“கண்ணு இல்லையா உங்களுக்கு, பார்த்து வர மாட்டீங்களா?”
இழுத்துக் கொண்டே போய் கொண்டிருக்கும் சேகரனின் கேஸினால் எக்கச்சக்க கடுப்பில் இருந்த தென்றல்வாணனும் பதிலுக்கு எரிந்து விழுந்தான்.
“நீ எதிருல வந்தீயே, பார்த்து வர வேண்டியது தானே?”
கணவன் நல்ல மனநிலையில் இல்லை என்பது புரிந்து விட, வாயை மூடிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள் சத்யா. தென்றல்வாணன் அவளை முறைத்து விட்டு தன் அறைக்கு சென்றான்.
“ஏன்மா நீங்க படிக்குற கதையில எல்லாம் இப்படி வந்து மோதினா தென்றல் வீசுது, பாட்டு பாடுதுன்னு சொல்றாங்க. நீங்களும் அப்பாவும் இப்படி கத்துறீங்க?” இன்னமும் உணவுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த ஷாலினி, அம்மாவை கலாய்க்க கேள்வி கேட்டாள்!
கையிலிருந்த பாத்திரங்களை அப்படியே வைத்து விட்டு மகளின் முன் வந்து அமர்ந்தாள் சத்யா.
“நீ எப்போ அந்த கதை எல்லாம் படிச்ச?”
“ஏதோ பெரிய தப்பு செய்துட்ட மாதிரி கேட்குறீங்க?”
“படிக்குறப்போ ஸ்கூல், காலேஜ் பாட புக்கை மட்டும் படி. அதுக்கு அப்புறம் கதை புக் எல்லாம் படிக்க நிறைய நேரம் கிடைக்கும். பொறுமையா படிச்சுக்கலாம்.”
“நீங்க சொன்னா சரிம்மா. யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரென்ட்!”
“நீயும் எப்போவும் என் பெஸ்ட் ஃபிரென்ட் தான்!”