(Reading time: 10 - 19 minutes)

 20.கௌரி கல்யாண வைபோகமே - ஜெய்

ராமன், ஜானகி, ஹரி, கௌரி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது  வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்த கௌரி அங்கு நின்றிருந்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். 

“என்னம்மா மாட்டுப்பொண்ணே  அப்படியே திகைச்சுப் போய் நின்னுட்ட.  நாங்கள்லாம் மனுஷாதான்.  பயப்படாம கதவைத் திற”

“ஓ சாரி, எல்லாரும் வாங்கோ.  திடீர்ன்னு உங்களை எல்லாம்   பார்த்த உடனே ஒண்ணும் புரியல.  கௌஷிக்  எங்க இருந்து திடீர்ன்னு வந்தார்”,  பத்து குடும்பத்தாரை வரவேற்றபடியே கேட்டாள் கௌரி.

Gowri kalyana vaibogame

“இன்னைக்குக் சாயங்காலம்தான் சிங்கப்பூர்லேர்ந்து வந்தான் கௌரி. நான் உங்களோட வராத காரணம் அதுதான்.  எங்க வந்தா கௌஷிக் வர்றதைப் பத்தி உளறிடுவேன்னோன்னுதான் வராமையே இருந்துட்டேன்”, கெளரியிடம் கூறியபடியே உள்ளே வந்து அமர்ந்தார் பத்து.  மறுபடியும் கௌஷிக்கைப் பார்த்து ராமன் குடும்பத்தார் அதிசயிக்க, கௌஷிக் அனைவரிடமும் பேசியபடியே ஹாலில் வந்தமர்ந்தான். 

இவர்கள் வந்த உடன் ஜானகிதான் தவித்துப் போய் விட்டார்.  மணி வீட்டிலிருந்து தங்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஒரு அழுக்கு நைட்டிக்கு மாறிய பொண்ணை என்ன செய்வது என்று தெரியாமல்.  ஜானகியின் அவஸ்தையைப் பார்த்த லக்ஷ்மி மாமி தங்கள் பெண் ஸ்வேதாவும் இப்படித்தான், அதனால் கவலைப்படாமல் கௌரியை இயல்பாக இருக்க விட சொன்னார்.

“என்ன மாப்பிள்ளை.  திடீர்ன்னு வந்துருக்கேள்.  கல்யாணத்துக்கு சீக்கிரமே லீவ் கிடைச்சுடுத்தா”

“இல்லை மாமா.  எனக்கு இங்க ரெண்டு வாரம் கிளயன்ட் ஆபீஸ்ல வேலை.  அப்பறம் மூணு வாரம் கல்யாணத்துக்கு லீவ்.  சோ மொத்தமா இங்க இருந்து கல்யாணம் முடிஞ்சு கௌரியோட சேர்ந்துதான் சிங்கப்பூர் போகப் போறேன்.  கல்யாணம் முடிஞ்ச உடனே ரெண்டு பெரும் தனித்தனியா இருக்கப்போறோமேன்னு இனிமே நீங்கள்ளாம் கவலைப்பட வேண்டாம்”

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.  எனக்கு எங்க கவலையை விட இவ கல்யாணத்துக்கு அப்பறம் இங்க இருக்கறதைப் பத்தி யாரானும் ஏதானும் சொல்லப் போறாளேன்னு அதுதான் பெரிய கவலையா இருந்தது.    என்னதான்  வேலைக்காக அப்படின்னாலும் எத்தனைப் பேர் புரிஞ்சுப்பா சொல்லுங்கோ.  நீங்கள்ளாம் ஓகேன்னு சொல்லிட்டாலும், இந்த விஷயத்துல ஜானகிக்கும், கெளரிக்கும் தினம் சண்டைதான்.  குடும்பத்தைவிட வேலை என்ன அத்தனை முக்கியம்ன்னு”, ராமன் தன் சந்தோஷத்தை வார்த்தைகளில் கொட்டினார்.

