(Reading time: 15 - 30 minutes)

06. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ற்று முன்னர்,

காலையில் சந்தியாவை அறைந்த பின் கார்த்திக்கிற்கு எதுவுமே ஓடவில்லை. சூர்யா வேறு திட்டியதில் குற்ற உணர்ச்சியில் உலைந்து கொண்டிருந்தான். ஒரு வேளை தான் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து, சந்தியா வர மறுத்தால் அவளை பார்க்க முடியாமல் போய் விடுமோ  என்றே  தன்னைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என சூர்யாவிடம் கோரிக்கை விடுத்திருந்தான். அதனாலே சூர்யா, கார்த்திக்கைப் பற்றி பெரிதாக எதுவும் சந்தியாவிடமோ அவள் குடும்பத்தாரிடமோ சொல்லவில்லை. சூர்யாவிடம் பேசிய பின் நேர்முக தேர்வை கருத்தூன்றி செய்ய முடியாததால் மதுவிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்தான். எந்த அழைப்பையும் ஏற்க விரும்பாமல் தனது போன்ஐ ஊமையாக்கி விட்டு, சந்தியா வந்தால் மட்டும்  தன்னை இண்டர்காமில் அழைக்குமாறு மதுவிடம் கூறி இருந்தான்.

 

மதுவிற்கோ சந்தியா பேசிய விதம் சுத்தமாக பிடிக்காததால், அவளை தேர்வு செய்யாமல் கைகழுவ முடிவு செய்தாள். மேலும்  கார்த்திக் அவள சந்திப்பதையும்  விரும்பவில்லை. சந்தியா சொன்ன காதல் கதையை நம்பி வெகுண்டு எழுந்தாள் மது.

 

அந்த என்விஷன் மேக்ஸ்  நிறுவனத்தில், எழுத்து தேர்வையும், கலந்தாய்வு தேர்வையும்  முன்தினமே நடத்தி, ஏறக்குறைய தேர்வு செய்யப்பட்டவர்களை மதுவும், கார்த்திக்கும் ஒரு முறை நேரில் பார்த்து திருப்தியடைந்த பிறகே உறுதி செய்வது வழக்கம். அப்படி செய்வதால் அவர்களுக்கு இரட்டை லாபம் - ஒன்று, தேர்வு செய்யும் குழுவில் உள்ளவர்கள் மது, கார்த்திக்கிற்கு பயந்து சரியாக தேர்வை நடத்துவர், இரண்டு, இப்படி சரி பார்த்து கொள்வதால் மன திருப்தியோடு  புதிதாக பணிக்கு வர இருப்பவரிடம் நட்புறவையும்  ஏற்படுத்திக் கொள்வது போல் ஆகுமே. இன்றைய காலகட்டத்தில் 'அவுட்சோர்சிங்' சார்ந்த நிறுவனங்களில் பணியாளர்களை தக்க வைத்து கொள்வதிலும் திறம்பட  செயல்பட வேண்டுமே! அதிலும்  திறமையானவர்களை விட்டு விட முடியுமா?  சந்தியாவும் அப்படித்தான். கணிதத்தில் சூரப்புலி. பேச்சில் சொல்லவா வேண்டும்? முந்திய நாள் தேர்வில் கலக்கி விட்டாள். அதுவும் கலந்தாய்வில் அவளை கண்டு அசராதவர்கள் இல்லை. இந்த செய்தி மதுவின் காதுகளுக்கு எட்டியது. கார்த்திக்கிற்கு  வெளிநாட்டு பயணம் இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை நேர்முக தேர்வை நடத்த முடிவு செய்திருந்தனர்.

 

தனது குடும்பத்தார் தவிர மற்ற பெண்களிடம் பேசுவதை நேர விரயம் என வெறுக்கும் கார்த்திக், கண்களை மூடியவாறே இப்படி ஒரு பெண்ணிற்காக உருகி கொண்டிருக்கிறோமே  "அம் ஐ இன் லவ் வித் சந்தியா?" என்று தன்னை தானே கேட்க, "காதி, ஆர் யு இன் லவ் வித் சந்தியா ?" என அது  எதிரொலிக்க குழப்பமாக கண் விழித்த கார்த்திக் முன் ஆத்திரத்துடன் மது நின்று கொண்டிருந்தாள். அவனோ அவள் கோபத்தை சட்டை செய்யாமல்

"சந்தியாவா? வந்தாளா? எங்க இருக்கா?" என ஆர்வமாக கேட்க,

மது எரிச்சலுடன் "அவ போயிட்டா" என்றாள்.

