(Reading time: 10 - 19 minutes)

05. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

"லோ"

"ஹே ரிது சொல்லுடா !! நானே இப்போ தான் உனக்கு கால் பண்ணலாம்ன்னு இருந்தேன். நான் இனி மேல் தான்டா    சித்தப்பாட்ட பேசணும்."

"இல்லை வேண்டாம் அண்ணா. நானே அப்பா, அம்மா கிட்ட இன்னிக்கு காலைல பேசிட்டேன். அதை சொல்லறதுக்கு தான்  இப்போ உங்களுக்கு கால் பண்ணேன்.இனிமேல் நீங்க இதை பத்தி ஏதும் பேசாதீங்க. எனக்கு காலேஜ்கு  டைம் ஆய்டுச்சு. பாய்" என்று அழைப்பை துண்டித்தாள்.

Katre en vasal vanthai

"ஹே ரிது இரு!!" மறுமுனையில் மதன் கத்தி கொண்டு இருந்தான்.

"என்ன ஆச்சு இவளுக்கு!! அவசரமா போன் பண்ணா. நான் சொல்றதுக்குள்ள கட் பண்ணிட்டா.!! சித்தி வேற என்ன சொன்னாங்கன்னு தெரிலையே" என்று தனியாக வாய் விட்டு புலம்பி கொண்டு இருந்தவனை கண்டு அங்கு வந்த ரேவதி அவனை பின்புறமாக அணைத்துக் கொண்டு

"என்ன போன் கட் பண்ணிட்டாளா!!" என்று சிரிப்புடன் கேட்டாள். 

" ஹே ரதி !! நீ எப்போடா இங்க வந்த. நான் புலம்பறது உனக்கு சிரிப்பா இருக்கா?? இந்த ரிது தான் கால் பண்ணா. நேத்து நான் ரிது சொன்னதை  பத்தி உன்கிட்ட சொன்னேன்ல. இப்போ அதை பத்தி சித்தி கிட்ட பேச வேண்டாம்ன்னு சொல்லி உடனே கால் கட் பண்ணிட்டா" என்று கூறியபடியே தான் மனைவியின் கைகளை பிடித்து இழுத்து தன் முன்னே நிறுத்தினான்.

"ஹ்ம்ம் சரி விடுங்க மதன். அவளை பத்தி தான் நமக்கு தெரியுமே. அவ காரணம் இல்லாம எதுவும் சொல்ல மாட்டா. அவளே உங்க கிட்ட வந்து சொல்லுவா பாருங்க."

"சரிங்க மேடம். நீங்க சொன்ன சரியாய் தான் இருக்கும். நீங்க இப்போ நல்ல சாப்டீங்களா இல்லை வாந்தி வருதுன்னு சொல்லி சரியாய் சாப்படாம  இருக்கியா.." என்று அவளிடம் கேட்கும் போதே மதனின் மொபைல் அழைத்தது.

"ஹலோ!! மதன்"

"ஹ்ம்ம் சொல்லுங்க சித்தப்பா.என்ன காலைலேயே எனக்கு கால் பண்ணிருக்கீங்க. எதாவது முக்கியமா விஷயமா" என்று கேட்டான்.

மறுமுனையில் அவர் புன்னகையுடன் "ஹ்ம்ம். கரெக்ட் தான். உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ உன்னால நம்ம பண்ணை வீட்டுக்கு வர முடியுமா"

"ஒகே. நான் கண்டிப்பா வரேன்.இன்னும் 15 நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்". அதன் பின் அழைப்பை துண்டித்தவன் தன் மனைவியின் புறம் திரும்பினான்.

"டேய் ரதி!! அனேகமா ரிது பத்தி பேச தான் எனக்கு கால் பண்ணி வர சொன்னாரு போல. நான் போய்ட்டு வரட்டுமா. நீ ஒழுங்கா அங்க இங்க சுத்தாமா போய் ரெஸ்ட் எடு. சரியா. மத்தது எல்லாம் அம்மா பார்த்துப்பாங்க.உனக்கு எதாவது வேணும்னாலும் அம்மா கிட்ட தயங்காம கேளு."என்று கூறி அவளை மென்மையாக அணைத்தான். 

எப்பொழுதும் போல தன் கணவனின் அன்பில் நெகிழ்ந்த ரதியோ அவனை மேலும் நெருங்கி இறுக்கமாக அணைத்து கொண்டாள். இருவரும் ஒருவரின் அருகாமையை ஒருவர் விரும்பினார்கள். சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்த மதன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தவன் "சோ ச்வீட் ரதிம்மா!!" என்று அவள் காதில் கிறக்கமாக கூறினான்.

