(Reading time: 18 - 35 minutes)

03. சிறகுகள் - பாலா

தேன்மொழி நின்றுக் கொண்டிருக்கையிலே கௌதம் எழுந்து கிளம்பினான்.

அவனிடம் பேசலாமா, ஜஸ்ட் ஒரு ஹாய் என்றாவது சொல்லலாமா என்று தேன்மொழி எண்ணிக் கொண்டிருக்க,

அங்கிருந்த ஏதோ தடுக்கி கௌதம் தடுமாறி விழ போனான். சமாளித்து நின்று விட்டான். ஆனால் அவன் கையிலிருந்த மொபைல் விழுந்து விட்டது.

Siragugal

கௌதம் ஒரு நிமிடம் நிதானமாக நின்று திரும்ப கீழே அமர்ந்து தடவி தடவி மொபைலை தேடிக் கொண்டிருந்தான்.

பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு அதிர்ச்சி.

ஆம். கௌதமால் பார்க்க இயலவில்லை.

மொபைலை தேடி எடுத்து விட்டிருந்தான் கௌதம். அது தனித்தனியாக கிழண்டு விட்டிருந்தது. அதன் பேட்டரி மட்டும் அவன் கையில் கிடைக்காமல் தொலைவில் இருந்தது. அதை தேடிக் கொண்டிருந்தான் கௌதம்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழியால் ஒரு நிமிடம் மூச்சே விட முடியவில்லை.

நாம் எல்லோருக்குமே பார்வை இல்லாதவர்கள் எப்படி கஷ்டப் படுவார்கள் என்று அறிந்து தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் படும் துன்பத்தை நேரில் பார்க்கும் போது அதை நம்மால் தாங்கி கொள்ள இயல்வதில்லை.

தேன்மொழியும் அந்த நிலையில் தான் இருந்தாள்.

அதற்குள் பேட்டரியையும் அவன் எடுத்து விட்டிருந்தான். பேக் பேனல், பேட்டரி எல்லாவற்றையும் தடவிப் பார்த்தே சரியாக பொருத்தினான்.

முதல் நாளிலிருந்து அவன் நடந்து கொண்ட செயல்களுக்கெல்லாம் புரியாத அர்த்தங்கள் தேன்மொழிக்கு இப்போது புரிந்தது.

கௌதம் இருந்த வீடு கீழே பெரிதாக இருக்க, மேலே பாதி இடத்தை காலியாக விட்டு மீதியை மட்டும் கட்டி இருந்தார்கள்.

கௌதம் மேலே இருந்த அந்த போர்ஷனுக்கு சென்றான்.

அங்கேயே நின்றுக் கொண்டிருந்த தேன்மொழி நெடுநேரம் கழித்து சுய நினைவு பெற்று கீழே இறங்கி சென்றாள்.

ஏனோ அவளால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

கௌதமை பார்க்கும் யாருக்கும் அவன் பார்வை அற்றவன் என்றே தோன்றாது.

ஒரு வாரம் அவனுடனே இருந்தும் தனக்கு தெரியவில்லையே என்று எண்ணிக் கொண்டாள் தேன்மொழி. அதிலும் அவன் நடந்து செல்லும் போது கூட அவள் பார்த்திருக்கிறாள். அவனை யாரும் பிடித்துக் கொண்டு கூட செல்வதில்லை. ஆனால் கிருஷ்ணா அவன் முன்னோ அல்லது பின்னோ செல்வது இப்போது தான் அவள் நினைவுக்கு வந்தது.

இவை எல்லாவற்றையும் விட தௌலத்தும், ஜமுனாவோ கூட இதை சொல்லாதது தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ன்று தேன்மொழி இன்ஸ்டிட்யூட்டிற்கு சென்ற போது கிருஷ்ணா சிரித்துக் கொண்டே அவளை வரவேற்றான்.

ஆனால் தேன்மொழிக்கு அதெல்லாம் கண்களில் படவே இல்லை. ஏதோ யோசித்தவாறே அவள் சைன் செய்து கொண்டிருந்தாள்.

தேன்மொழி அவ்வளவாக சிரித்து கொண்டு வர மாட்டாள் என்றாலும், அவன் சிரித்தால் பதிலுக்கு புன்னகை செய்து விட்டு அவனுக்கு காலை வணக்கம் சொல்லுவாள். அதிலும் அவள் முகத்தில் என்றும் இல்லாத குழப்பம் தெரியவே கிருஷ்ணா என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

சைன் செய்து விட்டு நிமிர்ந்தவள் அப்போது தான் கிருஷ்ணாவின் முகம் தன்னை பார்த்துக் கொண்டே யோசனையில் இருப்பதைக் கண்டாள்.

