(Reading time: 10 - 20 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 12 - ஜெய்

ரவு எட்டு மணி ஆகியும் ராமன் வீட்டிற்கு வராததால் கவலையுடன் வாசலுக்கும் கூடத்திற்கும் நடை பயின்று கொண்டிருந்தாள் ஜானகி.

“என்னம்மா அப்பாதான் யாருக்கோ உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரிக்குப் போறேன். வர லேட் ஆகும்ன்னு போன் பண்ணினார் இல்லை. அப்பறமும் எதுக்கு கவலைப் பட்டுண்டுண்டு இருக்க.”

“இல்லடா ஹரி மூணு மணிக்கே அப்பா அங்க போயாச்சு. இன்னுமா ஆஸ்பத்திரிலேயே இருப்பா. போன்லயும் சார்ஜ் இல்லையா என்னன்னு தெரியலை. சுவிச் ஆஃப் அப்படின்னு வரது. அதுதான் கவலையா இருக்கு. இந்த மனுஷனுக்கு இன்னொரு வாட்டி போன் பண்ணிச் சொன்னா என்ன. வீட்டுல இருக்கற மனுஷா கவலைபடுவான்னு இருக்கா பாரு.”

Gowri kalyana vaibogame

“ஏம்மா, அப்பா அங்க என்ன சூழ்நிலைல இருக்காளோ. தெரியலையே. நிறைய ஹாஸ்பிடல்ல பேஷன்ட் கூட இருக்கும்போது போன் பேசக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கும்மா. எட்டு மணிதானே ஆச்சு. ரொம்ப லேட் ஆகும்ன்னா அப்பாவே திரும்பி போன் பண்ணுவார். நீ கவலைப்படாம இரு.”, ஹரி ஜானகிக்கு ஆறுதலாக பேசிக்கொண்டிருக்கும்போதே கௌரி உள்ளே நுழைந்தாள்.

“என்னடா ஹரி, சிங்கம் சிங்கிளா ரோமிங்ல இருக்கு?”

“ஹ்ம்ம் ஆண் சிங்கம் அவுட் ஆஃப் ரீச்ல இருக்கறதால பெண் சிங்கம் கவலைல ரோமிங்ல இருக்கு.”

“ஓ அப்பா ஆபீஸ்லேர்ந்து இன்னும் வரலையா. ஏம்மா அப்பா கொஞ்ச நேரம் உன் தொல்லை இல்லாம ஜாலியா இருக்கட்டுமே.”

“ஏண்டி நீ வேற விஷயம் தெரியாம படுத்தற. அப்பா ஆபீஸ்ல யாருக்கோ உடம்பு சரி இல்லையாம். அவாளைக் கூட்டிண்டு ஹாஸ்பிடல் போறேன்னு மத்தியானம் மூணு மணிக்கு போன் பண்ணினார். அதுக்கப்புறம் ஒரு போனும் இல்லை. யாருக்கு என்ன ஒரு விஷயமும் தெரியாது. ஏதானும் சாப்ட்டாரான்னுக் கூட தெரியலை.”

“ஓ சாரிமா. யாருக்கும்மா உடம்பு சரியில்லை.”, கௌரி கவலையுடன் கேட்டுக் கொண்டிருக்குபோதே ராமன் உள்ளே நுழைந்தார்.

“என்னனா, யாருக்கு என்ன ஆச்சு. ஒரு விஷயமும் சொல்லாம வெரும்ன்னு ஹாஸ்பிடல் போறேன்னு சொன்னது கவலையாப் போச்சு. அங்க இருந்து ஒரு போனானும் பண்ணி இருக்க மாட்டேளா. நான் பண்ணினாலும் உங்க போன் வொர்க் பண்ணலை.”, ராமன் உள்ளே நுழைந்த உடனேயே பட படவென பொறிய ஆரம்பித்தாள் ஜானகி.

“அம்மா, அப்பா இப்போதான் உள்ள நுழைஞ்சு இருக்கா. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கட்டும். அப்பறமா உன் விசாரணைக் கமிஷனை ஆரம்பி. இந்தாங்கோப்பா தண்ணி குடிங்கோ”, அதிசயமாக படுப் பொறுப்பாகப் பேசினாள் கௌரி.

