(Reading time: 12 - 24 minutes)

'ன்ன ஆர்.கே மறுபடியும் இவ்வளவு தூரம்?' கண்களில் கோபம் மின்ன தனது இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ரிஷியை ஏற இறங்க பார்த்தபடியே கேட்டான் சஞ்ஜீவ்.

பதில் சொல்லவில்லை ரிஷி. மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு, முகத்தில் எந்த பாவமும் இல்லாமல்  சஞ்ஜீவையே  பார்த்தபடி  நின்றிருந்தான் அவன்,

'என்னடா?' சஞ்ஜீவின் குரல் ஒருமைக்கு மாறியது. 'என் முன்னாலே வந்து நிக்குற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா உனக்கு.?'

இப்போதும் பதிலில்லை ரிஷியிடமிருந்து. வேறு யார் பார்வையாவது தங்களை உரசுகிறதா என்று தெரிந்துக்கொள்ள ஒரு முறை சுற்றி திரும்பியது ரிஷியின் பார்வை,

எதை பற்றியும் கவலைப்படாதவனாக பேசிக்கொண்டிருந்தான் எஸ்.கே. 'எதுக்குடா வந்தே இப்போ.? பதில் பேசுடா. எங்களுக்கெல்லாம் பயந்து தானே நாட்டை விட்டு ஓடிப்போனே. இப்போ எதுக்குடா திரும்ப வந்தே?

ரிஷியின் கண்கள் கோபத்துடன் விரிந்தன.

'பதில் சொல்லுடா வெங்காயம்' என்றான் சஞ்ஜீவ்.

சட்டென சஞ்ஜீவின் சட்டையை கொத்தாக பிடிக்கத்தான் முயன்றான் ரிஷி. ஆனாலும் இயலவில்லை அவனால். தன்னையும் மீறி மலர்ந்து சிரித்தே விட்டிருந்தான் அவன்.

'டேய்! வெங்காயம்.!!! பெரிய ஆக்டர்ன்னு பேரு என் முன்னாலே ரெண்டு நிமிஷம் நடிக்க முடியலை உன்னாலே' என்று அவன் சிரிப்பில் இணைந்துக்கொண்டபடியே தனது உயிர் நண்பனை தன்னோடு சேர்த்து அணைதுக்கொண்டான் சஞ்ஜீவ். 'எப்படி டா இருக்கே?'

'நல்லா இருக்கேன்டா' என்றான்  ரிஷி.

அவனை விட்டு விலகி நிமிர்ந்த சஞ்ஜீவ், தனது நண்பனை கண்களால் அளக்க துவங்கினான். இன்னும் பத்து நாட்களில் சஞ்ஜீவின் தங்கைக்கு திருமணம். சென்ற மாதத்திலிருந்தே ரிஷியை இந்தியா வரும்படி அழைத்துக்கொண்டுதான் இருக்கிறான் சஞ்ஜீவ்.

அவன் வருவதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. 'கல்யாணதுக்கு காலையிலே வந்திட்டு நைட் கிளம்பிடுறேன்  சஞ்ஜா.' சொல்லிக்கொண்டுதான் இருந்தான் ரிஷி. ஆனால் இன்று???

அவனை எது இங்கே கொண்டு வந்து இறக்கி இருக்கிறது என்பதை சட்டென ஊகித்து  விட்டிருந்தான் சஞ்ஜீவ். அந்த பதிவை அவனும் பார்க்க தானே செய்தான்.!!!! கொஞ்சம் வியப்பாககூட இருந்தது அவனுக்கு. தான் செய்ய முயன்று தோற்றதை அந்த ஒற்றை பதிவு செய்து விட்டதே!!!!

'ஆமாம். நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லலியே? என்னடா இவ்வளவு தூரம்? என்ன விஷேஷம்?' சின்ன புன்னகை இதழ்களில் ஓட ஊடுருவும் பார்வையுடன் கேட்டான் எஸ்.கே

அ... அது... நீ.. நீ... தான் உங்க அக்காவுக்கு கல்யாணம் அப்படின்னு சொன்னியே. அதுக்குதான் வந்தேன்.

'அடப்பாவி.....' சிரித்தான் சஞ்ஜீவ். கல்யாணம் என் தங்கைக்குடா. அக்காவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு இருக்கா. என்றவன் 'பொய் சொல்லாதேடா. எல்லாம் அந்த ட்வீட் பண்ற வேலை'. சொல்லிவிட்டிருந்தான்  சட்டென.

