கிருத்திகா...
நான்காவது முறையாக அவள் பக்கம் பார்த்தான் அவன்...! பரவாயில்லையே, கற் சிலையிடம் நல்ல முன்னேற்றம் தான்...!!!!
அவள் யோசிக்கும் போதே, அவன் நடந்து அவள் பக்கம் வந்தான்.
அவளின் மனதினுள் சந்தோஷமும், கலக்கமும் சேர்ந்து எழுந்தன... மனம் படபடத்தது...
“உன் கிட்ட ஒரு விஷயம் பேசனும்...”
“என்னை பார்த்தாலே பயந்து ஓடுவீங்க, பேசனுமா??? பரவாயில்லையே...!!! சொல்லுங்க, என்ன விஷயம்?”
கிருத்திகாவின் கேலி புரிந்தாலும், அதைக் கண்டுக்கொள்ளாமல் பதில் சொன்னான் தியாகராஜன்.
“வெற்றிக்கு எங்க மேல எல்லாம் நம்பிக்கை வந்திருச்சு... உடனே ஊருக்கு கிளம்புறேன்னு அடம் பிடிச்சுட்டு இருக்கார்... இன்னும் இரண்டு நாள் இருக்க சொன்னா கேட்க மாட்டேங்குறார்...”
“அங்கே ஊருல அம்மா தனியா இருக்கிறதாலேயா இருக்கும்...”
“அப்படி தான் வெற்றியும் சொல்றார்... உன்னை இவ்வளவு நல்ல விதமா பார்த்துக்கிட்டதுக்கு அவருக்கு ஏதாவது ஹெல்ப் செய்யலாம்னு பார்த்தா, எதுவுமே வேண்டாம்னு சொல்றார்... அவர் ஒய்ஃப் கொஞ்சம் ஸ்மார்ட்டா தெரியுறாங்க... அவங்க கிட்ட பேசி பார்க்குறீயா??? இந்த ப்ளான்க் செக்கில அவங்களுக்கு வேண்டிய அமவுண்ட் எழுதிக்க சொல்லு...”
தியாகு பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்த செக்கை கையில் வாங்கிய கிருத்திகா, அதை யோசனையுடன் பார்த்தாள்!