“மாமா, கௌரிக்கிட்ட சண்டை போடற அளவுக்கு இந்தப் பிரச்சனை பெரிசு இல்லையே.  சரி விடுங்கோ.  இப்போ எல்லாம் சுமுகமா முடிஞ்சு போச்சு”, என்று ராமனுக்கு பதில் அளித்தபடியே தன் தந்தையைப் பார்த்து எதையோ கூறுமாறு சைகை காண்பித்தான் கௌஷிக்.  அவன் சமிக்ஞை புரிந்தாலும் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் அவன் பார்வையை சாய்ஸ்ஸில் விட்டார் பத்து.

வர்களின் நயன பாஷையை பார்த்த ஜானகி என்னவாக இருக்கும் என்று ராமனைப் பார்க்க ராமனும் தெரியவில்லையே என்ற லுக்கை ஜானகியை நோக்கி வீசினார்.  சிறிது நேரம் மௌனத்தில் கரைய பொறுமையைக் காற்றில் பறக்கவிட்ட கௌரி  பத்துவை நோக்கி, “அப்பா, நீங்க ஏதானும் முக்கியமான விஷயம் பேசணுமா. நாங்க இருக்கறது தொந்தரவா இருக்கா.  அப்படின்னா பளிச்சுன்னு சொல்லிடுங்கோ.  நான், ஸ்வேதா, ஹரி மூணு பேரும் மொட்டை மாடிக்குப் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வரோம்”, என்று கூற, கௌஷிக் அவளை முறைத்தான்.  ஒருத்தன் ஊருப்பட்ட பொய் சொல்லி ஆபீஸ்ல பெர்மிஷன்  வாங்கி  இவளைப் பார்க்க வந்தா என்னைத் தவிர எல்லாரையும் மாடிக்குக் கூப்பிடறா பாரு தத்தி, என்று மனதிற்குள் பலவிதமான அர்ச்சனைகளை கௌரியின் பேரில் செய்ய ஆரம்பித்தான் கௌஷிக். ஹரியோ, ஐயையோ மறுபடியும் ஸ்வேதாவுடன் தனியாகவா என்று அலற ஆரம்பித்தான்.

“ஏம்மா, நீ முதல்ல கௌஷிக்கோடன்னா தனியா பேசணும், அவனைத்தவிர அத்தனைப் பேர் பேரும் சொல்ற.  எம் பையன் மூஞ்சியைப் பார்த்தா நீ சொன்ன யோசனைக்கு உன்னை உள்ளுக்குள்ள பாராட்டிண்டு இருக்கான்னு நினைக்கறேன்”, பத்து மாமா  தன் பையன் மனநிலையை சரியாக கணித்துக் கூறினார்.

“அச்சோ அப்படில்லாம் தனியா பேசற அளவுக்கெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. ரெண்டாவது அவர்தான் உங்களைப் பார்த்து ஏதோ பேசணும்ங்கறா மாதிரி சைகை காமிச்சார் அதான் அப்படி சொன்னேன்”, கௌரி உண்மை பேசுவதாக உளற ஆரம்பிக்க, கௌஷிக் இவ வெறும் தத்தி இல்லை, வடிகட்டின தத்தி என்ற முடிவுக்கு வந்தான். பத்து இதுக்கு மேல உனக்கு என்னால் ஹெல்ப் பண்ண முடியாது என்ற பார்வையை கௌஷிக்கை நோக்கி வீசினார்.

ஆமா, அப்படியே இவர் ஹெல்ப் பண்ணிட்டாலும் அவ என்னோட தனியா வந்து டூயட் பாடிட்டுதான் மறு வேலை பார்ப்பா என்ற கடுப்புப் பார்வையை பார்த்த  கௌஷிக் கௌரியைப் பார்த்து,  “கரெக்டா கண்டுபிடிச்சுட்ட கௌரி.  நாங்க உங்க அம்மா, அப்பாக் கூட கொஞ்சம் தனியாப் பேசணும், நீங்க மூணு பேரும் மாடிக்குப் போங்கோ”, என்று பட்டென்று கூறினான்.

ரி, கௌரி, ஸ்வேதா மாடிக்குப் போக,  கௌஷிக்கிற்கு எங்கு ஆபீஸ் எத்தனை நாள் வேலை என்ற உப்புப் பெறாத விஷயங்களை சிறிது நேரம் பேசினர்.

