(Reading time: 16 - 31 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 06 - ஜெய்

ன்னா  நாளைக்கு நாம மாப்பிள்ளையாத்துக்கு போகணுமே.  நம்ம கௌரிக்கு நாம என்னப் பண்ணப் போறோம்ன்னு எல்லாம் பேசிக்கவே இல்லையே.  உங்களுக்கு ஒண்ணும் இப்போ வேலை இல்லைனா எல்லாத்தையும் பேசி  முடிவு பண்ணிடலாமா”.  ஆபீசில் இருந்து வந்த ராமனிடம் காபியை நீட்டிக் கொண்டே ஜானகி கேட்டார்.

“எனக்கு ஒண்ணும் வேலை இல்லை ஜானகி.  நாம உக்கார்ந்து பேசி முடிக்கலாம்.  உன் தம்பி போன் பண்ணி இருந்தான். “

“என்ன திடீர்ன்னு.  ஆத்துக்கு எதுவும் பண்ணலையே.  அலமுக்கூட கார்த்தால பேசினாளே, ஒண்ணும் சொல்லலை.”

Gowri kalyana vaibogame

“ஓ சரி, நீ அலமுக் கூடத்தான் பேசிண்டு இருந்தியா.  அவன் இங்கதான் முதல்ல பண்ணினானாம்.  போன் ரொம்ப நேரமா எங்கேஜ்டா இருந்ததால எனக்குப் பண்ணி இருக்கான்.  உனக்குத்தான் அவளோட பேச ஆரம்பிச்சா வைக்கவே மனசு வராதே.  சனிக்கிழமை இங்க வரேன்னு சொன்னான்.  மாப்பிள்ளை ஆத்துல என்ன சொன்னான்னு கேட்டுண்டு அப்படியே அவன் என்னலாம் பண்ணனும்ன்னு கேட்டுண்டு போறேன்னு சொன்னான்.   ஹரி வந்தாச்சா.  கௌரி ஆபீஸ்லேர்ந்து எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னா. ”

“ஹரி வந்தாச்சு.  கோவிந்த் ஆத்து வரைக்கும் போய் இருக்கான்.  இப்போ வந்துடுவான்.  கௌரிக்கு இன்னைக்கு ஏதோ கால் இருக்காம்.  அதனால வர்ற 10 மணி ஆகும்ன்னு ராத்திருக்கும் சேர்த்து டிபன் எடுத்துண்டு போய்ட்டா.  ஆபீஸ்ல வாங்கிக்கோடின்னாக் கூட கேக்கலை. போம்மா அந்தக் காஞ்சுப் போன சாப்பாட்டை எவ திம்பான்னு சொல்றா.  இவ கல்யாணம் ஆகிப் போனா என்னப் பண்ணப் போறாளோ.  ஆத்துலயும் வேலை செஞ்சு, ஆபீஸ்லயும் வேலை செஞ்சுன்னு ஓய்ஞ்சுப் போய்டப்போறா”, பெண்ணைப் பற்றி கவலைப் பட ஆரம்பித்தார் ஜானகி.

“இத்தனை நாள் அவ வேலை செய்யலைன்னு கஷ்டப்பட்ட, இப்போ செய்யப் போறாளேன்னு கஷ்டப்படற.  உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை ஜானகி”

“இது பெண்ணைப் பெத்த அம்மாக்கள் எல்லாரும் படறதுதான்னா.  நம்மாத்துல இருக்கற வரை பாசம் உள்ளுக்குள்ள இருந்தாலும், அதை வெளிலக்  காமிச்சா ஏற்கனவே ஏணி மேல ஏறி நிக்கறவ இன்னும் மாடி மேல நிப்பாளேன்னு கண்டிப்பா இருக்கறா மாதிரி இருந்தேன்.  இனி அவக் கல்யாணம் ஆகிப் போய்ட்டா தனியா சமாளிக்கனுமேன்னு  கவலை வந்துடுத்து.”

