(Reading time: 15 - 29 minutes)

02. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியா அந்த நெடியவனை பின் தொடர்ந்தவாறே,

“இதற்கு தான் எதையும் தெறிந்து கொள்ளாமல் வாயை விடக் கூடாது என்று சொல்வது இல்லையேல் இப்படி தான் அவமானபட நேரும்” என மெதுவாக கூறினாள்.

அவன் முதுகு விறைப்பதை சந்தோஷமாக பார்த்தாள். ஆனால் அவனோ மறு நிமிடமே திரும்பி

“விஷயம் தெரியாமல் பேசியதற்கு நான் ஒரு நிமிடம் வருந்தியது என்னவோ உண்மை தான். ஆனால் அது ஒரு நிமிடம் மட்டுமே. நீ என் தம்பியின் வாழ்க்கையில் விளையாடவில்லை என்பது என்னவோ உண்மை தான். ஆனால் உன் போன்ற பெண்கள் யார் வாழ்விலும் விளையாடமல் நல்லவர்களாக இருப்பது சாத்தியமில்லை. எனவே முழுவதையும் வாபஸ் வாங்கி கொள்ள வேண்டிய அவசியமில்லை” என கூறி விரைவாக சந்தரின் அறைக்குள் சென்றான்.

 

இனியாவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம். இவன் ஏதோ ஒரு பெண்ணினால் பாதிக்கப்பட்டிருப்பான் என இனியாவிற்கு தோன்றியது. ஆனால் இவன் எப்படி ஒட்டு மொத்தமாக எல்லா பெண்களையும் குறை கூறலாம் என கோவமாக வந்தது. எனினும் அதை அங்கு காண்பிக்க விரும்பாமல் அடக்கிக் கொண்டாள்.

 

ந்தரின் அறைக்குள் நுழைந்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் சந்தரின் முகத்தில் முன்பிருந்த கவலை இப்போது தெரியவில்லை.

"வா அண்ணா. நாம் எப்போது நம் வீட்டிற்கு போகலாம். எனக்கு தான் நன்றாக ஆகி விட்டதல்லவா நாம் போகலாம் தானே" என கேட்டான்.

இனியா இடையில் புகுந்து,

“இல்லை சந்தர். நீங்கள் இங்கு இரண்டு நாட்கள் போல தங்கியிருக்க வேண்டி வரும்” என கூறினாள்.

ரவி இனியாவை கேள்வியாக நோக்கிய போதும் அதை மறுத்து ஏதும் கூறவில்லை. ஆனால் அந்த பார்வையை இளவரசன் மட்டும் கண்டுவிட்டான்.

“ஏன்? அவனுக்கு தான் நன்றாகி விட்டதே, இன்னும் இரண்டு நாட்கள் அவன் ஏன் தங்க வேண்டும்" என கேள்வி எழுப்பினான்.

ரவி பேசுவதற்கு முன்பே இனியா இடையிட்டு

"இதை நாம் சீப் டாக்டரின் அறையில் சென்று பேசலாம்" என கூறினாள்.

சரியென்று தலையசைத்து அவளை பின் தொடர்ந்து சென்றான். ரவியும் உடன் சென்றான். வெளியே சென்று அவன் கேட்பதற்குள் இனியாவே

"அவர் இங்கு வந்த பிறகும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்று கேள்விபட்டேன். இப்போதே அவரை அனுப்பி விடலாம் தான். அதில் ஏதும் எங்களுக்கு பிரச்சனை இல்லை தான். நாங்கள் பணத்திற்காகவும் பார்க்கவில்லை" என கூறி ஒரு நிமிடம் அமைதி காத்தாள்.

 பிறகு,

"ஆனால் உங்கள் குடும்பத்தை பற்றி கேள்வி பட்டேன். உங்களுக்கு இருக்கும் பிசினஸை பார்க்கவே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். உங்கள் அம்மா மட்டும் தனியாக சந்தரை பார்த்து கொள்வது சரியாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அவர்களே தற்போது மிகவும் சோர்ந்து காணப்படுகிறார்கள். இந்த நிலையில் சந்தர் தனிமையில் இருப்பது சரியல்ல. இங்கு இருந்தால் அவர் மனநிலையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். இப்போது அவர் உடல்நிலை மட்டுமே சரியாகி உள்ளது. அவர் மனநிலையையும் நாம் மாற்ற வேண்டும். இதை எல்லாம் மனதில் வைத்து தான் அவர் இங்கே இன்னும் இரண்டு நாட்கள் இருக்கட்டும் என சொல்கிறேன்" என கூறினாள்.

