(Reading time: 6 - 11 minutes)

05. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

பேசிக் கொண்டே மொட்டை மாடிக்கு வந்திருந்தார்கள் தீபக்கும் தயாவும். கொஞ்ச நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தீபக்  தன்னையறியாமல்

“இவ்வ்ளோ நடந்தப்புறம் எப்படிரா அவள் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா?” என்று கேட்டான்

“மறுபடியும் தாடி மாமாதாண்டா ஹெல்ப் பண்ணினாரு”

“ஓ !.....இன்னொரு தடவை உயிர் விடற ட்ராமா பண்ணினியாடா?”

“அதெப்படிரா சரியாக் கண்டுபுடிச்சே……?”

அப்புறம் இத்தனை வருஷம் உன் கூட இருந்துருக்கேனே…………..உன்னைப் பற்றி இது கூடத் தெரியலின்னா எப்படிரா?”

தயா கொஞ்சம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.

தீபக் மனசுக்குள்ளே இவன் கிட்டேயிருந்து எப்படித் தப்புவது என்றே யோசித்துக் கொண்டிருந்தான். இவன் லேசுலே ஒட்டமாட்டான்……ஒட்டிக்கிட்டான்னா விடவே மாட்டான்.

தீபக் திடீரென நினைவு வந்தவனாக “ சரிடா நான் கிளம்புறேன்….நேரமாயிடுச்சு…….ராத்திரி கொஞ்சம் ஆன்லைன்லே வேலையிருக்கு…..” என்றான்.

தயா முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு

 “ உனக்கே தெரியும் தீபக் ….எனக்கு ஒரு கஷ்டம்னா சாய்ந்து அழ ஒரு தோள் வேணும்னு….. அதுவும் போக ஒன்னை விட்டா  எனக்கு வேற யாருடா இருக்கா?” என்றான்.

“சரிடா ..இன்னொரு நாளைக்கு வரேன்….”

“மூச் பேசப்படாது……..ஷைனி சாப்பாடு பண்ணிக்கிட்டிருக்கா……சாப்டப்புறம்தான் போக விடுவேன்”

தீபக் தவிர்க்க முடியாமல்  ‘ஏன் இவனைத் தட்டிக் கழிக்க முடியவில்லையென்று தெரியாமலேயே  பூம் பூம் என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தான் .

கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷைனிக்கு மேலேயிருந்தே மொபைலில் அழைத்து ““கண்ணா ….தீபக் சாப்பாட்டுக்கு இருப்பாண்டா….அவனுக்குச் சப்பாத்தியும் பனீர் சப்ஜியும் புடிக்கும் பண்ணிடுடா……..” என்று இழைந்தான்.

“நீ என்ன சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கேடா “ என்று கேட்கலாமா….வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டேயிருக்கும் போதே….

“என்னடா வந்தவுடனேயே ஒரு சிக்கல்லே மாட்டிக்கிட்டிருக்கேன்னு  சொன்னேனே …..என்னான்னு கேக்க மாட்டியா?” என்று தயாவே கேட்டான்

உன்னாலே ஷைனிக்குத்தான் சிக்கல் ….உனக்கென்ன சிக்கல் …..என்று மனசுக்குள்ளே யோசித்துக் கொண்டே

“இல்லடா  நீயே சிக்கல்லே இருக்கே அதை ஏன் துருவித் துருவிக் கேட்கணும்னுதான்…..” என இழுத்தான் தீபக்.

தயாவின் மொபைல் ஒரு ஆங்கிலப் பாடலுடன் அழைத்தது. எடுத்துப் பார்த்து ஷைனிதான் என சைகை செய்துவிட்டுத் தூரமாகப் போய்ப் பேசிவிட்டு வந்தான். முகம் கொஞ்சம் வாடியது போலத் தெரிந்தது.

அவர்களுக்குள் ஏதாவது பிரச்னையாக இருக்கும் எனப் பேசாமல் இருந்தான் தீபக்.

“ நீயெல்லாம் கல்யாணம் பண்ணிக்காதே தீபக்” என்றான் தயா எங்கேயோ பார்த்துக் கொண்டு.

“என்னடா இப்பிடிச் சொல்றே …..உன் கல்யாண வாழ்க்கை ஒண்ணரை வருஷத்துலே விபத்துன்னு சொல்றே…..என்னாதாண்டா உங்களுக்குள்ளே பிரச்னை?”

“நான் சொல்றதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாடா……..இப்போ நான் சொல்ற எதையுமே கேட்கமாட்டேங்குறா……….”

“லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிருக்கே ………. செத்துடுவேன்னு   மிரட்டிக் கல்யாணம் பண்ணிருக்க…….. உன்மேல அன்பில்லைன்னா அவள் நீ செத்தா எனக்கென்னன்னு போயிருப்பாளேடா…….”

“அப்பிடிப் போயிருந்தாப் பரவாயில்லியேடா….” என முணுமுணுத்தான் தயா.

வளைந்த படிக்கட்டுகளுடன் அமைந்த வீடு அது. படிக்கட்டுகளின் சடாரென்ற முடிவில் விரிந்த மொட்டை மாடி. யாராவது  வந்தால் முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியாது. திடீரென ஒரு நிழல் ஓடி மறைந்ததைப் போலிருந்தது.