கார்த்திக், உடனே ஓடிப்  போய் சந்தியாவை பிடித்து விடுபவன்  போல "எப்போ?" என வேகமாக எழுந்து நடக்க,  அவள் எதிரில் வருவதைப் பார்த்ததும், மது சொன்ன "இப்பத்தான்" என்ற பதில் அவன் காதுகளில் எட்டியதோ ...காற்றில் கரைந்ததோ...

 

வளோடு நடந்தவாறே காந்த கண்களால் கதவு வரை அவளை இழுத்தவன்,  கதவை இழுக்க அந்த  அருகாமையில், அந்த நெருக்கத்தில் காந்த சக்தியை அவள்  புண்பட்ட கன்னம்  பறித்து கொள்ள, சக்தியிழந்த கண்களால் மன்னிப்பு கோரியாவாறே அவனின் இரும்பு கரம் அவள் கன்னத்தில் ஒட்டிக்கொண்டது. அதை எதிர்பார்க்காத சந்தியாவோ பேச்சின்றி மௌனமாகி விட, அதுவே அவள் மன்னித்து விட்டதன் அறிகுறி  என்று குதூகலித்த அவன் நெஞ்சம், அந்த பட்டு துணியால் மூடிய பஞ்சு மெத்தை கன்னத்தை விட்டு கையை அகற்றாமல் ஏக்கத்துடன் விரல்களால் வருட அந்த தீண்டலின் அர்த்தத்தை

 

யார் சொல்வதோ யார் சொல்வதோ

பதில் யார் சொல்வதோ ......

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்

முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்

அது மலரின் தோல்வியா? இல்லை

காற்றின் வெற்றியா?

கல்லுக்குளே சிற்பம் தூங்கி கிடக்கும்

சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்

அது கல்லின் தோல்வியா இல்லை

உளியின் வெற்றியா?

யார் சொல்வதோ யார் சொல்வதோ

பதில் யார் சொல்வதோ ......

 

எவ்வளவு நேரம் அந்த தீண்டல் நிலைத்ததோ....இன்னும் சில கால அவகாசம் கிடைத்திருந்தால்  இந்த பூஜையில்  பேயும் பெண்ணாயிருக்கும், சாமியாரும் ஆசாமியாய் மாறி இருப்பான். சந்தியாவின் தற்காப்பு உணர்வு "சந்தியா, ஒருத்தன் உன்னை  தொட அனுமதிக்கலாமா?" என எச்சரித்த அதே நேரம், பூஜை நேரத்து கரடியாக மது "என்ன கொஞ்சி முடிச்சாச்சா?" என கேட்டு வைக்க, சுர்ரென சூடான சந்தியா கார்த்திக்கின் கையை தட்டியவாறே தன் மேலிருந்த கோபத்தை மதுவிடம் திருப்பினாள். எப்போதும் போல் அப்போதும் கோபத்தில் நிதானம் இழக்காத சந்தியா "ஹி இஸ் மை ப்ரண்ட் " அழுத்தமாக சொன்னாள்.

 

அவள் சொன்னதை கேட்டு வியப்பு காட்டுவது போன்ற பாவனையில் "ஓ.. கண்டதும் காதல் கொண்ட பாய் ப்ரண்ட்" என்றாள் நக்கலாக. "கண்டதும் காதல்ன்னு நீங்களா நினைச்சா இட் இஸ் யுவர் பால்ட். ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன். கார்த்திக் அதை செய்தார். ஹி இஸ் ஜஸ்ட் மை ப்ரண்ட்.... ப்ரண்ட்ஷிப்ல பாய், கேர்ள் ன்னு வித்தியாசம் பாக்க மாட்டா இந்த சந்தியா"

 

அவள் இப்படி சொல்வாள் என்று எதிர்ப்பார்க்காத மது "அவன் போன்ல போட்டோ எடுத்தான், அவனை வைச்சு பைக்ல சுத்துனேன், பின்ன ஹாஸ்பிட்டல்ல வச்சு வேற " சொல்ல வந்தவளை இடைமரித்த சந்தியா, கார்த்திக்கிடம் திரும்பி "ஹாஸ்பிட்டல்ல  வச்சு என்ன நடந்ததுன்னு உங்க கசின்னுக்கு சொல்றீங்களா கார்த்திக்?" என்றாள்.

 

கார்த்திக் சற்று தயக்கத்துடன், "மது, அவளை கோபத்தில அறைந்துட்டேன். ஏற்கெனவே நாலு பேரு முன்னாடி கைய நீட்டிடோமேன்னு கில்டி பீலிங்க்ல இருந்த நான், அவ கன்னத்தில அந்த காயத்தை பாத்தவுடனே ஒரு கர்டெசில அதை தொட்டு பார்த்தேன். நீ ஏன் இதை இவ்ளோ தப்பா நினைக்கிற?" என்றான் ஒரு இயலாமையுடன்.

