(Reading time: 12 - 24 minutes)

01. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

வணக்கம். சில்சி இணையதளத்தின் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தளத்தில் இது எங்களின் முதல் கதை.

வாசக தோழமைகளின் ஆதரவை அறிமுக எழுத்தாளர்களாகிய எங்களுக்கும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

கதை சுருக்கம் என்று கேட்பவர்களுக்கு..இது ஒரு நல்ல தரமான குடும்ப நாவல். பாசம், காதல், அன்பு , பரிவு,  அனைத்தும் கலந்த ஒரு வித்தியாசமான கலவை.

நிச்சயம் இந்தக் கதையில் வலம் வரும் காதாபத்திரங்கள் உங்கள் மனங்களில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

வாய்ப்பளித்த சில்சி இணையதளத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

-ஸ்ரீலஷ்மி

"ல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது. கல்யாணம் கூடி வரப்போகுது! காத்திருக்கும் கன்னிப் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கப் போகுது. கை பிடிக்க மணவாளன் தேடி வரப் போறான். ராஜ யோகம் அடிக்கப் போகுது. 'ஜக்கம்மா' சொல்லறா. இந்த கோடங்கி வாக்கு பலிக்கப் போவுது!"

என்ற குடுகுடுப்பைகாரனின் குரலுக்கு நிமிர்ந்தாள் துளசி.

ஒரு வெள்ளிக்கிழமை விடியல் வேளை. இரவு முழுவதும் கதிரவனை தன் பிடியில் வைத்திருந்த ஆகாயம், மெல்ல வெளியே விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்க, வரவேற்பு கீதம் வாசிப்பது போல பெயர் தெரியா பறவைகள் 'கீச் கீச்' என்று உற்சாகமாக கூச்சலிட்டபடி சுறுசுறுப்புடன் தன் கூடுகளில் இருந்து வெளியே வந்து பறந்து கொண்டு இருந்தன.

Nizhal nijamagirathuசெங்கல்பட்டுக்கு அருகே இருந்த ஒரு அழகிய கிராமம். சின்ன சின்ன ஓட்டு வீடுகளும், பச்சை பசேல் என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகளும், ஏரியும், பெருமாள் கோவிலும் நகரத்தின் நாகரீகம் அதிகம் படாமல் உள்ள ஒரு சிறிய ஊர்.

பொழுது புலராத அந்த வேளையிலேயே எழுந்து, தலைக்கு குளித்து, வாசல் பெருக்கி, கோலம் போட ஆரம்பித்திருந்தாள் துளசி.

துளசி ... பெயருக்கேற்றார் போல பவித்திரமான ஒரு தேவதைப் பெண். அழகிய அடக்கமான தோற்றம் உடையவள். பால் நிறம் இல்லையென்றாலும் பொன் கோதுமையின் நிறம் கொண்டவள். பிறை நெற்றியும், வில் புருவமும், திராட்சை கண்களும், எள்ளுப்பூ நாசியும், பன்னீர் ரோஜா உதடுகளும், அலை அலையான கூந்தலும் பார்ப்பவர் நெஞ்சை பறிக்க வைப்பவள். இருபத்தியோரு வயதில் ஐந்தரை அடி உயரத்தில் நிற்கும் கோவில் சிலை போன்றவள்.

"என்ன தாயி, அப்படி பார்கிறே?"

கோலத்தை முடித்து விட்டு நிமிர்ந்த துளசியை கேட்டான் குடுகுடுப்பைக்காரன்.

ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்த துளசியை , "தாயீ... என் வார்த்தை பலிக்கும். நீ வேணா பாரு... கூடிய சீக்கிரம் உன்னைத் தேடி ராஜகுமாரன் வருவான். அப்ப சொல்லு இந்த ஜக்கம்மா வாக்கு பலித்ததை."

"இப்ப கொஞ்சம் சோறாக்க அரிசியும், பருப்பும் ,கொஞ்சம் காசும் கொடு தாயீ!"

"வருகிறேன்" என்று உள்ளே சென்றவள், மீண்டும் திரும்பி வந்து அரிசி, பருப்பு,மற்றும் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் கோடங்கியிடம் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல எத்தனித்த துளசியை பக்கத்து வீட்டு மாமி,

"என்னடி துளசி குடுகுடுப்பைக்காரன் காலங்கார்த்தாலேயே சொல்லிண்டு வந்துட்டானா? இன்னிக்கி நீ மாட்டினாயா? என்று கேட்டார்.

