(Reading time: 11 - 21 minutes)

நேரம் இரவு ஒன்பதரையை தொட்டிருந்தது. தனது அறைக்குள்  நுழைந்த நிமிடம் கண்கள் தானாக சுவற்றில் இருந்த அந்த புகைப்படத்தில் சென்று நின்றன.

மனதை பழைய நினைவுகளில் செலுத்திக்கொள்ள விரும்பியே .கையில் அந்த டைரியை எடுத்துக்கொண்டு தனது அறையின் பால்கனியில் சென்று அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தான் வசந்த்.

முதல் பக்கத்தை மறுபடி படித்தான் அவன். மனம் சுழல துவங்கியது.

அவள் டெல்லிக்கு வந்த இரண்டாம் நாள் நடந்த விபத்து அது. அன்று காலை ஒன்பதரை மணிக்கு அர்ச்சனாவை  அழைத்தான் வசந்த்.

என்னடா நைட் நல்ல தூக்கமா? என்றான் வசந்த்.

ஆஹா! சூப்பர் தூக்கம்.

'அடிப்பாவி! என்னை நினைச்சு நினைச்சு ராத்திரி பூரா தூங்காம இருந்திருப்பேன்னு நினைச்சேன். இப்படி சொல்லிட்டியே! என் நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்கே!' குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவன் சொல்ல கல,கலவென  சிரித்தபடியே அவள் தங்கியிருந்த ஹோடேலின் மாடியிலிருந்து படியிறங்கினாள் அர்ச்சனா.

இரண்டாம் படியில் கால் வைக்காமல் சிரித்துக்கொண்டே மூன்றாம் படியில் கால் வைத்தவள், கால் வழுக்கி தடுமாறி படிகளில் உருண்டாள்.

அவள் கையிலிருந்த கைப்பேசி கீழே  விழுந்து தெறித்து சிதற,

'அம்ம்ம்....ம்மா' என்ற அவளது குரலுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பதறியே போனான். அடுத்த இரண்டு அழைப்புகள் பயனளிக்காமல் போக, நல்ல வேளையாக அவள் தங்கியிருந்த ஹோடேல் எதுவென்று தெரிந்திருந்ததால், காரை எடுத்துக்கொண்டு பறந்தான் வசந்த். 

அடுத்த பன்னிரெண்டாவது நிமிடத்தில் ஹோடேலில் இருந்தான் வசந்த்

உயிரை சுண்டியிழுக்கும் வலியில், நகரக்கூட முடியாத வேதனையில், அந்த ஹோடேலின் வரவேற்பு அறையிலேயே அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

இடது கால் வீங்க துவங்கி இருக்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது. நண்பர்கள் அவளை சூழ்ந்திருந்தனர்.

'என்னாச்சுடா?' அவன் குரல் கேட்டு நிமிர்ந்தவளின் கண்களில், அவனை பார்த்த மாத்திரத்தில் கூடுதலாக நீர் சுரந்தது.

விழுந்துட்டேன். ரொ....ரொம்ப வலிக்....குது வசந்த்.

அவள் வேதனை குரலிலேயே தெரிய அவனுக்குள்ளே நிரம்பவே வலித்தது.

ஒண்ணுமில்லைடா  ஹாஸ்பிடல் போயிடலாம் வா'

'என்னாலே காலை நகர்த்தக்கூட முடியலை. ரொம்ப வலிக்குது வசந்த்.' கண்களை தாண்டி கண்ணீர் வழிந்தது.

அவள் கண்ணீரை தாங்கிக்கொள்ளவே முடியாமல், அந்த நொடியே அதை மாற்றிவிட விரும்பியவனாய், 'நீ நடக்க வேண்டாம், என் பொண்டாட்டிய நான் அப்படியே தூக்கிட்டு போயிடறேன்' என்றபடியே சுற்றி உள்ள நண்பர்களை பார்த்து 'ரெடி கைஸ்' என்றவன்

அவள் எதிர்பார்க்காத நொடியில் அவளை இரண்டு கைகளிலும் அப்படியே தூக்கி ஒரு சுழற்று சுழற்றி விட்டிருந்தான்.

அங்கே இருந்த இறுக்கமான சூழ்நிலை சட்டென மாற, சுற்றி நின்றிருந்த நண்பர்களின் ஆராவார கைதட்டல்களில் மொத்தமாய் சிவந்து போனாள் அர்ச்சனா.

அப்படியே அவளை தூக்கி கொண்டு அவன் நடக்க, மெது மெதுவாய் கண்களை நிமிர்த்தி அவன் முகத்தை அவள் பார்த்த நொடியில் அவன் கண் சிமிட்ட, மனமெங்கும் பட்டாம்பூச்சிகள் பறக்க, சிணுங்கி சிரித்து அவள் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்ட நொடியில் வலி என்ற ஒன்றே தெரியவில்லை அவளுக்கு.

அவளை காரின் முன்பக்கத்தில் அமற வைத்து விட்டு, சுற்றி நின்ற நண்பர்களை பார்த்து. ' யூ பீபிள் ப்ளீஸ் கேரி ஆன். ஐ வில் டேக் கேர்.' என்று புன்னகைத்தான்.