“நீ கவலையேப் படாத ஜானு.   நம்ம கௌரி அதெல்லாம் தூள் கிளப்பிடுவா.  அவ எத்தனைக்கெத்தனை விளையாட்டுத்தனமா இருக்காளோ அத்தனைக்கு பொறுப்பாவும் இருப்பா.  உனக்கு உடம்பு சரி இல்லைன்னு ஆஸ்ப்பத்திரில அட்மிட் ஆகி இருந்தியே அப்ப ஆத்தையும் பார்த்துண்டு  உன்னையும் பார்த்துக்கலையா”, தன் மனைவியின் கவலையைப் போக்க ஆரம்பித்தார் ராமன்.(மக்களே இப்போ பொறுப்புக்குப் பக்கத்துல நீங்க கௌரி போரையும் சேர்த்துக்கலாம்ப்பா)

“சரி ஜானகி, நாம கௌரிக்கு வாங்க வேண்டிய நகை, புடவை இதைப்  பத்தி எல்லாம் பேசிடலாம்,  அதுக்கு பட்ஜெட்டும் போட்டுடலாம்.  அது கௌரி இருக்கும்போது பண்ணினா அவளுக்கு அம்மா, அப்பா நமக்காக இத்தனை  செலவழிக்கராளான்னு கஷ்டமா இருக்கும்.” என்றார்.

ஜானகியும் தெளிந்து,  “நீங்க சொல்றது கரெக்ட்னா,  குழந்தைக்கு நேரா பேசினா அவ மனசு சங்கடப்படும்.  இப்போவே பேசி முடிச்சுடலாம்.  நாளைக்கு அவாத்துல பேசறத்துக்கும் வசதி.  இருங்கோ நான் போய் ராத்திரி டிபன்க்கு சப்பாத்தி மாவு பிசைஞ்சு வச்சுட்டு அப்படியே நோட் புக்கும் எடுத்துண்டு வரேன்.  நாம உக்கார்ந்து  லிஸ்ட் போட்டு முடிச்சுடலாம்.” என்றார்.

ன் வேலையை அரை மணியில் முடித்து ஜானகி வரவும், ஹரி வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

தான் வந்ததுக் கூடத் தெரியாமல் அதி தீவிர யோசனையில் இருந்த ராமனை உலுக்கிய ஹரி, “என்னப்பா, ஏதோ ரொம்ப தீவிரமா யோசிச்சுண்டு இருக்கேள்.   ஏதானும் பிரச்சனையா.  ஆபீஸ் விஷயமா”, என்று கேட்டான்.

“ச்சே ச்சே பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை ஹரி.  கௌரி கல்யாண பட்ஜெட் போடலாம்ன்னு நானும் அம்மாவும் பேசிண்டோம், அதான் என்னலாம் பண்ணனும்ன்னு யோசிச்சுண்டு இருந்தேன்”

“ஓ சரிப்பா.  நான் ஏதானும் பண்ணனும்ன்னா சொல்லுங்கோ. “

“இல்லைடா இப்போதைக்கு வாங்கப் போறது இல்லை.  அது கல்யாணத்  தேதியை முடிவு பண்ணிட்டு அப்புறம் வாங்கிக்கலாம்.   “

“ஓ அப்போ சரி.  நீங்களும் அம்மாவும் சேர்ந்துப் பேசி முடிங்கோ.  எனக்குப் படிக்க நிறைய இருக்கு.  நான் ரூம்க்கு போறேன்.”  (மறுபடி மறுபடி படிச்சு படிச்சு badboyன்னே நிரூபிக்கற ஹரி.  உனக்கு இந்தக் கதைல ஆள் செட் பண்ணலாம்ன்னு இருந்தேன்.  நீ பண்ற வேலையைப் பார்த்தா நான் யோசிக்கணும் போல இருக்கு)

ஹரிக்கு காபியைக் கொடுத்துவிட்டு  நோட்டுப் புத்தகத்துடன் வந்த ஜானகி பிள்ளையார் சுழி, முருகர் துணை, ஸ்ரீ ராம ஜெயம் எல்லாம் எழுதிப்  பட்ஜெட்  போட ஆரம்பித்தாள்.  (மாமி இதெல்லாம் பத்திரிகைல போடுங்கோ, அத்தனை சுவாமியும் சேர்ந்தாவது உங்க பொண்ணோட வால்த்தனத்தை குறைக்கட்டும்.)