அவனின் ரகசியப் பேச்சில் தன்னை மறந்த ரதியோ இமைக்காமல் அவனையே பார்த்தாள். அவளின் பார்வையில் மதன் என்ன கண்டானோ "சட்டென்று குனிந்து அவளின் மணி வயிற்றில் மென்மையாக முத்தம் இட்டவன்"என்னோட குட்டி ரதி மேடம் என்ன பண்றாங்க. மம்மு சாப்டீங்களா " என்று தன் மகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினான்.

"ஹ்ம்ம் எல்லாம் கரெக்ட்டா சாப்பிட்டாச்சு. இல்லைன்னா அவங்க அப்பா சும்மா விடமாட்டறே. நீங்களே உங்க அப்பா கிட்ட சொல்லுங்க குட்டி" 

"ஹ்ம்ம் குட். நீங்க சமத்தா இப்போ தூங்குங்க செல்லம்" என்று தன் மகளிடம் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு "போதும் உங்க பொண்ணு கூட செல்லம் கொஞ்சினது. போய் வேலைய பாருங்க" 

"போடி உனக்கு பொறாமை. என் பொண்ணு கூட நான் பேசறேன்."  

"போதும் சாமி. ஆளை விடுங்க. நீங்களாச்சு உங்க பொண்ணு ஆச்சு. இப்போ முதல்ல இந்த இடத்தை காலி பண்ணுங்க".

அவளை பார்த்து சிரித்தவன் " சரிடா நான் இன்னிக்கு மதியம் வர மாட்டேன். சைட்ல கொஞ்சம் வேலை இருக்கு. ஈவ்நிங் பார்க்கலாம். கவனமா  இரு" என்று கூறி தன் காரை எடுத்து கொண்டு பண்ணை வீட்டை நோக்கி சென்றான்.    

மதன் சென்றதும் ரேவதி தன் நினைவுகளில் மூழ்கினாள்.ஒரு வருடத்திற்கு முன்பு தான் மதனுக்கும், ரேவதிக்கும் திருமணம் நடந்தது. தன் பெற்றோர்கள் தனக்கென பார்த்த மாப்பிள்ளை தான் இந்த மதன். அன்று அவன் தன்னை பெண் பார்க்க வந்த போது பேசிய பேச்சு இன்றும்  அவள் நினைவுகளில் பசுமையாக உள்ளது.

"ஹாய் நான் மதன். மதன்குமார்." என்று சிறு புன்னகையுடன் தன்னை அவளிடம் அறிமுகப்படுத்தி கொண்டான்.

அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தாலும் முயன்று தன்னை கட்டு படுத்தி கொண்டு "ஹ்ம்ம். நான் ரேவதி " என்று தன்னை பற்றி கூறினாள்.

அதன் பின் இருவருக்கும் மற்றவரை மிகவும் பிடித்ததால் திருமணத்தை விரைவில் முடித்தனர். மதனின் தந்தை அவனின் சிறு வயதிலே இறந்து விட்டார். தன் அன்னை தான் அவனை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கினர். அவனின் கல்யாணத்திற்கு பெண் பார்த்தது கூட அவனின் தாய் சாரதா தான். ரேவதி வந்ததும் தன் மீது காட்டிய அன்பை விட அவளின் மீது அதிக பாசமாக இருந்தார்.

திருமணத்தின்  போது ரிது தான் ரேவதியின் தோழியாக பக்கத்தில் இருந்து அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள். அதன் பின் ரேவதிக்கும் ரிதுவிற்க்கும் இடையே நல்ல நட்பு உருவானது. 

மதனும் சிவில் இன்ஜினியரிங் முடித்து, மேற்படிப்பையும் வெற்றிகரமாக முடித்து விட்டு வேளச்சேரியில் ஒரு கன்ஸ்ட்ரக்சன்  கம்பனியை நடத்துகின்றான்.

திருமணம் முடிந்து அவர்களின் வீட்டுக்கு வந்த நாள் முதல் இன்று வரை அவனின் ஒவ்வொரு செயலிலும் தன் காதலை காட்டினான். தங்களின் தேன்நிலவு காலங்களில், மதனின் அன்பும்,அவன் கண்களில் வழிந்த காதலும், அவனின் மென்மையான அணுகுமுறையும் அவளை மேலும் அவன் மீது காதலை  ஏற்படுத்தியது.

தன் நினைவுகளில் மூழ்கி  இருந்தவள் திடீரென்று கேட்ட குரலில் திரும்பினாள்.

"என்னம்மா ! உடம்புக்கு முடியலையா. மதன் போய் ஒரு மணி நேரம் ஆச்சு. நீ இன்னும் கீழ வரலையே. அது தான் உடம்புக்கு எதாவது சரி இல்லையோன்னு நினைச்சு நானே மேல வந்துட்டேன்"

தன் அத்தையை கண்டு புன்னகைத்தவள் "அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை. கொஞ்சம் அசதியா இருந்துச்சு. அதுதான்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.