(Reading time: 9 - 18 minutes)

14. வாராயோ வெண்ணிலவே - சகி

காயத்தின் இருள் தன்னை கிழித்து ஆதி தேவர் தன் ஏழு அஸ்வங்கள் பூட்டிய தேரேறி பிரகாசமாக வந்து கொண்டிருந்தார்.அவர் உதயத்தில் தான் எத்தனை கம்பீரம்!!!

காண்போர் கண்களை தாழ்த்தும் கம்பீரம் அவர் வதனத்தில் மிளிர்கிறது என்பதில் சந்தேகமானது எழ வாய்ப்பில்லை.

காரணம் அக்னியானது பரிசுத்தத்தின் உச்சம் என்றால் அக்னி பிழம்பாகிய என்னவர் பரிசுத்தத்தின் பிதா அல்லவா!!!

Vaarayo vennilave

அன்று...

அவ்வாறான சூரிய உதயத்தை காண இயலாமல் கண்கள் தாழ்த்தினார் மகேந்திரன்!!!

"என்னங்க!"-மனம் கனத்த வேளையில் மனைவியின் துணை திருமணத்திற்கு பின் ஒரு ஆணுக்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது.

"உங்களுக்கு என்ன ஆச்சு?கொஞ்ச நாளா நீங்க சரியில்லை!ஏதோ பிரச்சனையா?"

"மீனா...அங்கே இருக்கிற சூரியனை பார்!எவ்வளவு பிரகாசம்!ஆனா,அந்த சூரியனை கருமேகம் சூழ்ந்தா அந்த நிலையை கற்பனை பண்ணி பார்!"

"என்னாச்சுங்க?"

"இன்னிக்கு முடிவெடுக்க முடியாத நிலைமையில இருக்கேன்.என் நம்பிக்கை என்னை முட்டாளாக்கிடுச்சு!"

"நிலா எதாவது தப்பு பண்ணாளா?"

"அவளை வளர்த்த விதம் தவறாகிவிட்டதான்னு இருக்கு!"

"என்னங்க சொல்றீங்க?என்னாச்சு உங்களுக்கு?"

"நான் அவளுக்கு எப்போதாவது எந்த குறையாவது வைத்திருக்கேனா?என் மொத்த வாழ்க்கையோட வரமா அவளை நினைத்தேன் மீனா!"

"நிலா என்ன பண்ணா?"

"அதை வெளியே சொல்ல முடியாத நிலையில இருக்கேன்!"

"நிலா!"-மீனாட்சி நிலாவை அழைத்தார்.தாயின் சற்றே கோபமான குரலை கேட்டதும் பதறியபடி வந்தாள் வெண்ணிலா.

"மா!"

"என்ன தப்பு பண்ண?"-திகைப்புற்றாள் வெண்ணிலா.

"உனக்கும்,அவருக்கும் என்ன பிரச்சனையோ!எனக்கு அது தேவையில்லாத விஷயம்!ஒண்ணை ஞாபகம் வச்சிக்கோ!நீ எங்களோட பொண்ணு!எங்க வளர்ப்பு!எனக்கு நீயும்,அவரும் இரண்டு கண் மாதிரி!இதுல எது கலங்குனாலும் அதனால,வருத்தப்பட போவது நான் தான்!எந்த தப்பு பண்ணி இருந்தாலும் துணிந்து அதுக்கான தண்டனையை ஏத்துக்கோ!எனக்கு என் குடும்பம் சிதைய கூடாது அது முக்கியம்!"-கற்சிலையாய் நின்றிருந்தாள் வெண்ணிலா.

"புரியுதா?"

"ம்"-மீனாட்சி பார்வையை தாழ்த்திக் கொண்டு நடந்தார்.

எதிரில் தந்தையானவர் ஒடுங்கியிருக்க,கண்கள் கனத்த கண்ணீரில் ஓடிவந்து அவர் சரணங்களை ஸ்பரிசித்தாள் வெண்ணிலா.

"அப்பா!என்னை மன்னிச்சிடுங்கப்பா!நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு!நான் உங்களுக்கு கெட்ட பெயர் வர செய்துட்டேன்.அதுக்காக என்ன தண்டனை வேணும்னாலும் எனக்கு கொடுங்க!ஆனா,என் கூட பேசுங்கப்பா!"அழுது புலம்பினாள் வெண்ணிலா.

மகேந்திரன் மனம் கல்லாய் போக நின்றிருந்தார்.

"இந்த மாதிரி மௌனமா இருக்காதீங்க!இதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்கப்பா!"

"தவறிழைத்தது மனிதன்னா தண்டனை கொடுக்கறது இறைவனோட கடமை!என்னோட வேலை இல்லை!நான் நாளைக்கே சென்னை போறேன்.வாழ்க்கையில ஒவ்வொரு மனுஷனுக்கு முடிவெடுக்கும் உரிமையை கடவுள் கொடுத்திருக்கான்.அதை நான் பறிக்க முடியாது!உன் வாழ்க்கையில இனி நான் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் நிச்சயம் வராதுன்னு நினைக்கிறேன்!உன் வாழ்க்கையை நீயே தீர்மானம் பண்ணிக்கோ!"-மகேந்திரன் திரும்பி பார்க்காமல் நடந்தார்.