"ஒன்றுமில்லை மாமி. எனக்கு கல்யாணம் கூடி வரப் போகிறதாம்" என்று கூறி விட்டு உள்ளே சென்றாள்.

அந்த சின்ன ஓட்டு வீட்டின் உள்ளே இருந்த ஒற்றை அறையில் இருந்து இருமல் சத்தம் தொடர்ந்து கேட்டது.

"பாட்டி என்னவாயிற்று" என்று கேட்டபடியே அறையினுள் நுழைந்தாள், துளசி.

இருமியபடியே எழுந்து கொண்ட பாட்டிக்கு ஒரு எழுபது வயதிருக்கும். ஓடி ஓடி தன் ஒரே பேத்திக்காக இந்த தள்ளாத வயதிலும் உழைப்பவர் தன் வாழ்க்கையின் எல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.

"பயப்பட ஒன்றுமில்லை துளசிம்மா. இந்த குளிருக்கு சளி கட்டிக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை. நீ கவலைப்படாதே"

"அது சரி, வாசலில் என்ன சத்தம் கேட்டது"

"ஒன்றுமில்லை பாட்டி, குடுகுடுப்பைக்காரன் தான். ஏதோ உளறிவிட்டு போகிறான். நான் காப்பி போடுகிறேன். மெல்ல எழுந்து பல் துலக்கி வாருங்கள்"

சமையலறையில் நுழைந்த துளசி, புது டிகாஷனில் கலந்த காப்பியுடன் முற்றத்திற்கு வந்து கூடை நாற்காலியில் அமர்ந்திருந்த பாட்டிக்கு நீட்டி விட்டு , தானும் குடித்தாள்.

காப்பியை கையில் எடுத்துக் கொண்ட பாட்டி, " குடுகுடுப்பைக்காரன் வாக்கு பலிக்கட்டும். உன்னை ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்து அனுப்பி விட்டால் என் பாரம் குறையும். அப்புறம் நான் கண் மூடினாலும் ஒன்றுமில்லை".

அம்மா, அப்பாவை இழந்து ஆதரவற்று நிற்கும் உனக்கு எத்தனை நாட்கள்தான் நான் பக்க பலமாய் இருக்க முடியும். ஏதோ, உன் அப்பா, என் மகன் வைத்து விட்டு சென்ற இந்த ஓட்டு வீடும், குத்தகைக்கு விட்டிருக்கும் ஒர் ஏக்கர் நிலத்திலிருந்து வரும் வருமானமும் நமக்கு போதுமானதாக இருக்கிறது".

" உன் அம்மா விட்டுச் சென்றிருக்கும் பத்து பவுன் நகை இருக்கிறது. என் சேமிப்பில் உள்ள இரண்டு பவுன் நகையும் சேர்த்து உன்னை திருமணம் முடித்து அனுப்ப வேண்டும். பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லியிருக்கிறேன். தரகரிடம் சொல்லுவதாக சொல்லி இருக்கிறார்.. பார்க்கலாம்" என்று பெருமூச்சு விட்டார்.

"என்ன பாட்டி உங்கள் கஷ்டம் எனக்கு புரியாதா? இப்பொழுது என்ன என் கல்யாணத்திற்கு அவசரம். ஏற்கனவே நிலத்தின் மீது என் படிப்புக்காக கடன் வாங்கி இருக்கிறது."

"அருகில் உள்ள கவர்மெண்ட் காலேஜில் இப்பொழுதுதான் நான் பி.எஸ்.சி. கணிதம் முடித்திருக்கிறேன். பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு ஏதோ கணிதம் ட்யூஷன் சொல்லி தருகிறேன். அந்த பத்து மாணவர்கள் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அந்த நிலக் கடனை அடைக்க வேண்டும்."

"இன்று பக்கத்தில் உள்ள அரசினர் பள்ளியில் 'டெம்ப்ரரி' கணக்கு டீச்சர் வேகன்ஸி இருப்பதாக நம்ம பக்கத்து வீட்டு மாமா சொன்னார். அதைப் பற்றி கேட்க பள்ளிக் கூடம் கிளம்ப வேண்டும்."