“பத்து நீங்க ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் அப்படின்னுதான் வந்திருக்கேள்.  எதுவா இருந்தாலும்,  பளிச்சுன்னு சொல்லிடுங்கோ”, என்று ராமன் சொல்ல

“மாமா,  நான் சிங்கப்பூர்லேர்ந்து வர்றச்ச கௌரிக்கு பத்து சவரன் நகை வாங்கிண்டு வந்துட்டேன்.  ஆறு மாசம் கழிச்சு நகை போடறதுக்கு நீங்க ஒத்துண்டாலும், இப்போ போட முடியாமப் போச்சேன்னு நீங்க வருத்தப்படறதா கௌரி சொன்னா”

“அச்சோ என்ன மாப்பிள்ளை நீங்க, அதுக்காக இப்போ நீங்க வாங்கிண்டு வரணுமா.  உங்களுக்கும் ஏகப்பட்ட செலவுதானே.  அவ சொன்னான்னு நீங்களும் உடனே இப்படி பண்ணிட்டேளே”

“அப்படி எல்லாம் இல்லை மாமா.  நான் எப்படியுமே அவளுக்கு வாங்கறதா இருந்தேன்.  இப்போ அது கான்செல் ஆயிடுத்து அவ்வளவுதான்.  நான் வாங்கறதா இருந்ததை அப்பறமா வாங்கிக்  கொடுத்தாப் போச்சு.  நீங்க இனிமே அந்த பணம் வருமா, நகை இப்போ போட முடியலையே அப்படிங்கற எல்லா டென்ஷனையும் விட்டுட்டு சந்தோஷமா கல்யாண ஏற்ப்பாடுகளை மட்டும் கவனிக்க ஆரம்பிங்க.  அந்தப் பணம் வரும்போது வரட்டும்.”

“மாப்பிள்ளை எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.  எங்க கஷ்டத்தைப் புரிஞ்சிண்டு உங்க குடும்பத்துல நீங்க பண்ற ஹெல்ப்க்கெல்லாம் எப்படி பரிகாரம் செய்யப் போறோம்ன்னு தெரியலை”, ராமன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க ஆரம்பித்தார்.

“அச்சோ என்ன ராமன் இது.  இனிமே நாமல்லாம் ஒரே குடும்பம்.  ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கறதுல என்ன இருக்கு.  நாளைக்கு எங்களுக்கு ஒண்ணுன்னா நீங்க வர மாட்டேளா என்ன?”, பத்து ராமனை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

“மாமா அப்பறம் என்னை கௌஷிக் அப்படின்னே கூப்டுங்கோ.  நீங்க மாப்பிள்ளை, மாப்பிள்ளை அப்படிங்கும்போது என்னவோ மாதிரி இருக்கு”, என்று கூற ராமனும் அதற்கு ஒத்துக் கொண்டார்.

“கௌஷிக் உங்களுக்கு கௌரி கூட தனியா பேசணும்ன்னா பேசிட்டு வாங்கோ.  இங்க ஆத்துக்குள்ள உங்களுக்கு ப்ரைவசி  இருக்காது.  நீங்க வேணா மாடிக்குப் போய் அவக்கூட பேசிட்டு வாங்கோ. நாங்க இருக்கோமேன்னு தயங்க வேண்டாம்”

“இல்லை மாமா.  இது ப்ளாட்ஸ்.  நாங்க மட்டும் மாடிலப் போய்த் தனியா பேசறதை யாரானும் பார்த்தா நன்னா இருக்காது.  நாளைக்கு அவ ஆபீஸ் வேலை முடிஞ்சு சாயங்காலம் ப்ரீயா இருந்தான்னா வெளில கூட்டிண்டு போக உங்க பெர்மிஷன் கிடைக்குமா?”

“கண்டிப்பா எங்களுக்கு ஒண்ணும் ஆட்ச்சேபனை  நீங்க அவக்கூட பேசி டைம் முடிவு பண்ணிக்கோங்கோ”, என்று ராமன் சம்மதம் கூற, மாடியிலிருந்து கௌரி, ஹரி, ஸ்வேதா இறங்கி வந்த பின் கௌஷிக் மறுநாள் மாலை வந்து கௌரியை அழைத்து செல்வதாகக் கூற, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கௌஷிக் குடும்பம் கிளம்பியது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.