(Reading time: 12 - 23 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 16 - ஜெய்

க்ஷ்மி மாமி சொன்னதை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து விட்டார்கள். மாமி குடுகுடுவென்று பண்ணிய காரியத்தால் எங்கே ராமன் குடும்பத்தவர் தங்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறார்களோ என்று பத்து மாமா கவலைப் பட ஆரம்பித்தார். நானே தேவலைப்போல, ஏதோ பேசும்போதுதான் உளருவேன். இவ சைலண்ட்டா இருந்தே சொதப்பல் காரியம் பண்றாளே என்று மனதிற்குள் மாமிக்கு சஹஸ்ரநாம கோடி அர்ச்சனை பண்ண ஆரம்பித்தார். அனைவரின் முகங்களும் அதிர்ச்சியில் இருப்பதைப் பார்த்த லக்ஷ்மி, கடைசியாகப் பத்து மாமாவைப் பார்க்க அதில் தெரிந்த பாவத்தைக் கண்டு மறுபடியும் தப்பாக நினைத்துக் கொண்டாயிற்றா என்று பதில் பார்வை பார்த்தார்.

“நீங்க எல்லாம் இதுல அதிர்ச்சி ஆற அளவுக்கு ஒண்ணுமே இல்லை. என்னடா இவ இப்படி அதிகப்ப்ரசங்கித்தனமா நம்மாத்து விஷயத்துல தலை இடறாளேன்னு நினைக்காதீங்கோ. நாங்க உங்களை வேத்து மனுஷாளா பார்க்கலை. எங்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா என்ன பண்ணி இருப்போம்ன்னு யோசிச்சேன்......”

லக்ஷ்மி மாமி பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்த ஜானகி, “அச்சோ இல்லை மாமி, அப்படி எல்லாம் நினைக்கலை. நீங்க இந்த அளவு கௌரியை ஒசத்தி வச்சுப் பேசறது நேக்கு சந்தோஷமாதான் இருக்கு, ஆனால் அவளுக்கு இப்போ நீங்க உண்மை தெரியும்ன்னு சொல்றச்ச நேக்கு நிஜமாவே உதறல் எடுக்கறது. அவ வந்து கல்யாணத்தை நிறுத்திடலாம் அப்படிங்கறா மாதிரி எதுவும் அச்சான்யமா பேசிடக் கூடாதேன்னு”

Gowri kalyana vaibogame

“மாமி ஏன் நீங்க அவ அப்படிதான் பேசுவான்னு தீர்மானமா இருக்கேள். சரி அப்படியே அவ சொன்னாலும் என்ன நம்மால அதுக்கு மறுத்துப் பேச முடியாதா. அவ சொன்ன உடனே நாம ஒத்துண்டு கல்யாணத்தை நிறுத்திடப் போறோமா என்ன, இல்லையே. இப்படி ஒரு மூணு பேருக்குள்ளேயே வச்சுண்டு எப்படா அவளுக்கு உண்மை தெரியப்போறதோன்னு பயந்துண்டே இருக்கறதை விட நேரடியா சொல்லிடலாம்”

“நீங்க சொல்றது சரிதான் மாமி, ஆனால் கௌரிக்கு நாங்க துளி கஷ்டப்படுவோம் அப்படின்னு தெரிஞ்சா போறும், மத்ததெல்லாம் ரெண்டாம் பட்சம் ஆயிடும்”

“மாமி நாங்க உங்களை அப்படி கஷ்டபடுத்தி கல்யாணத்தை நடத்த சொல்ல மாட்டோம்ன்னு அவளுக்கு நாங்க புரிய வைக்கறோம். கவலைப்படாதீங்கோ. நாம எல்லாரும் என்ன பன்றோம்ன்னா குழந்தைகளுக்கு நம்ம கஷ்டம் தெரியக்கூடாதுன்னே பாதி விஷயம் மறைச்சு மறைச்சு செய்யறோம், பின்னாடி யார் மூலமாவோ விஷயம் தேரியறச்ச அவாளுக்கு எத்தனை கஷ்டமா இருக்கும்ன்னு யோசிக்கறதில்லை. கௌரி ஆபீஸ்லேர்ந்து வரட்டும். எல்லாரும் சேர்ந்து பேசலாம்”

“சரி மாமா, நான் ஆத்துக்கு கிளம்பறேன். எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ. என்னோட ஹெல்ப் எப்போத் தேவைப்பட்டாலும் உடனே கூப்பிடுங்கோ. நான் வர்றேன்”, என்று அவர்கள் அனைவரிடமும் விடை பெற்று கோபால் கிளம்பினான்.