ட்வீட்டா...? எந்த ட்வீட்? கொஞ்சம்  திடுக்கிட்டுப்போய் அவசரமாக கேட்டான் ரிஷி.

ம்? என்று நிமிர்ந்தான் சஞ்ஜீவ். அவன் முகத்தை படித்தப்படியே 'அதுவா? நான் வெங்காய வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வாரம் ட்வீட் பண்ணி இருந்தேனே நீ பார்க்கலை? என்றான் நக்கலாக...

சஞ்ஜீவின்  பார்வை ஊடுருவலை தவிற்பதற்காகவே பேச்சை மாற்றி 'என்னை பார்க்க தான் வந்தியா சஞ்ஜா? கேட்டான் ரிஷி.

பின்னே எனக்கு இங்கே வேற என்ன வேலை?

நான் வர்றேன்னு உனக்கு எப்படி டா தெரியும்?

'மகனே! நீ டிக்கெட் புக் பண்ணவுடனேயே எனக்கு தெரியும்டா. எப்படின்னு கேட்காதே அதெல்லாம் தொழில் ரகசியம்....வா போகலாம்' சிரித்தபடியே ரிஷியின் பெட்டியை இழுத்துக்கொண்டு நடக்க துவங்கினான் சஞ்ஜீவ்.

'டேய்! எங்கேடா போறே? எனக்கு அஞ்சு மணிக்கு சென்னைக்கு ஃப்ளைட்.'

'வா வா நானும் அதே சென்னைக்குதான் போறேன். நீ மறுபடியும் ஊருக்கு போற வரைக்கும் என் கூடதான் இருக்கப்போறே ' நடந்தான் சஞ்சீவ்.

சஞ்சா ...... வேண்டாம்டா.! என்னாலே தேவை இல்லாம உனக்கு பிரச்சனை வரலாம்.

நின்று திரும்பி விழி நிமிர்த்தினான் எஸ்.கே. மனம் முழுவதும் ரிஷியின் மீது நிரம்பிக்கிடந்த பாசத்தின் பிரதிபலிப்பாய் அவன் கண்களில் கோபக்கோடுகள்

எத்தனை நாளாடா இந்த பழக்கம்.? நீ, நான்னு பிரிச்சு பாக்குற பழக்கம்?  '

அப்படியெல்லாம் இல்லைடா.....  சின்ன தயக்கதுடன் ரிஷி ஏதோ சொல்ல துவங்க..

'நீ பேசுறதை எதையும் நான் கேக்குறதா இல்லை' இடைமறித்தான் சஞ்ஜீவ் 'உனக்கு ஒரு பிரச்சனைன்னா அது எனக்கும்தான். நட.'

அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேச முடியும் என்று தோன்றவில்லை ரிஷிக்கு. நண்பனுடன் நடந்தான் அவன்.

மிக அழகான நட்பு இவர்களுடயது. திரை உலகில் ஒருவருக்கு ஒருவர்  போட்டியாக இருக்கும் போது, இப்படி ஒரு நட்பு எப்படி சாத்தியமாகிறது என்று வியந்து போவார்கள்  பலர்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர் இருவரும். அங்கே அவர்களுக்காக காத்திருந்தது சஞ்சீவின் கார்.

அதன் அருகில் நின்றிருந்தார் அவர். பரந்தாமன். அவர் முன்பு ரிஷியின் மானேஜராக இருந்தவர். அவரை பார்த்தவுடன் ரிஷியின் முகத்தில் பலவித மாற்றங்கள். மெல்ல விழி நிமிர்த்தி அவரை எறிட்டான் ரிஷி. அவர் மனதில் இருந்த அந்த சிறு உறுத்தலை முகம் தெளிவாக பிரதிபலித்தது.

நல்ல இருக்கீங்களா ஸார்? மெல்லக்கேட்டார் அவர்.

சின்ன புன்னைகையுடனான தலையசைப்புடன் அவன் காரில் ஏற எத்தனிக்க, 'அப்பா எப்படி ஸார் இருக்கார்? அம்மா? தழைந்த குரலில் வெளிவந்தது கேள்வி.