அதை கேட்டு அதிர்ந்த மது "இல்ல காதி, சந்தியா உங்க ரெண்டு பேருக்கும் லவ் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தா. அதனால நான் அந்த காயம் கூட நீ ஹாபிச்சுவலா பண்ணுவியே  " என்று சொல்ல வந்த மதுவை நிறுத்தி சந்தியாவிடம் திரும்பிய கார்த்திக் "என்ன சந்தியா இதெல்லாம்?" என்றான் எரிச்சலுடன்.

 

சந்தியாவோ கொஞ்சம் கூட கலங்காமல் "மது தேவ இல்லாம நம்ம ரெண்டு பேரை பத்தி தப்பா நினச்சாங்க. அவங்களுக்கு சில விஷயங்கள் புரிய வைக்க வேண்டிருந்தது. அதான். சரி, உங்க ஐபோன்னை ஒரு நிமிஷம்  அன்லாக் பண்ணிட்டு மதுகிட்ட கொடுங்க." என, அவன் அதை மதுவிடம் கொடுத்த பின் கேள்வியுடனே சந்தியாவை பார்க்க , "அதில் என் போட்டோ ஏதாவது இருக்கான்னு பாருங்க மது" என்றாள். சில நொடிகள் அதில் தேடிப் பார்த்து விட்டு "இல்லை" என தலையசைத்தாள்.  பின் சந்தியா மதுவை பார்த்து "நம்ம ஊர்ல எத்தனை பொண்ணுங்க பைக் ஓட்டி நீங்க பார்த்து இருக்கீங்க?"  அவள் கேள்விக்கு பதிலளிக்க திணறிய அவள் "வெரி ரேர்.. ஸ்கூட்டி இந்த மாதிரி தான் காமன்" என்றாள். தான் போட்டிருந்த அம்பர்லா வகை சுடிதாரை காட்டி "இந்த மாதிரி ஸ்லிட் இல்லாத சுடிதாரில் எப்படி டபுள் சைடு போட்டு  பைக் ஓட்ட முடியும் மது? அப்புறம், என்னோட டிரைவிங் லைசென்ஸ்" என்று தனது கைப்பையில் இருந்த ஓட்டுனர் அடையாள அட்டையை காண்பித்து, "இதுல எனக்கு கியர் இல்லாத பைக் ஓட்ட தான் லைசென்ஸ் இருக்கு. பைக்கை தனியாவே என்னால ஓட்ட முடியாது. பின்ன எப்படி டபுள்ஸ் வச்சு ஓட்ட முடியும்? அதுவும் முன்ன பின்ன தெரியாத ஆணோடு" என்றாள். அவள் சகட்டு மேனிக்கு கேட்ட கேள்விகளால் பதிலளிக்க முடியாமல் முழித்த மது "அப்புறம் எதுக்கு அப்படி பொய் சொன்ன?" என்றாள்  ஏமாற்ற பட்ட வேதனையோடு.

 

அவளோ நிதானமாக "சந்தியா பொதுவா சொல்றத செய்ய மாட்டா..செய்றத சொல்ல மாட்டா...ஆனா உங்ககிட்ட சொன்ன பொய்க்கு தாடி தாத்தா தான் காரணம் " என  சொன்னதை கேட்டவுடன் மது புரியாமல் கார்த்திக்கை பார்க்க, கார்த்திக்கும் புரியாமல் சந்தியாவை  பார்க்க "அதான்.... நம்ம திருவள்ளுவர்.. அவர் தான நல்லதுக்காக பொய் சொல்லலாம்னு சொல்லிருக்கார்." என  அவள் சொல்வதை கேட்ட கார்த்திக்கிற்கு சிரிப்பு வர,  மது  அவனை முறைக்கவும்,  "நமக்கேன் வம்பு" என தனது நாற்காலியில் வந்து அமர்ந்த அவன் லாப்டாப்பில் முகம் புதைத்தான்.

 

மது அதற்கு,  "அப்படி யாருக்கு நல்லது பண்ண பொய் சொன்ன ?" என அவளிடம் கேட்க,

 

"உங்களுக்குத் தான் மது. சரி...கார்த்திக் உங்களுக்கு என்ன வேணும்?" என சந்தியா கேட்டாள்.

 

 "கசின்... மாமா பையன்" என்றாள் மது. "நான் உங்களுக்கு என்ன வேண்டும்?" என கேட்டாள் சந்தியா.