"நான் டீச்சர் வேலையில் சேர்ந்து உங்களை நன்றாக உட்கார வைத்து பர்த்துக் கொள்ள வேண்டும் பாட்டி. நடுவில் மெதுவாக டீச்சர் ட்ரைனிங் எடுக்க வேண்டும். முடிந்தால் கொஞ்சம் கம்ப்யூட்டர் அறிவும் வளர்த்துக் கொள்ள வேண்டும்."

இதையெல்லாம் யோசிக்காமல் கல்யாணம் இப்பொழுது எனக்கு ஏதற்கு? என்ன அவசரம்?" என்று படபடத்தாள்.

"முதலில் நான் போய் காலை டிபனும், மதிய உணவும் செய்து முடித்துப் பள்ளிக் கூடம் செல்ல தயாராகிறேன். ஸ்கூலுக்கு போவதற்கு முன் பக்கத்து வீட்டு மாமியுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும்."

"போடி என் ராஜாத்தி. நீ என்ன வேண்டுமாணாலும் சொல்லு. வேளை வந்தால் எதுவும் நிற்காது. வேகமாக எல்லாம் நடக்கும். நான் போய் முதலில் குளிக்க போகிறேன்" என்றவர் பின் கட்டுக்குச் சென்றார்.

கடகடவென்று இட்டிலியும், சட்டினியையும் காலை உணவுக்கு செய்த துளசி, கீரைப் புளி குழம்பும், வெண்டைக்காய் பொரியல் செய்து விட்டு குக்கரில் சாதத்தை வைத்தாள்.

தன்னிடம் இருந்த சுடிதார்களில் சற்று பளிச்சென்று இருந்த பச்சை 'சூடியை' அணிந்தவள், "பாட்டி, நான் மாமியுடன் கோவிலுக்கு போய் விட்டு வருகிறேன்" என்று குரல் கொடுத்துவிட்டு கதவை சாற்றிக் கொண்டு சென்றாள்.

அந்த கிராமத்தின் அக்கிரஹாரத்தின் நடுவில் இருந்த 'ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள்' திருக் கோவிலை நோக்கி நடந்தனர் துளசியும், மாமியும்.

கோவிலின் உள்ளே நுழைந்தவர்கள், மூலவரான 'ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாளை சேவித்துவிட்டு உற்சவ மூர்த்திகளான 'ஸ்ரீ வேணுகோபால சுவாமி சமேத ருக்மணி, சத்யபாமா, செங்கமலத் தாயாரையும் வணங்கி விட்டு வெளியே வந்து அந்த சின்ன பிரஹாரத்தையும் வலம் வந்தார்கள்.

"மாமி, இந்த கோவில் மிகவும் பழமையானது. ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாம்" என்ற துளசியை,

"ஆமாம் டி " ஆனால் பாரு , 1983 வரை உற்சவங்களும், விழாகளும் கோவில் ஆகம விதிகளின் படி முறையே நடத்திக் கொண்டிருந்தவர்கள், பணப் பற்றாக்குறையால் மெல்ல பராமரிப்பு இன்றி கலையிழந்து நின்று விட்டது. ஏதோ இந்த ஒரு வருடமாகதான் கிராமப் பெரியவர்களும் , மற்ற சில நல்ல உள்ளங் கொண்டவர்களின் கூட்டு முயற்சியால் மீண்டும் கும்பாபிஷேகம் முறைப்படி நடை பெற்று, இப்பொழுதுதான் தினமும் நித்திய கால பூஜைகள் செய்கிறர்கள்".

"நீங்கள் சொல்லுவது சரிதான் மாமி. பாருங்கள் நாம் திரும்பிப் பார்க்கும் முன் இந்த கோவிலும், மிகவும் பிரபலமடையப் போகிறது. இப்பொழுது இந்த ஒரு வருடமாக விசேஷ தினங்களில் கூட்டம் வரத் தொடங்கி இருக்கிறது. நம் வேணு கோபால சுவாமியின் விசேஷம்தான் இது. எங்கும் இல்லாமல் சங்கு , சக்கரத்துடன் இருக்கும் வேணுகோபால சுவாமி, கேட்டதை கொடுக்கும் வரம் தருபவர். அவரின் சக்தி அறிந்த மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.