மெல்ல திரும்பிய ரிஷியின் இதழ்களில் புன்னகை ஒட்டம். ஒரு பெருமூச்சுடன் புன்னகை மாறாமல் தலை அசைத்தான். அவர் மனதில் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தை அவர் முகம் உணர்த்தியது. அருகில் நின்றிருந்த சஞ்சீவின் கண்களும் அதையே ஆமோதித்தன. ரிஷியின் உள்ளத்தில் கொஞ்சமாய் நிறைவு.

அந்த ஆடியின் பின் சீட்டில் அமர்ந்தான் ரிஷி. சஞ்ஜீவ் முன்னால் ஏறிக்கொள்ள, டிரைவர் சீட்டில் அமர்ந்தார் பரந்தாமன். இன்னமும் அவர் மனம் ஆறவில்லை போலும்.

மெல்ல திரும்பியவர் சட்டென சொல்லிவிட்டிருந்தார் 'என்னை மன்னிச்சிடுங்க ஆர்.கே ஸார்'

'அய்யோ! என்ன ஸார் நீங்க? என்றான் ரிஷி. என்ன இருந்தாலும் நீங்க என்னோட வயசிலே பெரியவங்க. நீங்க போய் என்கிட்டே.... சொல்லப்போனா நான் கூட அன்னைக்கு உங்ககிட்டே கோபமா நடந்துக்கிட்டேன்.....'

'அப்படி இல்லை ஸார். நான் செஞ்சது தப்பு. அதை நீங்க சுட்டி காட்டினீங்க. அப்போ அதை என்னாலே ஏத்துக்க முடியலை. உங்க மேலே அப்படி ஒரு கோபம். ஆனால் அந்த  டிசம்பர் 31 என்னை மொத்தமா மாத்திருச்சு ஸார்.'

'இப்போ எஸ். கே சார்கிட்டே வந்திட்டேன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸார்.

வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்காங்களா ?கேட்டான் ரிஷி

எல்லாரும் ரொம்ப நல்லா இருக்காங்க ஸார்.எனக்கு ஒரு பொண்ணு பிறந்திருக்கா' என்றார் நிறைவான குரலில்.

பொண்ணா?.... ரிஷியின் குரல் சந்தோஷத்துடன் ஒலித்தது. 'ரொம்ப சந்தோஷம். நல்லா படிக்க வைங்க' என்றான் புன்னகையுடன்.

கார் நகர துவங்க, மெல்ல திரும்பி ரிஷியின் முகத்தை புன்னகையுடன் அளந்தான் சஞ்சீவ். பின்னர் வாஞ்சையுடன் சொன்னான் 'ரொம்ப டயர்டா இருக்கேடா நீ. கொஞ்ச நேரம் அப்படியே தூங்கு. சென்னைக்கு போனதும் எழுப்பறேன்'

'ஆமாம் கண்டிப்பா தூங்கணும்' என்றபடி சீட்டில் சாய்ந்தவனின் கண்கள் சாலையில் பதிந்தன. அவனது நினைவுகளும் அவனுடனே பயணித்துக்கொண்டிருந்தன.

கார் முழுவதும் பரவிக்கிடந்த ஏ.ஸி காற்றின் தாலாட்டில், நினைவுகளில் நீந்தியபடியே, அவனையும் அறியாமல் சீட்டில் புதைந்து அப்படியே உறங்கிப்போனான் ரிஷி.

எத்தனை மணி நேரங்கள் கடந்திருக்கும் என்று தெரியவில்லை. மூடிக்கிடந்த அவனது இமைகளுக்குள் திடீரென விரிந்தது அந்த காட்சி.

அது ஒரு மலைப்பிரதேசம். புகைக்காற்றாக பனி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. உள்ளம் வருடிசெல்லும் மெலிதான மழைச்சாரல். அங்கே சட்டென விரிகிறது ஒரு அழகான குடை. குடை விரிந்து எழ, அதே நேரத்தில் அழகாய் விரிந்து எழுகின்றன அவள் இமை குடைகள். அவனுக்கும் சேர்த்து அவள் குடை பிடிக்க அந்த குடைக்குள் வருகிறான் ரிஷி. அவள் கண்களை சந்திக்காமல் இருக்க முயன்று தோற்று அவள் கண்களையே மறுபடியும் சரணடைகின்றன அவனது கண்கள். இமைக்க மறந்து நிற்கிறாள் அவள்.

ஸ்டார்ட் கேமிரா.... ஆக்ஷன்.....

Episode # 02

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.