உதவ வருகிறாளாம். உண்மையா எனக்கு எந்த நோயும் இல்லை மாப்பிள்ளை இவளை நினைத்து நினைத்து தான் என் உடம்பு கெட்டு கொண்டே வருகிறது” என்று மருமகனிடம் புலம்பினாள்.

 

பாலுவிற்கு பிரச்சனை என்ன என்பது தெளிவாக புரிந்து விட்டது. மௌனமாக இனியாவின் அருகே அமர்ந்தான். “இனியா நான் உண்மையாகவே உன்னை என் தங்கையாக தான் நினைக்கிறேன், நீயும் அப்படி என்னை நினைக்கிறாயா” என்றான்.

 

இனியாவோ “என்ன அத்தான் இப்படி கேட்டு விட்டீர்கள் உங்களை அண்ணாவென்று அழைக்கவில்லையே தவிர நானும் உங்களை அப்படி தான் நினைக்கிறேன்” என்று கூறினாள்.

 

பாலு மெலிதாக புன்னகை புரிந்து விட்டு "சரி உன் பிரச்சனை தான் என்ன இனியா" என்று வினவினான்.

 

இனியா மூச்சை இழுத்து விட்டு விட்டு “எனக்கு திருமணத்திலே நம்பிக்கை வர மறுக்கிறதே அத்தான்” என்று கூறினாள்.

 

 “என்னமா இப்படி கூறுகிறாய்” என்று கேட்டான் பாலு.

 

“நான் தினமும் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கிறேன் தெரியுமா அத்தான். அதில் யாருமே திருமணம் செய்து கொண்டு உண்மையான சந்தோஷமாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏன் திருமணம் செய்து கொண்டேன்னு வருந்துபவர்களையும் இது என் தலைவிதி என்று நினைத்து கொண்டு வாழுபவர்களையும் தான் அத்தான் நான் சந்திக்கிறேன், பின் எப்படி எனக்கு திருமணத்தில் நம்பிக்கை வரும்” என்று கேட்டாள்.

 

பாலு, “ஏன் இனியா உன் அன்னை தந்தை, நான் உன் அக்கா எல்லாம் உன் கண்களுக்கு தென் படவில்லையா” என கேட்டான்.

 

அத்தான் உங்களை வேண்டுமானால் ஒத்துக் கொள்கிறேன், என் அன்னை தந்தையை இந்த விஷயத்தில் ஒத்து கொள்ளவே மாட்டேன் என அழுத்தமாக கூறினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.