“தேங்க்ஸ் கௌரி. சாரி ஜானகி. அங்க இருந்த டென்ஷன்ல போன் பண்ண மறந்துட்டேன். என்னோட போன் ரூம்க்குள்ள போகும்போது சுவிச் ஆஃப் பண்ணினேன். அப்பறம் ஆன் பண்ணவே மறந்து போயிட்டேன் போல இருக்கு. நம்ம ராமுக்குதான் மைல்ட் அட்டாக் மாதிரி வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கு. இன்னும் கண்ணு முழிக்கலை. நாளைக்குதான் எதுவும் சொல்ல முடியும்ன்னு சொல்லிட்டா.”

“அச்சோ திடீர்ன்னு என்ன ஆச்சுன்னா. போன வாரம் கோவில்ல பார்த்தோன்னக்கூட நன்னாத்தானே இருந்தார். ஏதோ ஃபிளாட் வாங்கப் போறதாக் கூட சொன்னாரே.”

“ஹ்ம்ம் இப்போ வர வியாதி எல்லாம் சொல்லிண்டா வரது.   சரி ஜானகி எனக்கு கொஞ்ச பால் மட்டும் கொடு. மனசே சரி இல்லை. நான் கொஞ்ச நேரம் மாடில போய் நடந்துட்டு வரேன்.”

“நீங்க கவலைபடாதீங்கோன்னா. எல்லாம் சரியாப் போய்டும். மத்தியானம் சாபிட்டது. ரெண்டு இட்லி சாப்பிட்டு பால் குடிங்கோ. வெறும் பால் மட்டும் போறாது. நீங்க மாத்திரை வேறப் போட்டுக்கணும். சாபிட்டுட்டுப் போய் காத்தாட நடந்துட்டு வாங்கோ”, ஜானகி ராமனிற்கு இரவு உணவு எடுத்து வர சென்றாள்.

“கௌரி, ராமு மாமாக்கு உடம்பு சரி இல்லைன்னு அப்பா ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா. நான் போய் கொஞ்ச நேரம் அப்பாக் கூட பேசிண்டு இருக்கேன். நீ அம்மாக்கூட இரு, சரியா. இல்லாட்டா அம்மாவும் மேல வருவா”, ராமன் சாப்பிட்டுவிட்டு மாடிக்குப் போக, ராமன் வந்ததில் இருந்தே அவரைக் கவனித்துக் கொண்டிருந்த ஹரி ஏதோ சரி இல்லை என்று கெளரியிடம் சொல்லிவிட்டு அவருடன் பேச அவர் பின்னால் சென்றான். ஜானகி மேலே வராமல் இருப்பதை விட கௌரியை மேலே வர விடாமல் இருப்பதற்காகவே அவன் அவ்வாறு கூறியது.

ரி வருவதைப் பார்த்த ராமன் நடப்பதை நிறுத்தி விட்டு, “என்னடா ஹரி, எதுக்கு மேல வந்த. நானே கொஞ்ச நேரத்துல கீழ வந்து இருப்பேனே. ஏதானும் கேக்கணுமா?”

“இல்லைப்பா நீங்க வந்ததில் இருந்தே ஏதோ சரி இல்லை. என்ன ஆச்சு. உண்மைய சொல்லுங்கோ. ராமு மாமாக்குப் பெருசா ஒண்ணும் இல்லை இல்ல?”

“ஹ்ம்ம் விஷயம் கொஞ்சம் சீரியஸ்தான் ஹரி. அவனுக்கு ஹார்ட் அட்டாக் இல்லை. தூக்க மாத்திரை போட்டுண்டு தற்கொலைக்கு முயற்சி பண்ணி இருக்கான். ஆத்துல எல்லாரும் வெளில போய் இருக்கற சமயமா பார்த்து இதைப் பண்ணி இருக்கான். ராமுவோட வைஃப் வெளில போனவ எதையோ மறந்து வச்சுட்டு போய்ட்டதால கரெக்டா அந்த நேரத்துக்கு திரும்பி வந்து இருக்கா. அவ உள்ள வரப்போவே கிட்டத்தட்ட நுரை தள்ள ஆரம்பிச்சு இருக்கு. உடனே நேக்கு ஆபீஸ்க்கு போன் பண்ணிட்டா. நானும் ஆம்புலன்ஸ் வரவச்சுட்டு, நேரா ஹாஸ்பிட்டல் போயிட்டேன். இப்போ ரொம்ப சீரியஸ் கண்டிஷன்தான். நாளை வரை நினைவு திரும்பலைனா ஹோப் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டா.”