 

மது சற்று யோசனையோடே "என்னை பொருத்த வரைக்கும் நீ இன்னைக்கு வந்த இண்டர்வியூ காண்டிடேட். அவ்ளோ தான்"

 

சந்தியா "சோ.. நான் ஒரு த்ர்ட் பெர்ஷன்... அதாவது மூணாவது ஆள். அப்படி தானே ?"

மது,  "ஆமாம். அதனால என்ன ?"

 

சந்தியா, "இன்னும் உங்களுக்கு புரியலையா? கார்த்திக் உங்க கசின்... காலையில் நடந்ததை பத்தி அவர்கிட்ட கேட்காம  மூணாவது ஆள்கிட்ட போய் கேட்குறீங்களே? அப்ப நீங்க அவரை சந்தேகப்படுறீங்கன்னு தான அர்த்தம்."

 

மது, "என்ன நீ இப்படி ஒன்னுமே இல்லாத விஷயத்தை இவ்ளோ பெருசு படுத்துற. கார்த்திக் என்கிட்ட காலையில் நடந்ததை பத்தி ஒன்னுமே சரியா சொல்லலை. அப்செட்டா இருந்தான். அதான் உன்கிட்ட கேட்டேன். இதுல என்ன தப்பிருக்கு.?"

 

சந்தியா "ஓ ...அதனால தான் கேட்டீங்களா?" என்றாள் கிண்டலாக. மது  பேசிய குத்தலான வார்த்தைகளையெல்லாம்  சொல்லி கார்த்திக் முன் குற்றப்பத்திரிகை வாசிக்க சந்தியா விரும்பவில்லை. மாறாக, "சரி..சரி.. உங்க வழிக்கே வாரேன். கார்த்திக் உங்களுக்கு எத்தனை வருஷமா தெரியும் ?"

 

மது "ஒரு 20 வருஷமா.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து. இப்போ இதை வச்சு என்ன குறை கண்டு பிடிக்க போற ?"

 

சந்தியா "உங்க கூட  20 வருஷமா பழகுனவன பத்தி உங்களோட 20 நிமிஷம் கூட பேசாதவ சொல்லறத அப்படியே நம்புறீங்க. நீ  எப்படி என் மாமன் மகனை பத்தி தப்பா பேச போச்சுன்னு என்னை நாலு கிழி கிழிச்சிருக்க வேண்டாமா? இன்னைக்கு காலையில் நீங்க கார்த்திக்கோட கசின் கூட தெரியாம, சும்மா உங்களையும் கார்த்திக்கையும் சேத்து பேசுனதுக்கு அவர் எப்படி கோபப்பட்டாரு தெரியுமா? நீங்க என்னடான்னா மத்தவங்க சொல்லறத கேட்டுட்டு வந்து கார்த்திக் மேல கோபப்படுறீங்க." என்றாள்.

 

து அவளது பேச்சை எதிர் கொள்ள முடியாமல் மூர்ச்சையற்று நின்றாள். சந்தியா தொடர்ந்தாள், "நீங்க சொன்னது போல எங்களுக்கு இடையில் என்ன நடந்தது தெரிஞ்சிக்கிற ஆர்வம் உங்களுக்கு இருக்கலாம் - ஏன்னா நீங்க கார்த்திக்கோட முறை பெண். கோபம் இருக்கலாம், பொறாமை கூட இருக்கலாம் ஆனா சந்தேகம் மட்டும் வரவே கூடாது. அது எப்படி பட்ட உறவைவும் கெடுத்துவிடும். அதை நீங்க புரிஞ்சிக்கணும்னு தான் பொய் சொன்னேன்"

 

மது அவளிடம் "என்  நல்லதுக்காக பொய் சொன்னேன்னு சொல்ற. நீ இப்போ எங்களை பாக்காம போயிருந்தேன்னா நாங்க தான சண்ட போட்டிருப்போம். நீ சொன்ன பொய்யால பிரச்சனை தான வந்திருக்கும்?" என கேட்டாள்.

 

சந்தியா, "அப்படி தான் நடக்கலைலே. இருந்தாலும் நீங்க என்னை தப்பா நினைச்சுடக் கூடாதுங்கிறதுக்காக சொல்றேன்." என்று கூறியவாறே கார்த்திக்கை காட்டி "நான் சொன்னதையெல்லாம் கேட்டு இந்த ஆங்ரி பர்ட் என்னை விட்டு வைக்குமா? அந்த நேரம் நானே உண்மையை சொல்லிருப்பேன் " என்றாள் சந்தியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.