“ஜானகி நாம கௌரிக்கு போடப் போற நகைப் பத்தி மட்டும் நாளைக்கு சொல்லலாமா, இல்லை பாத்திரம் பண்டம் இதைப் பத்தியும் பேசணுமா”

“எனக்கும் ஒன்னும் தெரியலைன்னா.  ஒண்ணு பண்ணலாம்.  எல்லாத்தையும் இப்போ முடிவு பண்ணிட்டு நாளைக்கு அவாத்துல கேக்கறதுக்கு ஏத்தா மாதிரி பதில் சொல்லிக்கலாம்.  இப்போ முதல்ல நகை, கௌரிக்கு ஏற்கனவே பண்ணி வச்ச 25 சவரன் நகை இருக்கு.  இதுகூட இன்னும் ஒரு 10 பவுன் சேர்த்து 35 சவரனா போட்டுடறோம்ன்னு சொல்லலாம்.  அதுக்கு மேலனா நமக்குக் கஷ்டம்.”

“அது சரிதான்.  இப்போ விக்கற விலைக்கு இதுவே  2,3 லட்சம் ஓடிப் போய்டும்.  அப்புறம் இந்த டௌரிப் பத்தி எப்படி கேக்கறது.  நாம நேரடியாக் கேட்டா ஏதானும் தப்பா நினைச்சுப்பாளோ.   அதுக்குன்னு நாம கேக்காமையும் இருக்க முடியாது”, குடும்பத்தில் முதல் கல்யாணம் ஆகையால் ராமன் என்னப்  பேசுவது எப்படிப் பேசுவது என்று தெரியாமல் திண்டாடினார்.

“ஹ்ம்ம் எனக்கும் தெரியலை.   நாசூக்கா வேணா கேட்டுப் பார்க்கலாம்”

நீங்கள் டௌரி வாங்குவீர்களா என்பதை எப்படி நாசூக்கா கேட்பது என்று தெரியாமல், சரி அதை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டீலில் விட்டார் ராமன்.

“நான் அப்போ அப்போ பாத்திரக்காரனுக்குப் போட்டு வாங்கின பாத்திரமே நிறைய இருக்கு. அதைத் தவிர எனக்கு எங்காத்துல கொடுத்தது எல்லாம் பாலிஷ் போட்டு வச்சுடலாம்.  மிக்ஸியும் குக்கரும் மட்டும் புதுசு வாங்கினாப் போறும்.  எப்படியும் அவ சிங்கப்பூர்லதான் குடித்தனம் பண்ணப் போறா.  அதனால அவாத்துல கார், ஸ்கூட்டர் எல்லாம் கேக்க மாட்டான்னு நினைக்கிறேன்.”

“அதுவும் சரிதான்.  கட்டிலும், மெத்தையும் புதுசா வாங்கிடலாம்.  அதை மட்டும் அவா இஷ்டதுக்கே வாங்க சொல்லிடலாம்.  அவாத்து furnitureக்கு ஏத்தா மாதிரி அவா வாங்கிக்கட்டும்.”

“ம் சரின்னா.  அப்புறம் மாப்பிள்ளைக்கு நிச்சயத்தப்போ மோதிரமும், ப்ரேஸ்லெட்டும் போட்டுட்டு கல்யாணத்தப்போ செயின் போட்டுடலாம்.   அதே மாதிரி அவாத்துல என்ன என்ன சீர் வைப்பான்னும் கேட்டுக்கணும்.  ஓரோர் ஆத்துலயும் இதெல்லாம் வித்யாசப்படும்”

“சரி ஜானகி.  நீ எழுதி வச்சுண்டுட்ட இல்லை.  நாளைக்குப் பேசும்போது இதைத் தவிரவும் அவா ஏதானும் கேட்டாலும் நம்மளால முடிஞ்சா செஞ்சுடலாம்”

“ஆமான்னா, அந்த மாமா, மாமி ரொம்ப நல்லவாளா இருக்கா.   நாமளும் ரொம்பக் கறாரா இல்லாம முடிஞ்ச அளவு பண்ணிடலாம்”

“சரி ஜானகி, நீ போய் வேலையைப் பாரு.  நான் ஒரு நடை நடந்துட்டு வரேன்.  அப்படியே அவாத்துக்கு எடுத்துண்டு போறதுக்கும் பூ, பழம் வாங்கிண்டு வரேன்”

“நீங்க வெரும்ன்னு நடந்துட்டு மட்டும் வாங்கோ.  பூ, பழம் எல்லாம் நாளைக்கு அவாத்துக்குப்  போற வழில வாங்கிக்கலாம்.  அப்போதான் ப்ரெஷ்ஷா இருக்கும்”

“அதுவும் சரிதான்.  சரி நான் போயிட்டு வந்துடறேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.