மனதளவில் அங்கே ஒரு கன்னிகை மரணித்துவிட்டாள்.அதில்,சந்தேகமில்லை.

இந்த சமூகம் அடுத்தவர் மனநிலை குறித்து சிந்திக்கும் தவறை என்றுமே செய்யாது போலும்!!!ஆத்மாவையே மரணிக்க வைக்கும் வித்யை தன்னை அது நன்றாக அறிந்து வைத்துள்ளது.எதற்கு இப்படியொரு சமூகத்தை நாம் உருவாக்கினோம்!அடுத்தவர் மன காயத்தை பார்க்காமல் நகரும் சமூகம் எதனால் உருவாக்கப்பட்டது???

தவறிழைத்தது நாம் என்றால் தண்டனை அனுபவவிப்பதில் தவறில்லை.ஆனால்,பாவத்தை சுமக்க வேண்டிய அவசியமும் நமக்கில்லை.அறியாமல் செய்த தவறு எப்பேர்ப்பட்ட பாவத்தை அளித்துள்ளது பாருங்கள்...

மரண வேதனையைவிட இது கொடியது.

நான் செய்தது அனைத்தும் தவறு!!!எந்நிலையை நான் மீறி இருக்க கூடாது!என் கடமையை நான் மறந்தேன்!உயிர் வாழ்ந்து என்ன தான் பயன்??அடுத்தவர் மனதை காயப்படுத்துவதை தவிர எந்த காரியத்தையும் நான் நிறைவாக செய்யவில்லை.

என் வாழ்க்கை முறையற்றதாகி போனது.

"நிலா!சாப்பிட வா!"-என்று மீனாட்சி அழைக்க,

"நான் அமெரிக்கா போறேன்மா!"என்று பதிலுரைத்தாள் வெண்ணிலா.

"ஏன் இங்கே சாப்பிட்டா வேணாமா?"அவர் நகைத்தப்படி கேட்டார்,

நிலா முகம் எந்த பிரபலிப்பையும் ஏற்படுத்தவில்லை.

"நிலா!என்னம்மா ஆச்சு?"

"நான் ரொம்ப பெரிய பாவம் பண்ணேன்!அது போக ரொம்ப தூரம் போக போறேன்!"

"ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணுறது பாவம்னா!மாதா பார்வதி தேவியே பாவி தான்!"-நிலா கேள்வியாய் பார்த்தாள்.

"ரஞ்சித்!அன்னிக்கு கோவில்லையே உங்க உறவை பற்றி சொல்லிட்டான்."

"எனக்கும் உங்க மேல கோபம் தான்!ஆனா,காலத்தோட கட்டாயத்தை மீற மனுஷங்ளால் முடியாது!"

"இப்போ நீ தூரமா போனா,பிரச்சனை தீராது!எல்லாதுக்கு முடிவு இருக்கு!என்னால அவர் பேச்சை மீற முடியாது!அதனால என்னால எந்த உதவியும் உனக்கு பண்ண முடியாது!ஆனா,வாழ்க்கை தடம் மாறுவதற்குள் உன் பாதையை முடிவு செய்!"

"என்னால அப்பா வழிக்காட்டுதல் இல்லாம எதையும் பண்ண முடியாதும்மா!"

"சூரிய பகவான் இருக்கார்ல?சில சமயத்துல மனிதர்களால உதவ முடியாத சூழ்நிலை வரும்!அப்போ,கடவுள் தான் மனிதனுக்கு சிறந்த வழிக்காட்டியா இருப்பார் செல்லம்!"

"என் பொண்ணு மறந்து கூட தவறி போக மாட்டா!சொல்லி இருக்கேன்ல...தைரியம் எப்போ கலங்குதோ!அப்போ,தவறு நடக்க வாய்ப்பு அதிகம்.தைரியத்தை கை விடாதே!என் ஆசீர்வாதம் உன் கூடவே இருக்கும்!"கண்கள் கலங்கி நின்றாள்.இதயமல்ல!!!

அடிக்கடி கூறுவது ஒன்றே!!!

இறைவன் வேடிக்கை பார்ப்பான்.எப்போதும் பார்த்தப்படி மட்டும் இருக்க மாட்டான்!!

துன்பத்தை அளித்து இன்பத்தை நம் மூலமாகவே உருவாக்க வைக்கிறான்!!

கண்கள் மூடிய நிலையிலும் யோக அக்னியாகி மிளிர்கிறான்.திக்கற்ற காட்டிலும் சூரிய ஒளி ஆகிறான்.திசை அற்ற கடலிலும் துருவ நட்சத்திரமாய் பிறக்கிறான்.துணை இல்லா நேரத்திலும் இணையாய் உறவாடுகிறான்.இறைவன் நிச்சயம் இருக்கிறான் எனது நிஜத்தின் நிழலாக!!!

மனம் தோய்வுற்று இறுதியில் இறைவன் சரணங்களை ஸ்பரிசித்தது மகேந்திரனுக்கு!!!

கோவிலுக்கு வந்தவர் அமைதியாக அமர்ந்திருந்தார்!!!

அவர் சதமாய் கூறிட்டது தன் மகளின் மனதை அல்ல!தன் உயிரை!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.