கார் நகரத்துவங்கியவுடன் 'ச்சே தப்பு பண்ணிட்டேன்' என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

என்னாச்சு? என்றவளின் முகத்தில் இன்னமும் வெட்கம் மிச்சமிருந்தது

இல்லை உன்னை தூக்கிட்டே அப்படியே 'கையில் மிதக்கும் கனவா நீன்னு' பாடி, ஒரு ரொமாண்டிக் சீன் போடலாம்னு பார்த்தேன். அதுக்குள்ளே  கார் கிட்டே வந்திட்டோம்.. கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணியிருந்திருக்கணும். 'சரி விடு. காரை விட்டு இறங்கினதும் மறுபடியும் தூக்கி பார்த்திடுவோம்

'ஹையோ என்று சிணுங்கியவளை புன்னகையுடன் அவன் ரசிக்க துவங்க, சட்டென்று யோவ்! ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுயா' என்று அவள் சொல்ல இருவரும் மலர்ந்து சிரித்த நொடி.....

அந்த நினைவுகளிலிருந்து வெளிவரவே விரும்பாமல் நீந்திக்கொண்டிருந்தான் வசந்த்.

ருத்துவமனையை அடைந்திருந்தனர் இருவரும்.

அது டாக்டர் சிதம்பரத்தின் மருத்துவமனை. அவர் வசந்தின் அப்பாவின் குடும்ப நண்பர்.

காலில் எலும்பு முறிவு என்றார் அவர். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

'மைனர் பிராக்சர்' என்றுதான் சொன்னார் அவர். ஆனால் அந்த எலும்பை சற்று நேர்படுத்தி அவர் கட்டு போட்டு விடுவதற்குள் அர்ச்சனா துடித்த துடிப்பில், அருகில் நின்றிருந்தவனின் கண்ணில் நீர் சேர்ந்து விட்டிருந்தது.

ஒண்ணுமில்லைடா. ஒண்ணுமில்லைடா. சரியாயிடும் அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்தவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தான் வசந்த்.

அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அவளை படுக்க வைத்து விட்டு நர்ஸ் நகர்ந்த அடுத்த நிமிடம் ,மெல்ல எழுந்து  அவள் அருகில் அமர்ந்திருந்தவனின் தோளில் சாய்ந்து சிறு குழந்தையாய் குலுங்கி குலுங்கி அழத்துவங்கினாள் அர்ச்சனா.

அதை எதிர் பார்க்காதவனாய் ஒரு நொடி திகைத்துப்போனான் வசந்த்.

தாங்கவே முடியாத அந்த வலி தந்த தாக்கத்திலிருந்து மீளுவதற்கு அவன் தோள்கள் தேவையாகவே இருந்தன அவளுக்கு.

அதை புரிந்து கொண்டவனாய் அவள் தோள்களை இதமாய் அணைத்துக்கொண்டான் வசந்த்.

அந்த இரண்டு ,மூன்று நிமிடங்கள் அவள் மனதிற்கு இத்தனை நெகிழ்வை, நிறைவை கொடுத்திருக்கும் என்று அப்போது புரியவில்லை வசந்துக்கு.

இந்த டைரியின் பக்கங்கள் அவனுக்கு அதை இப்போது உணர்த்திக்கொண்டிருந்தது.

என்னையும் அறியாமல் தான் அவன் தோள்களில் சாய்ந்தேன். வியந்து போனேன்.

அது எப்படி அந்த தோள்களில் இப்படி ஒரு நிம்மதி நிறைந்திருக்கிறது?

இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் திருமணம். நடக்கட்டும் அது நடக்கும் போது நடக்கட்டும்.

நான் அந்த மூன்று  நிமிடத்திற்குள்ளாகவே அவனுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்டேன்.

மறுபடி மறுபடி அந்த வரிகளை படித்துக்கொண்டே இருந்தான் வசந்த்.

 

சாப்பாட்டு மேஜையை துடைத்துக்கொண்டிருந்தபோது, அனுவின் கண்ணில் தென்பட்டது வசந்த் மறந்து வைத்துவிட்டு போன அவனது கைப்பேசி.

சாந்தினியை அழைத்தாள் அனுராதா.

'இந்த மொபைல எங்க அண்ணன்கிட்டே கொடுத்திடேன்'

'சரி நான் கொடுக்கிறேன். அவர் லவ் பண்ற பொண்ணு பேரு என்ன? அதை மட்டும் சொல்லுங்களேன்.'

'ஏய்! வேற வேலை இல்லையா உனக்கு? போய் ஏதாவது படிக்கிற வேலையிருந்தா பாரு.' அவளை அதட்டினாள் அனுராதா.

ஏனோ அவன் கதையை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் சாந்தினிக்கு அதிகமாகிக்கொண்டே இருந்தது.

'பேரை மட்டும் சொல்லுங்க நான் வேற எதுவும் கேட்க மாட்டேன்.

'அர்ச்சனா.! போதுமா? போய் உருப்படியா ஏதாவது வேலை பாரு.

அர்ச்சனா என்ற பேரே அவளை ஈர்த்தது.

மாடிப்படி ஏற துவங்கிய நேரத்தில், அவள் விரல்கள் சும்மா இல்லாமல் கைப்பேசியுடன் விளையாட சட்டென அதன் திரை ஒளிர்ந்தது.

அதன் திரையில் புகைப்படத்தில் சிரித்துகொண்டிருந்தாள் அர்ச்சனா. நின்றே விட்டாள் சாந்தினி. இதுதான் அர்ச்சனாவா?

அடுத்த சில நொடிகள் அவள் விரல்கள் அந்த கைபேசியில் விளையாட அவள் கண்ணில் தென்பட்டது அந்த எண்.

அந்த எண் அர்ச்சனாவின் கைப்பேசி எண்.

தொடரும்

Manathile oru paattu episode # 14

Manathile oru paattu episode # 16

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.