“லக்ஷ்மி கௌரி எத்தனை மணிக்கு வரேன்னு சொல்லி இருக்கா?”, பத்து மாமியிடம் கேட்டார்.

“அவ ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடறேன்னு சொல்லி இருக்கா”,என்று பதில் கூறினார்.

ல்லாரும் அமர்ந்து பேசிக்கொண்டே நேரத்தைக் கடத்த கௌரி வந்து சேர்ந்தாள்.

ராமனும், ஜானகியும் அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று குற்ற உணர்வில் தடுமாற, அவர்களைப் பார்த்த வண்ணமே உள்ளே நுழைந்த கௌரி லக்ஷ்மியிடம் திரும்பி, “வாங்கோப்பா, வாங்கோம்மா நன்னா இருக்கேளா? ஸ்வேதாவை ஏன் கூட்டிண்டு வரலை”, என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

“நன்னா இருக்கோம். ஸ்வேதா ஏதோ எழுத இருக்குன்னு சொன்னா. அதுதான் அவளை விட்டுட்டு வந்துட்டோம். சாரி கௌரி, வேலையா இருக்கறச்ச போன் பண்ணி உடனே ஆத்துக்கு வரணும்ன்னு சொன்னதுக்கு, ஏதானும் முக்கியமான வேலையை விட்டுட்டு வர வேண்டியதாப் போச்சா. உனக்கு ஓகேவான்னு கேக்காமயே வர சொல்லிட்டேன்”, லக்ஷ்மி கெளரியிடம் வருத்தத்துடன் கேட்டார்.

“இல்லைமா, கொஞ்சம் வேலை இருந்தது. அது பரவா இல்லை. ஆத்துலேர்ந்து பண்ணி முடிச்சுடுவேன். முக்கியமா ஆபீஸ்லேர்ந்து பண்ண வேண்டியதெல்லாம் முடிச்சுட்டுதான் கிளம்பினேன்”, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜானகி உள்ளே சென்று அனைவருக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள். அடுத்து யார் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். பத்து மாமா நாமளே பேச ஆரம்பிப்போம்ன்னு என்று ஆரம்பிக்கப் போக, மாமி எப்பொழுதும் போல் கண்களாலேயே அடக்கினார்.

ராமன் அங்கிருந்த மௌனத்தைத் தாங்க முடியாமல், “சாரி கௌரி, உன்கிட்டக்க இத்தனை நாளா விஷயத்தை மறைச்சு வச்சுட்டோம்”

“அப்பா, இப்பவும் லக்ஷ்மி அம்மா முழுசா விஷயம் சொல்லலை, இனியானும் எதையும் மறைக்காம நேக்கு மொதலேர்ந்து என்ன நடந்ததுன்னு சொல்லுங்கோ”, என்று கேட்க, ராமன் பணம் போட்டதில் ஆரம்பித்து சீட்டு கம்பெனி மூடியது வரை நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார்.

“ஹ்ம்ம் இதுல என்னண்ட மறைக்கற அளவுக்கு என்ன இருக்கு. இல்லை நேக்குத் தெரியாமையே கடைசி வரை மறைக்க முடியும்ன்னு எப்படி நினைசேள். இப்போதான் நேக்கு வேலை ஜாஸ்தி. எதையும் கவனிக்கலை. இன்னும் ஒரு வாரத்துல அந்த நிலை மாறி இருக்குமே. அப்போ விஷயம் தெரியத்தானே போறது. அப்போ என்ன பண்ணி இருப்பேள். நான் சிங்கப்பூர் போற வரை என்னை பேப்பர் பார்க்கவே விடாம இருப்பேளா?”