“அடப்பாவமே ஏம்ப்பா, தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு என்னப்பா பிரச்சனை? அதுவும் ரெண்டு சின்னக் கொழந்தைகள் வேற இருக்கு. அவாளைப் பத்தியானும் நினைச்சுப் பார்க்க வேண்டாம்.”

“எல்லாம் அந்த நாசமாப் போன ஃபைனான்ஸ் கம்பெனியால வந்தது ஹரி. அதுல கிட்டத்தட்ட பத்து லட்சம் போட்டு இருக்கான் போல இருக்கு. நேத்தைக்கு போலீஸ் ஸ்டேஷன் போய் விஜாரிச்சு இருக்கான். இன்னமும் அந்த எமாத்துப் பேர்வழியைப் பிடிக்கலை. பிடிச்சாலும் உடனே பணத்தை வாங்க முடியாதுங்கறா மாதிரி பேசி இருக்கா போல இருக்கு.   சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து கிளம்பும்போதே ஒரு மாதிரி அத்தனையும் போச்சுன்னு புலம்பிண்டேதான் போனான். இந்த விஷயத்தை ஆத்துல போய் சொல்லி இருக்கான் போல இருக்கு, பணம் போனக் கடுப்புல அவனோட பொண்டாட்டியும், ஊருல இருந்து வந்து இருந்த மாமனாரும் ஏதோக் கொஞ்சம் கோவமா பேசிட்டாப் போல அவா என்ன சொன்னான்னு தெரியலை. இவன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டான்.”, ராமன் சொல்ல சொல்ல அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான் ஹரி.

“என்னாப்பா இது. உணர்ச்சி வேகத்துல எல்லாரும் கோவப்படத்தான் செய்வா. அதுக்காக இப்படி ஒரு முடிவா எடுக்கறது. ரெண்டு குழந்தைகளும் இப்போதான் ஸ்கூல் படிக்கறா. அதுகளை வச்சுண்டு அந்த மாமி என்ன பண்ணுவான்னு கூடவா யோசிக்கலை.”

“இல்லை ஹரி. அவன் பண்ணினதும் உணர்ச்சி வேகத்துலதான். இத்தனை நாள் நம்மளை மதிச்சவாளே தூக்கி எறிஞ்சு பேசிட்டாளே அப்படிங்கற ஆதங்கம். தனியா இருக்கும்போது கழிவிரக்கம் ஜாஸ்தி ஆகி இந்த மாதிரி ஒரு முடிவு எடுக்க வச்சிருக்கு. கமலா ஒரே அழுகை. நான் பேசினதுனாலதான் இந்த மாதிரி ஒரு முடிவுக்கு வந்துட்டார் அப்படின்னு. அவனைக் கவனிக்கறதை விட அவளை சமாதானப்படுத்தறதுதான் பெரும் பாடாப் போச்சு. இதுல தற்கொலைக் கேஸ் அப்படிங்கறதால ஏகப்பட்ட ஃபோர்மாலிட்டீஸ். போலீஸ் வந்து விசாரணை முடிஞ்சு அவனை அட்மிட் பண்றதுக்குள்ள போறும் போறும்ன்னு ஆயிடுத்து. நல்ல வேளை அவன் மாமனாருக்குத் தெரிஞ்சவா யாரோ கட்சில இருக்காப் போல இருக்கு. அவா வழியாப் பேசி ஒரு வழியா அவன் தற்கொலைக்கு முயற்சி பண்ணினான்னு கேஸ் எதுவும் போடாம காப்பாத்த முடிஞ்சுது. இவாள்ளாம் குற்றவாளிகளை ஒழுங்காப் பிடிக்கறாளோ, இல்லையோ. இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் கரெக்டா ரூல்ஸ் பேசிண்டு வந்துடுவா.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.