“என்ன சார்” என்றாள்.

கிருஷ்ணாவை எல்லோருமே கிருஷ்ணா என்று தான் அங்கு கூப்பிடுவார்கள். அதற்காக யாரும் அவனை மதிக்காமல் பேசுவார்கள் என்றில்லை. அவர்கள் எல்லோருமே அவனை விட பெரியவர்கள் ஆதலால் எல்லோரும் அவனை பெயரிட்டே அழைப்பார்கள். ஆனால் தேன்மொழி தான் புதியதாக அவனை சார் என்று அழைத்தாள்.

“தயவு செய்து என்னை இப்படி சார்ன்னு எல்லாம் கூப்பிடாதீங்க மேடம்”

“வேற எப்படி கூப்பிடுவது”

“கிருஷ்ணான்னே கூப்பிடுங்க”

“நீங்க எப்படியும் என்னை விட பெரியவர். நான் எப்படி அப்படி கூப்பிட முடியும்”

“இல்ல. என்னை எல்லாரும் அப்படி தான் கூப்பிடுவாங்க. எனக்கு அப்படியே பழகிடுச்சி. இப்ப நீங்க திடீர்ன்னு சார்னு கூப்பிட்டா எனக்கு அது ஏதோ வித்தியாசமா இருக்கு”

“அவங்க எல்லாரும் உங்களை விட பெரியவங்க. அதனால அப்படி கூப்பிடறாங்க. பட் நான் எப்படி அப்படி கூப்பிட முடியும்”

“ஓ சரி விடுங்க மேடம். எப்பவுமே ரொம்ப தெளிவா வருவீங்க. இன்னைக்கு என்ன உங்க முகமே குழப்பமா இருக்கு”

ஒரு நிமிடம் கௌதமை பற்றி கேட்கலாமா என்று எண்ணியவள், மறு நிமிடமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஏதோ சொல்லி சமாளித்து விட்டு சென்று விட்டாள்.

கிருஷ்ணா பார்க்க ஏதோ ஹிந்தி ஹீரோ போல இருப்பான். வெள்ளையாக, நல்ல உயரமாக இருப்பான். ஆனால் அவன் தோற்றத்தில் எந்த வித கவனமும் செலுத்த மாட்டான். கலைந்த தலை, கசங்கிய சட்டை என்று.

அங்கு எல்லோரும் ஏதாவது ஒரு விசயத்திற்கு கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்துக் கொண்டே இருப்பார்கள். மொத்தத்தில் அவன் பம்பரம் போல சுழன்றுக் கொண்டே இருப்பான். ஆனால் எந்த வேலையாக இருந்தாலும், கௌதமை கவனிப்பது தான் அவனின் முதல் வேலையாக இருக்கும், எல்லா வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு கௌதமை கவனிப்பான்.

அது எதனால் என்று அவளுக்கு இப்போது புரிந்திருந்தது.

பார்ப்பதற்கு அவன் எதையும் கவனிக்காதது போல இருக்கும். ஆனால் இந்த ஒரு வாரத்தில் தன்னை பற்றி கணித்து தன் முக மாறுதலை கூட கவனித்து கேட்பவனை என்னவென்று நினைப்பது.

இவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான் என்று அப்போது தான் உணர்ந்தாள் அவள்.

இவள் எண்ண ஓட்டங்கள் முடிந்து வெளியே வந்திருக்க சுந்தர் மட்டும் தான் வந்திருந்தான்.

இவளுக்கு முதல் ஹவர் கிளாஸ் இருந்தது. சுந்தருக்கும் முதல் ஹவர் கிளாஸ் இருந்திருக்க வேண்டும். அது தான் அவனும் வந்து விட்டிருந்தான்.

அடுத்து ஜமுனா வந்து விட தேன்மொழிக்கு கௌதமைப் பற்றி அவளிடம் கேட்கலாமா என்று ஒரே குழப்பம். ஏதேதோ குழப்பங்களிடையே கேட்கலாம் என்று தோன்றினாலும் அங்கு சுந்தர் வேறு இருக்கிறான். அவனெதிரே எதுவும் கேட்க அவளுக்கு விருப்பமில்லை.

அதுவுமில்லாமல் அவளுக்கு கிளாஸ் வேறு இருக்கிறது. எனவே அப்புறம் இதைப் பற்றி கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.