“இல்லை கௌரி, அப்படி நினைக்கலை. அந்த நேரத்துல எங்களுக்கு தோணினது எங்கே உன்கிட்டக்க சொன்னா உடனே நீ கல்யாணத்தை நிறுத்த சொல்லிடுவியோன்னுதான். அது நடக்கக் கூடாதுன்னுதான் அப்போ சொல்லை”

“சரி நான் ஒண்ணு கேக்கறேன். என் கல்யாணத்தை ஏதோ கடனை உடனை வாங்கி முடிச்சுடறேள். இப்போ நேக்கு விஷயம் தெரியலைன்னா அப்பறமாவானும் சொல்லி இருப்பேளா. இல்லை கல்யாணத்துக்கு அப்பறமும் மறைச்சிருப்பேளா?”, என்றி ராமனைப் பார்த்து கேட்க, அவர் அதற்கு கல்யாணத்திற்குப் பிறகும் சொல்வதாகவே இல்லை என்பது போல் தலை அசைத்தார்.

“ஏன்ப்பா, ஏன் இப்படி பண்ணினேள். நான் இன்னொரு ஆத்துக்கு கல்யாணம் ஆகிப் போறேன்னா, அதுக்குன்னு நம்மாத்தோட எல்லாத் தொடர்பும் விட்டுப் போச்சுன்னு அர்த்தமா. இங்க நடக்கற, நடக்கப் போற எல்லா விஷயத்துக்கும் நான் வெறும் பார்வையாளர் மட்டும்தானா?”, என்று வருத்தத்துடன் பேசிக்கொண்டே போக, கௌரி வருத்தப்படுவதை தாங்காமல் நடுவில் புகுந்தான் ஹரி.

“கௌரி என்ன நீ இப்படி எல்லாம் பேசற. இத்தனை வருஷத்துல உன்கிட்ட இருந்து அப்படி எத்தனை விஷயம் அப்பா மறைச்சிருக்கார்”, என்று கேட்டான்.

“அதுதாண்டா நானும் சொல்றேன், இத்தனை வருஷமா எதுவா இருந்தாலும் நாம நாலு பேருக்கும் தெரிஞ்சுதானே நடந்திருக்கு. இப்போதானே அது மூணு பேரா மாறி இருக்கு”, என்று கண்ணீர் குரலில் கூறினாள்.

“கௌரி புரியாமப் பேசற. நீ பேசறது நாங்க என்னவோ உன்னை ஒதுக்கி வச்சுட்டு பண்ணினா மாதிரி இருக்கு. நீ இன்னொரு ஆத்துக்கு கல்யாணம் ஆகி போகப்போறேன்னா, அதுக்கும் நம்மாத்து உனக்கான இடம் இல்லைன்னு அர்த்தமா? லூசு மாதிரி பேசாத கௌரி. அந்த மாதிரி நாங்க யோசிக்கவே இல்லை. இதை மாதிரி நேக்கு எதுக்கானும் பணம் கட்ட வேண்டி வந்து, அப்போ அப்பாவால கொடுக்க முடியாத சூழ்நிலை வந்து இருந்தா அப்பா என்னண்ட பண விஷயம் சொல்லாம, உங்க ரெண்டு பேர் கிட்ட மட்டும்தான் சொல்லி இருப்பார்”, ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் ராமன், இவள் இப்படி பேசுவதால் மேலும் வருத்தப்படப் போகிறாரே, என்று ஹரி கௌரியை சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.

“சரிடா, நீ சொல்றா மாதிரியே வச்சுக்கலாம். அப்படியே இருந்தாலும் எத்தனை நாளைக்கு, அப்பாவோட ரியாக்ஷேன் பார்த்தா என்னண்ட எப்போவுமே சொல்ற ஐடியால இல்லைன்னு தோணறது. இந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்பறம் இன்னும் எத்தனை கஷ்டத்தை மறைக்கப் போறேளோன்னு பயமா இருக்கு”, என்று சொல்ல, ஜானகியும், ராமனும் அதிர்ச்சியுடன் கௌரியை பார்த்தார்கள்.

“என்னடி நீ இப்படி எல்லாம் பேசற, அப்படி நோக்குத் தெரியாம இந்தாத்துல எத்தனை விஷயம் நடந்திருக்கு. இதை சொன்னா கிறுக்குத்தனமா கல்யாணத்தை நிருத்திடலாம்ன்னு சொல்லுவயோன்னுதான் மறைச்சோம்”, என்று ஜானகி கெளரியிடம் பொறிந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.