இளவரசன் ஒரு நிமிடம் ஒன்றுமே பேசவில்லை. அவள் அவர்களின் குடும்ப நிலைமை தம்பியின் மன நிலைமை எல்லாவற்றையும் மனதில் வைத்து பேசியது அவனுக்கு ஏனோ மகிழ்ச்சியை அளித்தது.

ரவி இடையிட்டு,

“உங்களுக்கு விருப்பமில்லையெனில் விட்டுவிடுங்கள் சார். நாங்கள் வெறும் எங்கள் அபிப்ராயத்தை தான் சொல்கிறோம்” என கூறினான்.

 இளவரசன் இல்லை என மறுத்து

“அவன் இங்கே இருப்பது தான் நல்லது என தெரிகிறது. இங்கேயே இருக்கட்டும்” என கூறினான்.

 

னைவரும் திரும்பவும் சந்தரின் அறைக்குள் சென்றார்கள். அங்கே சந்தர் அவன் தாயின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தான். அவர் முகத்தில் பெரும் நிம்மதி தெரிந்தது. இதை கண்ட இளவரசன் புன்னகையுடன் தாயின் அருகே சென்று

“என்னம்மா எனக்கு உங்கள் மடியில் இடம் கிடையாதா” என கேட்டான்.

அப்பேச்சில் கலந்து கொள்ளாமல் இனியா திரும்பிய நேரத்தில் சந்தர் இனியாவை அழைத்தான்.

“என்ன என்னிடம் சொல்லாமல் செல்கிறீர்கள்” என கேட்டான்.

இனியா திரும்பி,

“நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கிறீர்கள் அதை ஏன் கெடுப்பானேன் என்ற நல்ல எண்ணத்தில் தான் கிளம்புகிறேன்” என கூறினாள்.

ஆனால் சந்தரோ,

"ஏன் கெடுப்பானேன், நீங்களும் எங்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்கலாமே" என வினவினான்.

 இனியா சிரித்து விட்டு,

“வந்ததற்கு இன்றைக்காவது கொஞ்சம் வேலையும் பார்க்கலாமே என நினைத்தேன். உங்களுக்கு அது பிடிக்கவில்லை அதனால் இன்றும் நான் வேலை செய்ய போவதில்லை” என ஏதேதோ பேசி அவனை இயல்பாக்கி கொண்டிருந்தாள்.

 அவள் கிளம்பும் போது,

“நீங்கள் தினமும் வருவீர்களா?” என கேட்டான் சந்தர்.

 “அது சரி நான் நாளையும் வேலை செய்வது உங்களுக்கு விருப்பமில்லை போல. சரி விடுங்கள் நீங்கள் சென்ற பிறகே நல்ல நாளாக பார்த்து நான் வேலை செய்ய தொடங்குகிறேன்” என கூறி விட்டு சென்றாள்.

 

வீட்டிற்கு சென்ற இனியாவை பார்த்த அபி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“அபி செல்லத்திற்கு சித்தி மேல என்னடா கோவம்?” என அபியை தூக்கிக் கொண்டாள் இனியா.

 "நீ ஒன்றும் என்னிடம் பேச வேண்டாம். நான் வந்த உடனே என்னை கவனிக்காம எல்லோரும் சண்டை போட்டீர்கள். அப்புறம் என்னை அம்போனு விட்டுட்டு நீ வெளியே போய் விட்டாய்" என அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் 6 வயது குட்டி அபி. அவளிடம் பேசி சமாளிப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

பாலு சிரித்துக் கொண்டே வந்து

"எப்படி தான் எல்லோரையும் தன் பேச்சிலேயே கவர்ந்து விடுகிறாயோ இனியா" என கூறினான்.

 

அதற்குள் சமையலைறையிலிருந்து வெளியே வந்த லட்சுமி

“அது தான் மாப்பிள்ளை இவள் வாயை அடக்காமல் விட்டுவிட்டதால் இப்படி எல்லோரையும் இவள் வாயாலே சமாளித்து விடுகிறாள். கல்யாணம் என்ற பேச்சை எடுக்கவே விடுவதில்லையே இதிலிருந்தே தெரியவில்லையா?” என கேட்டாள்.

இப்போது இனியாவை பார்த்த பாலு பயந்தே போனான்.

“என்ன அத்தை என்னை ஏதும் பேச விடமாட்டீர்கள் போல இருக்கிறதே, பாருங்கள் இனியா என்னை எப்படி பார்க்கிறாள்” என சொன்னான்.

