(Reading time: 5 - 10 minutes)

02. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

கொலையா?” அதிர்ந்து போயிருந்தான் தீபக்

அவனையே பார்த்துக் கொண்டிருந்த தயா

“வாயைப் பொளக்காதடா....இன்னும் பண்ணலை...ஆனால் எனக்கிருக்கற  சிக்கல்லே பண்ணிருவேனோன்னு பயம்மாயிருக்குடா..” என முடித்தான் தயா.

அப்பாடா என்றிருந்தது தீபக்குக்கு

“என்னடா பிரச்னை உனக்கு? நீ இன்னும் மாறவேயில்லியாடா?”

“என் கிட்டே என்னாடா தப்பிருக்கு? நான் ஏண்டா மாறணும்?”

வனைப் பற்றித் தெரிந்திருந்த தீபக்குக்கு தயா இப்பிடிக் கேட்டது  கொஞ்சம் அதிர்ச்சிதான் “இன்னும் இந்தப் பய திருந்தலியே” என்னும் ஆற்றாமையோடு  அமைதியாயிருந்தான்.

வானம் பார்த்தலில் கூட இது என் நட்சத்திரம் என்று குறித்து வைத்துக் கொள்ளும் சுயநலம். எப்போதும் ஆடுகளத்தில் வெள்ளைக் காய்களையே தனதாக்கிக் கொள்ளும் சாமார்த்தியம். முழுச் சுயநலவாதி.

தன்னை நேசிக்க ஆட்களைச் சேகரிக்கும் வித்தையைச் சொல்லித் தந்த வாசித்தல் அதைத் தக்கவைத்துக் கொள்ளும் வித்தைகளைக் கற்பித்துக் கொடுக்கும் போது பராக்குப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் தயா.  அந்த வித்தை அவ்வளவாகக் கை வரவில்லை அவனுக்கு.இது எனக்கான பூ, என் மயிலிறகு,என் இலை, மிட்டாய் சுற்றிய சரிகைத் தாள் எனப் பத்திரப் படுத்தப் பட்ட பொக்கிஷங்களுக்கான பெட்டியில் தனக்கான மனிதர்களையும் சேகரிக்கும் முட்டாள்தனம்....

தனக்குப் பிடித்தவர்களைத்    தன் பொக்கிஷப் பெட்டியில் பத்திரப் படுத்த ஆரம்பித்து விடுவான். அவர்கள் மூச்சு விடுகிறார்களா மூச்சு விட முடியுதா என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இதில் "நாந்தான் உன்னைப் பாதுகாக்கிறேனாக்கும்" என்னும் பெருமையடித்தல் வேறு. அப்புறம் தினுசு தினுசா நாக்கில் சாட்டையெடுத்துச் சுழற்றுவதில் ஆரம்பித்து தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது வரையிலான அனைத்தையும் செய்பவன்.

கொஞ்சம் சூழ்நிலையை மாற்றுவதற்காக

“சரி சரி….உன் ரசனை எனக்குத்தெரியும். பட்டுப் புடவை…பிச்சிப் பூ தழையத் தழையப் பின்னல்….அப்புறம் எப்படிரா ஷைனி?   என்ன லவ்வா?” என்று பேச்சை மாற்றினான் தீபக்.

“ப்ச்…அது ஒரு விபத்துடா “

“என்ன உன் கல்யாணமா?”

“அதுவும்தான்”

“எத்தனை வருஷமாச்சு?”

“ஒண்ணரை”

“அதுக்குள்ளே விபத்தாயிடுச்சா?”

“ப்ச் …ஒரு விபத்துலே ஆரம்பிச்சு இப்போ விபரீதமாகிட்டு இருக்கு…”

நடந்த எல்லாவற்றையும் அழித்து விடுபவன் போலத் தலையை வேகமாக உலுக்கிக் கொண்டே கண்ணாடியைக் கழற்றி நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டு  நடந்து போனவற்றை நினைக்கத் தொடங்கினான் தயா.

************************

து ஒரு மழை நாள். பைக்கில் நனைந்தபடியே தலை முடியை ஒற்றைக் கையால் கோதி விட்டபடி போய்க் கொண்டிருந்த தயா அந்த யு டர்ன் வளைவில் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பிங்க் நிற ஸ்கூட்டி வர தப்பிப்பதற்காகச்  சட்டென்று ஒடித்து ஓட்ட  ஈர ரோட்டில்  வழுக்கி வண்டியோடு கீழே விழுந்தான். ஸ்கூட்டியில் வந்த அந்தப் பெண் வண்டியை நிறுத்தி ஓடி வந்தாள்.

தயாவுக்கு அடி பலமில்லையென்றாலும் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை.