“தயா யாரோ வந்துட்டு ஓடியதைப் போல இருந்ததுடா……”

“வேற யாரு ?     அவளாத்தானிருக்கும் ….நான் உன் கிட்டே என்ன பேசுறேன்னு ஒட்டுக் கேட்டுருப்பா வில்லி….”

“அவ ஏண்டா ஒட்டுக் கேட்கணும் ….உன் கிட்டே டைரெக்டாக் கேட்க வேண்டியதுதானே……..?”

“இதுதாண்டா பிரச்னை…….யாரும் நான் சொல்றததைக் கேட்கிறதில்லை…..பாரு நீ கூட  அவ ஒட்டுக் கேட்க மாட்டான்னு அவளுக்கு சப்போர்ட் பண்ணுறே………”

இதென்னடா வம்பாப் போச்சுன்னு பேசாமலிருந்தான் தீபக்.

இதற்குள்ளாக மறுபடியும் தயாவின் மொபைல் அழைத்தது. எடுத்துப் பேசிவிட்டு………..எதுவும் நடக்காதது போல “வாடா சாப்பிடப் போகலாம்……..” என எழுந்து கொண்டான் தயா.

படிக்கட்டுகளைக் கடக்கும்  போதே  “அவ எதிர்லே நீ ஒண்ணும் பெரிசா என்ன சிக்கல் அது இதுன்னு எதும் பேசதேடா “ என்றான்.

தீபக்குக்கு எப்போடா இந்த வீட்டை விட்டுக் கிளம்புவோம்னு இருந்தது.

ருவரும் எதுவும் பேசாமல் கைகாலைக் கழுவிக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தனர். அது ஏதோ தியானம் பண்ணும் இடம் போல் அமைதியாக இருந்தது. எதுவும் பேசாமல் ஒரு சின்னப் புன்னகையுடன் பரிமாறினாள் ஷைனி.

சப்பாத்தி, ப்னீர் சப்ஜி எதிர்பார்ப்பில் ,தட்டில் விழுந்த சாதத்தையும் சாம்பாரையும் பார்த்தவுடன் ஏதோ நினைவுக்கு வந்தவனாகத் தயாவைப் பார்த்தான் தீபக். தயா ஒருமுறை தீபக்கைப் பார்த்துவிட்டு  வேறு பக்கம் திருபிக் கொண்டான்.

தீபக் மனசுக்குள்ளே “ என்னலே நடக்கு இங்கே” என்னும் ரேஞ்ஜுக்குக் குழம்பிப் போயிருந்தான்.

யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது ஒரு மாதிரியாக இருக்க சாப்பாடு தீபக்குக்கு வயிற்றுக்குள் இறங்க மறுத்தது.  அவ்வ்ளோதான் இனிமேல் இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என நினத்துக் கொண்டான் தீபக்.

ஷைனிக்கும்  அந்த அமைதி ஒருமாதிரியாக இருந்திருக்க வேண்டும். டி.வி யை  ஆன் செய்து  தட தடவென்று சேனல் மாற்றிக் கொண்டேயிருந்தாள்.

ருவழியாகச் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாமல்  தயாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான் தீபக். பஸ் நிறுத்தத்துக்கு வந்த போதுதான் நிதானமாக மூச்சு விட்டான் தீபக். கையில் ஏதோ மிஸ்ஸிங் என்று நினைத்தவுடன் புரிந்துவிட்டது அவசரத்தில் மொபைலை டைனிங் டேபிளில் வத்து விட்டு வந்தது

அச்சச்சோ… இப்போ என்ன பண்ணுவது…..எப்படியும் போய் எடுத்து விட்டு வரவேண்டியதுதான் என்று திரும்பினான்.  போகும் வழியெல்லாம்  அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இல்லையென்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது தீபக்குக்கு. ஃபோனில் சப்பாத்தி பனீர் பண்ணு என்று சொல்லியும் அதைக் கண்டுகொள்ளாமல் சாம்பாரும் சாதமும் ஏன் ஷைனி பண்ணினாள் என்றும் யோசித்துக் கொண்டே  தயாவின் வீடு வரை வந்து விட்டிருந்தான் தீபக்.

கேட்டில் கையை வைக்கும் போது சலீரென்று பாத்திரம் விட்டெறியும் சத்தம் கேட்டதும் அதிர்ந்து அப்படியே நின்றான் தீபக். கொஞ்சம் இடைவெளி விட்டு பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்த தயாவின் முகத்தில் தீபக்கைப் பார்த்ததும் ஒரு விதக் குழப்பத்துடன் “என்ன“என்றான் தயா.

“மொபைலை விட்டுட்டுப் போயிட்டேன்…..”

அந்த வீடு கதவைத் திறந்தவுடன் ஒரு சின்ன சிட் அவுட்டும் உடனே ஒரு டைனிங்க் ஹாலுமான வீடு. கதவு திறந்த இடைவெளியில்  ஒரு தட்டு விசிறியடிக்கப் பட்டு வீடு முழுவதும் சாம்பாரும் சாதமும் சிதறிக் கிடந்தது தெரிந்தது.

தயா மொபைலை எடுக்கப் போன இடைவெளியில் ஷைனியின் உடை முழுவதும் சாம்பாரும் சாதமும் அப்பிக் கிடந்ததுவும் தெரிந்தது தீபக்குக்கு.  

தொடரும்

Karai othungum meengal - 04

Karai othungum meengal - 06

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.