அபினவ் அவனை கீழே இறக்கி விட்டான்.
அருண், “சீசர், சீசர்,” என அழைத்துக் கொண்டு நாய்க்குட்டியை தேடி சென்றான்.
“அஹல்யா, தைரியமா இரு. நீ கொலையே செய்திருந்தா கூட உன்னை நான் காப்பாத்துவேன். புரியுதா? இப்போ இந்த செகண்ட், சரின்னு சொல்லு உடனே நாம கல்யாணம் செய்துக்கலாம்.” அஹல்யாவின் அருகே நெருங்கி நின்று மென்மையான குரலில் சொன்னான் அபினவ்
“இன்ஸ்பெக்டர் நிஜ குற்றவாளியை பிடிக்கட்டும் அபினவ். என்னால உங்க வேலைக்கு தொல்லை வந்திரக் கூடாது,” என்றாள் அஹல்யா தயக்கம் மின்ன!
“அவனுக்கு என்ன தொல்லை வருது?” கேட்டுக் கொண்டே வந்த சத்யா இரண்டுப் பேருக்கும் டீ கோப்பைகளைக் கொடுத்தாள்.
“அஹல்யாவோட வழக்கமான புலம்பல் தான்க்கா. நானும் அருணும் சீசரை வாக் கூட்டிட்டுப் போயிட்டு வரோம்.” அபினவ் ஒரே மூச்சில் டீயை குடித்து, காலி கோப்பையை சத்யாவிடம் கொடுத்து விட்டு போனான்.
“ஏதாவது ஹெல்ப் வேணுமா டீச்சர்?” என அஹல்யாவிடம் வினவினாள் சத்யா.
“என்னை நீங்க அஹல்யான்னே கூப்பிடுங்க. இந்த வீடை எனக்கு தங்க கொடுத்ததை விட வேற என்ன பெரிய உதவி இருக்க முடியும். அந்த வீட்டை விட்டு வந்ததுக்கு அப்புறம் தான் சரியா மூச்சே விட முடியுது,” என்றாள் அஹல்யா நட்புடன்.
“அந்த வீட்டுல அப்படி என்ன பிரச்சனை? சவீதா தொல்லையை சொல்றீங்களோ?”
ஒரு கணம் திகைத்து நின்ற அஹல்யா, உடனே சுதாரித்துக் கொண்டாள்.
“அதை மறந்துட்டு பொருளை எடுத்து வைக்குற வேலையை பார்க்குறேன்.” அங்கிருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறை பக்கம் செல்ல திரும்பிய அஹல்யா வழியில் இருந்த அவளின் கைப்பையில் தடுக்கி கொண்டாள். கைப்பை கவிழ்ந்து விழுந்தது.