 இனியா இன்னும் அவனை முறைத்துக் கொண்டே இருந்தாள். லட்சுமி தான் அதை பார்த்து விட்டு இனியாவிடம் சண்டைக்கு சென்றாள்.

“வீட்டு மாப்பிள்ளை என்ற பயம் இருக்கிறதா என்று. அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் இப்படி இருந்ததில்லை. நீ எப்படி தான் கல்யாணம் செய்து புகுந்த வீட்டில் போய் வாழ போகிறாயோ, மற்றவரை அனுசரித்து போக கற்றுக் கொள்” என்று பேசி கொண்டே  போனாள். இடையே பாலு தான் புகுந்து தன் அத்தையை சமாதானம் செய்தான்.

இனியாவிடம் திரும்பிய பாலு,

“இனியா இன்று இதற்கு நாம் ஒரு முடிவு கொண்டு வந்து விடலாம். உனக்கு என்னம்மா பிரச்சனை. ஏன் தான் நீ உன் திருமணத்தை தள்ளிக் கொண்டே போகிறாய்” என கேட்டான்.

 ஒரு நிமிடம் அமைதியாக இருந்த இனியா,

"நான் திருமணத்தை தள்ளி போடவில்லை அத்தான். எனக்கு திருமணமே வேண்டாம் என கூறுகிறேன் என கூறினாள்.

“திருமணமே செய்து கொள்ளாமல் என்னடி செய்ய போகிறாய்?” என கோபமாக வந்த மாமியாரிடம் தான் பேசி கொள்வதாக கூறிய பாலு இனியாவிடம்

“ஏன் என்று காரணம் சொல் இனியா” என வினவினான்.

“நான் தான் சொன்னேனே அத்தான் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை வர மறுக்கிறது. என் அம்மா சொன்னது போல பெண்கள் அன்று எவ்வாறு அடிமையாக இருந்தார்களோ அவ்வாறு தான் இன்றும் ஆண்கள் எதிர் பார்க்கிறார்கள். என்னால் அவ்வாறு இருக்க முடியாது” அத்தான் என்று கூறினாள்.

“இருங்கள் அத்தான் நான் முழுவதும் பேசி முடித்து விடுகிறேன்” என இடையில் பேச வந்த பாலுவிடம் கூறினாள்.

"இப்போது என்னால் திருமண வாழ்வை நினைத்து பார்க்கவே முடியவில்லை அத்தான். ஆனால் முன்பொரு காலத்தில் நானும் திருமண கனவு கண்டிருக்கிறேன். என் கணவர் என்பவருக்கு இந்த படிப்பு இவ்வளவு செல்வநிலை இருக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை. நான் சொல்லாமலே என்னை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் நான் இன்னது செய்வேன் என என்னை அறிந்திருக்க வேண்டும். சிறு வயதில் வாழும் வாழ்க்கையை விட வயதான காலத்திலும் அந்த காதல் மாறாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன் அத்தான். ஆனால் இப்போது நான் பார்க்கும் எந்த கணவன் மனைவியும் அப்படி இருப்பதில்லை. மாறாக 60 வயதிலும் விவாகரத்து வாங்குபவர்களையே நான் காண்கிறேன். அப்படியெனில் அவர்கள் இவ்வளவு நாள் வாழ்ந்த வாழக்கைக்கு என்ன தான் அர்த்தம். இப்படியொரு வாழ்வை நான் வாழ தயாராக இல்லை" என ஒரே அடியாக மறுத்தாள் இனியா.

 இதை கேட்ட பாலு முதலில் திகைத்தாலும், பிறகு

"ஏன் இனியா நானும் உன் அக்காவும் உன் கண்களுக்கு அவ்வாறு தான் தெரிகிறோமா" என கேட்டான்.

"நீ பார்த்த சில பேரை வைத்து நீ எப்படி எல்லோருமே இப்படி தான் என்கிறாய். அது தவறில்லையா?" என கேட்டான்.

இனியாவிற்கு ஏனோ இளவரசனை தான் அவ்வாறு எண்ணியது நினைவு வந்தது. அவன் பார்த்த பெண்களை வைத்து அவன் எப்படி எல்லோரையும் அப்படி எண்ணலாம் என தான் நினைத்தது நினைவு வர தானும் அவ்வாறு தான் தவறு செய்கிறோமா என முதல் முறையாக அவளுக்கு சந்தேகம் பிறந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.