(Reading time: 6 - 11 minutes)

03. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ஷைனி வெளுத்த வெளுப்பில் நிலைகுலைந்து கிடந்தான் தயா. அவள் அடித்து ஓய்ந்து

“சீ உங்களுக்கெல்லாம் வேற நெனைப்பே கிடையாதாடா…..கொஞ்ச நேரம் கூடுதலாப் பேசினால் காதலா?    மண்ணாங்கட்டி……தனியாக் கெடந்து அல்லாடுறியேன்னு அக்கறை காட்டினா உடனே  ஐ லவ் யூ வா? …..எக்கேடோ கெட்டு ஒழிஞ்சு போ” என்றவாறு போயே போய் விட்டாள்

அவ்வளவு தான் வாழ்க்கை முடிந்தது போலானான் தயா. உடனே அம்மாவைப் பார்க்க திருச்செந்தூருக்கு ஓடினான். அம்மாவின் மடிமீது குப்புறப் படுத்துக் குமுறிக் குமுறி அழுதான்.  “என்னடா என்னடா ஆச்சு ?” என்று பதறியவளைச் சட்டை செய்யாமல் சும்மாயிருந்தான். அம்மா தனியாக முடிவெடுக்கத் தெரியாத  குழந்தை. மலங்க மலங்க முழித்தாள். உடனே நினைவுக்கு வந்தது அம்மாவின் பெரியம்மாவின் மகன் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணன்  தாடி மாமாதான்.

தாடி மாமாதான் தயாவுக்கு குரு மாதிரி.

“இரும்மா…..என்னாச்சுன்னு நான் கேக்கிறேன்…..நீ  இப்போ அழுகையை நிறுத்தும்மா…. என்னா பய யார்கிட்டேயாவது அடி வாங்கியிருப்பான்……. இதுக்குப் போயி  அழுதுகிட்டு. …….பாருங்க கோவிலுக்குப் போயி திருநீறு போட்டு கடக்கரைக்குப் போய்க் காத்து வாங்கினா பய நடந்ததை உளறப் போறான்.

தயாவின் பல்ஸ் தெரிந்தவர். பய எதோ பொண்ணு மேட்டர்லேதான் சிக்கிருப்பான்னு தெளிவா நம்பினார்.

கோவிலுக்கு இழுத்துக்கிட்டுப் போயி நெற்றி நிறைய திருநீறை அப்பிக் கொஞ்சம்  பிரசாதம் வாங்கிக் கொண்டு கடலை நோக்கிக் காலாற நடந்தார்கள்.

“என்னலே யாருகிட்டே மாட்டுனே?” என்றார் தாடி மாமா.

தயா அமைதியாக இருந்தான்.

“யாராயிருந்தாலும் சொல்லுலே ……..தூக்கிட்டு வந்து கட்டி வைக்கேன்”

கொஞ்சம் தைரியம் வந்தவனாக நடந்தது அத்தனையையும் சொல்லி முடித்தான்

“எலே இம்புட்டுதானே  மெட்டர்…..அவ உனக்கு வேணுமாலே?”

ஆமா என்பது போலத் தலையசைத்தான் தயா.

“அந்தப் புள்ளைக்கு உன்னைப் புடிச்சதுனாலேதானலே உம்மேலே கரிசனமாயிருந்துருக்கா…. “

“தெரிலியே தாடி மாமா…..அப்புறமெதுக்கு இப்புடி அடிச்சுட்டு ஓடிப் போச்சு?”

“ரெண்டு விஷயம் செஞ்சாதான் பய புள்ளையக் கவுக்க முடியும்”

“என்ன?” என்பது போலப் பார்த்தான் தயா.

“ஒண்ணு அந்தப் புள்ளைக்குத் தகவல் குடுத்துட்டு மருந்து குடிச்சாப்பலே நடி……. ரெண்டாவது அந்தப் புள்ளைக்குத் தகவல் குடுத்துட்டு நெசம்மாலுமே மருந்து குடிச்சுப் போடு  என்னலே ?”