“சாரி…சாரி…நான் உங்க பைக் வந்ததைக் கவனிக்கலை”

“இல்லை பரவாயில்லை….என்னாலே நடக்க முடியலை…”

“நோ வொர்ரீஸ்…..ஐல் டேக் கேர்”

ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சது அட்மிட் பண்ணியது, மல்டிப்பிள் ஃப்ராக்சர் என்றவுடன் பதறியது எல்லாம் அவள்தான்.

காலில் பெரிய கட்டுப் போட்டு காலைத் தூக்கிக் கட்டி விட்டுப் போனார்கள்.

“யாருக்கு ஃபோன் பண்ணட்டும்……அப்பாவுக்கு?”

“பெங்களுர்லே யாருமேயில்லைப்பா….”

“ஃப்ரெண்ட்ஸ்?”

“ப்ச்….”

“எங்க தங்கியிருக்கீங்க?”

“தனியாதான் ரூமெடுத்து இருக்கேன்….”

கொஞ்சம் புரியாமல் பார்த்துவிட்டு டூட்டி நர்சிடம்  ஏதோ சொல்லிவிட்டு அவனிடம் வந்தாள்

“நோ வொர்ரீஸ் ….சாப்பாடு கீழே கான்டீன்லேருந்து வந்துரும்…..ஓகே?...நான் வீட்டுக்குப் போகணும் காலைலே வரேன்”

வேறே யாராவதுனாலே கீழே விழுந்துருந்தால்  ஆயிரம் மடங்கு கோபம் வந்துருக்கும்.ஆனால் இப்போ மந்திரிச்ச ஆடு மாதிரி பாவமாக தலைய ஆட்டினான் தயா.

கவனித்துக் கொள்ள யாருமில்லாமல் தனியாகக் கிடந்தது ஒருவிதமான தன்னிரக்கத்துக்கு ஆளாகியிருந்தான் தயா.

யாரிந்தப் பெண்? எப்படி உதவினாள்? பெயர் கூடக் கேட்கவில்லையே எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டான் தயா.

அடுத்த நாள் காலையில் கண்விழிக்கும் போது  ஒரு பூங்கொத்துடன் அம்மா, அப்பா, மற்றும் தங்கையுடன் அந்தப் பெண் நின்றிருந்தாள்.

அவ்வ்ளோதான் சட்டென்று ஒட்டிக் கொண்டாள் மனதில். அப்புறம் டிஸ்சார்க் செய்து ரூம் வரை கொண்டு விட்டு ஃபோன் நம்பர் வாங்கிக் கொண்டு போனது வரை ஒரு கனவுத் திரைப்படம் போல ஓடி விட்டிருந்தது.

அப்புறம் சின்னதாகக் குட்மார்னிங்க் மெசேஜ் , குட்நைட் மெசேஜ் என்று ஆரம்பித்து கண்விழிப்பதே விடிய விடிய பேசும் பேச்சுக்களுக்காக என்றாகிப் போனதும்  தயாவின் வாழ்வில் புதுசு. 

அப்படித்தான் ஷைனி தயாவின் பொக்கிஷப் பெட்டிக்குள் குடியேறினாள். இத்தனைக்கும் காதல்  கத்தரிக்காய் என்றெல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை இருவரும்.

அப்படியிருக்கும்போது தான் ஒருநாள்  திடீரென்று ஷைனிக்கு தயாவிடமிருந்து  ஒரு மெஸேஜ் வந்தது.

“மெட் வித் அன் ஆக்ஸிடென்ட் கம் இம்மீடியட்லி”

போட்டது போட்டபடி அவசர அவசரமாய் லீவு சொல்லி ஸ்கூட்டியைப் பறத்திக் கொண்டு வந்தால்  எங்கோ கிளம்பிச் செல்ல ரெடியாகியிருப்பது போல டிப் டாப்பாக ட்ரெஸ் பண்ணிக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்திருந்தான் தயா.ஆக்ஸிடென்ட் ஆனதற்கான ஒரு கீறல் கூட இல்லை.

“ஏண்டா தயா எங்கே விழுந்து தோலைச்சே?”

ஈயென்று இளித்தவாறு 

“ஆக்ஸிடன்டெல்லாம் ஒண்ணுமில்லே …..நீயில்லாம இருக்கமுடிலைப்பா…..அதான்…..”    என்றவாறு அவளருகில் வந்து அவளை இறுக்கிப் பிடித்து “ஐ லவ்  யூடா ஷைன்” என்று தயா சொன்ன மறு நிமிடம் அவனை வேகமாக உதறிய ஷைனி “ச்ச்ச்ச்ச்ச்சீசீசீ”  என்று சொல்லியவாறே அவன் உச்சி முடியை கொத்தாகப் பிடித்து உலுக்கி ஓங்கி பளார் பளாரென அறைந்தாள் ஷைனி. 

தொடரும்

Karai othungum meengal - 01

Karai othungum meengal - 03

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.