“யோவ் தாடி என்னைக் கொல்லப் பார்க்குறிகளா?” ….ரொம்பக் கோபம் வந்தாலோ ஓவரா பாசம் வந்தாலோ தாடி மாமா “தாடி”யாகிவிடுவார் தயாவுக்கு.

“நீ மட்டும் இதைச் செய்யி அப்புறம் பாரு உம்மேல வந்து விழுதாளா இல்லியான்னு…..”

“யோவ் நெசம்மாலுமே செத்துப் போயிட்டேன்னா?”

“அட இப்பத்தானே அந்தப் புள்ளையில்லைன்னா உயிரை விட்டுருவேன்னு சொன்னாப்பலே…..போயிட்டுப் போறே “ என்றவாறு கள்ளச் சிரிப்பு சிரித்தார்.

தயாவுக்கும் இந்த ஐடியா பிடித்துதானிருந்தது.

வொர்க் அவுட் ஆச்சுன்னா ஷைனியோட வாழ்க்கை…..வொர்க் அவுட் ஆகலைன்னா உயிரோட இருந்துதான் என்ன பண்ணப் போறேன் என்று எண்ணிக் கொண்டான் தயா.

ரெண்டு பேருமாகச் சேர்ந்து ப்ளான் போட்டு ஒரு தற்காப்புக்காகத் தாடி மாமாவும் பெங்களுருக்கு வந்தார். தாடி மாமாவின் ஐடியா சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு.

“ஐ யம் டையிங்” 

அப்படீன்னு ஒரு மெஸேஜ் கொடுத்து விட்டு அவள் கிளம்பி வர நேரக் கணக்கு பார்த்து பதினைந்து நிமிடம் கழித்து கை நாடி பார்க்குமிடத்தை வெட்டிக் கொண்டான் தயா. ரத்தம் சொட்டச் சொட்ட கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. தாடியை  அவசரத்துக்காக அடுத்த தெருவில் நிறுத்தி வைத்திருந்தான்.

ஏற்கெனவே ரெண்டு மூணு நாளா  தயாவிடமிருந்து ஏதும் தகவல் இல்லாமல் கொஞ்சம் கவலையாக இருந்த ஷைனி இந்த மெஸேஜ் பார்த்ததும் அடித்துப் பிடித்து ஓடி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தாள். ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்

பொண்ணு வந்து கவனித்துக் கொள்ளவவும் தாடி மாமா கவலை விட்டவராக அடுத்த பஸ் ஏறி திருச்செந்தூருக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஷைனி அவளுக்கும் தயாவுக்குமான எட்ட முடியாத வித்தியாசங்களையெல்லாம் ஒதுக்கி விட்டுத்  தயா பக்கமாகச் சாய்ந்த மனதை மூட முடியாமல் அவஸ்தைப் பட்டாள்.

அதற்கப்புறம் நிறைய ட்ராமா , அப்பா அம்மாவுடன் சண்டை என்று ஷைனி எப்போதும் தயா தயா என்று சுற்றலானாள்.

தயா இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தாள். விடியற்காலையில் “நீ இப்போவே வா” என்று மெஸேஜ் அனுப்பினால் கூட வண்டியையெடுத்துக் கொண்டு போய் நின்றாள்.

“ஏய் ஷைனி எனக்கு ஒரு ஆசை”

“சொல்லுப்பா”

“நான் அனுப்புன மெயில் எல்லாம் பத்திரமா வச்சுருக்கியா?”

“ரொம்பப் பத்திரமா”

“பொய் சொல்றே”

“இதிலென்னப்பா பொய்…நிஜம்மா வச்சுருக்கேன்…..”

“நான் நம்ப மாட்டேம்பா……….நீதான் லவ் பண்ணலையே என்னைய …….என் உயிரை விட்டு  உன்னை லவ் பண்ண வெச்சுருக்கேன்……அப்புறம் எப்படி என் மெயிலெல்லாம் பத்திரப் படுத்தியிருப்பே?......”

“இப்போ என்ன உன் மெயிலெல்லாம் உனக்கு ஃபார்வர்ட் பண்ணுறேன் ஓ.கேவா?”

“ஊஹும்……எனக்கு இப்போவே பார்க்கணும்….உன் லேப்பியைக் கொண்டு வா…..”

“ஏய் நீ என்ன லூசா ….இப்போவே எப்பிடி உனக்கு எல்லாவற்றையும் அனுப்ப?”

“நீ ஒண்ணும் அனுப்ப வேண்டாம்……….கொண்டா உன் லேப்பியை….” என்றவாறு அவள் கொண்டு வந்த லேப் டாப்பை வாங்கி அதைத் திறந்தவாறே………

“உன்  ஜி மெயில் பாஸ் வேர்ட் சொல்லு” என்றான்.

“ஏய் அது எதுக்கு உனக்கு?..........நாந்தான் அனுப்புறேன்னு சொல்றேன்லே….”

“இல்லே எனக்கு இப்போவே பார்க்கணும் சொல்லு…..” அடம் பிடித்தான் தயா.

“ஏய் போடா…..பாஸ் வேர்டெல்லாம் தரலை…குடு லேப்பியை நானே அனுப்புறேன் உனக்கு……”

“ஏன் எங்கிட்டே சொல்லக் கூடாதா? அப்படியென்ன ரகசியம் வச்சுருக்கே அதுலே?”

“ஒரு மண்ணாங்கட்டியும் இல்லே…..”

“அதான் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லியே….அப்புறம் நான் பார்த்தா என்ன?”

“போடா லூசு…”

“பேச்சை மாத்தாதே……………….இப்போ பாஸ் வேர்ட் சொல்லு….”

“நான் தரமாட்டேன்”

“அப்போ நீ என்கிட்டே எதையோ மறைக்கிறே….ஓ.கே…இப்போ கடைசியா கேக்குறேன் .இப்போ பாஸ் வேர்ட் சொல்லணும்னா சொல்லு….இல்லைன்னா எனக்கு எப்பவுமே என் மெயில் எல்லாம்  ஃபார்வேர்ட் பண்ணாதே…..”  என்றவாறு ஏற்கெனவே மொக்கையாக இருந்த விரல்களின் நகங்களைக் கோபத்தோடு ரத்தம் வரும் வரை கடித்துக் கொண்டேயிருந்தான்.

புது தயாவைப் பார்த்த மிரட்சியுடன் தொலைந்து போகிறான் என்று

“இந்தா தொலை”  என்று பாஸ்வேர்டைச் சொன்னாள் ஷைனி.

வேண்டாம் என்று முரண்டு பண்ணுவான் என்று நினைத்திருந்தாள் ஷைனி

எதுவும் சொல்லாமல் அக்கவுண்டைத் திறந்து மேய்ந்து கொண்டே

“அதுக்கில்லே கண்ணம்மா……உன்னைப் பற்றித் தெரியாதா?......நீ ஏன் உடனே தரல….உன்மேல நம்பிக்கையில்லாமலா?........என்று சிரித்துக் கொண்டே  ஒவ்வொரு மெயிலாகத் திறந்து படித்துக் கொண்டேயிருந்தான்.

ஷைனிக்கு ஒரே எரிச்சலாகயிருந்தது.

திடீரென்று “ஏய் யார் இது தேவா?.....தினமும் சேட் பண்ணிருக்கே…..உன் எஃக்ஸ் பாய் ஃப்ரெண்டா?.......” என்று கேட்டான் தயா. 

தொடரும்

Karai othungum meengal - 02

Karai othungum meengal - 04

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.