(Reading time: 10 - 19 minutes)

08. காதல் உறவே - தேவி

திடுக்கிட்ட ராம் முதலில் சாதாரணமாக “அதைப் பற்றி கேட்க இதுவா நேரம்? போய்த் தூங்கு” என்றான்.

“நீங்கள் ஏன் , எதை என்னிடம் இருந்து மறைக்கிறீர்கள்”

“மறைக்கிறேனா? அப்படியென்றால் நான் தப்பு செய்கிறேன் என்கிறாயா?”

Kathal urave

“இல்லாவிட்டால் கேட்டதற்கு பதில் சொல்வதற்கென்ன?”

“பதில் சொல்லவில்லையென்றால் , உனக்கு அது தேவையில்லை என்று அர்த்தம்.

“அது எப்படி? எனக்குத் தெரியாத ரகசியம் உங்களிடம் அவசியம் என்ன?”

“எல்லோரும் தனி மனிதர்கள்தான். அவரவரவர்களுக்கென்று ஒரு ஸ்பேஸ் உண்டு புரிந்து கொள்

 “உண்மைதான். ஆனால் அது என்னைப் பாதிக்கும் விஷயமென்றால் அந்த ஸ்பேஸிற்குள் நுழைய எனக்கு உரிமையுண்டு”

“இப்போது என்ன தெரிய வேண்டும் என்கிறாய். ஸ்ருதியைப் பற்றி உனக்குச் சொல்ல முடியாது”.

நான் உங்கள் மனைவி ராம். நீங்கள் என்னைக் காதலித்து மணந்து கொண்டீர்கள். எனக்கு உறுத்தல் ஏற்படும் விஷயத்தைப் பற்றி உங்களிடம் விசாரிப்பது எப்படி தவறாகும்.? அப்படியானால் நீங்கள் எனக்குத் துரோகம் செய்கிறீர்களா” என்று முடிக்குமுன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ராம்.

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னாய்? நான் ராம.; தெரியாமல் கூட யாருக்கும் தவறு செய்ய மாட்டேன். எல்லோரும் சொன்னது போல் உறவுகளின் அருமையே தெரியாத உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன் பார். என்னைச் சொல்ல லேண்டும். வேறு என்ன காதலா? எனக்குக் காதலில் நம்பிக்கையில்லை. எனக்கு உன் அழகு பிடித்திருந்தது. அக்கறை பிடித்திருந்தது. யாருமில்லாதவளான நீ என் குடும்பத்தைப் பிரிக்க மாட்டாய் என்றுதான் உன்னை மணந்து கொண்டேன். ஆனால் என்னைச் சந்தேகப்பட்ட உன்னோடு என்னால் வாழ முடியாது. இனி உனக்கும் எனக்கும் இடையில் ஒன்றும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இந்த வீட்டில் இருக்கும் அசையாப் பொருள்களில் நீயும் ஒன்று. வெளியே போ. என் கண் முன்னாடி நிற்காதே.” என்று கர்ஜித்தான்.

மைதிலி திகைத்து நின்றாள். ஒரு சின்ன விஷயத்திற்கு அவனுக்கு இவ்வளவு கோபமா என்று எண்ணியவள் மெதுவாக வெளியே வந்தாள். அன்று இரவு முழுவதும் கண்ணீர் வடித்தபடி படுத்திருந்தவள், மறுநாள் காலை கீழே வரும் போது அவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது.

“அம்மா, அவளைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நானே ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று நொந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு” என்று எரிச்சல் பட்டபடி வெளியே சென்று விட்டான். மைதிலியைப் பார்த்த கௌசல்யாவின் பார்வையில் ஒருவித விலகல் தெரிந்தது.

ரு வாரம் வரை அவனுடைய கோபம் அடங்கட்டும் என்று பொறுமையாக இருந்தாள். ஒருவாரம் கழித்து அவனிடம் பேசச் சென்றாள். அவள் கூப்பிட்டும் காதில் விழாத மாதிரியே இருந்தான். அவள் கெஞ்சியும் அவன் இரங்கவில்லை.

மனம் கனக்க வெளியே வந்தவள், அன்று மாலை டாக்டரிடம் போக வேண்டுமே என்று எண்ணியவள் அவள் அத்தையிடம் கூட வருமாறு கேட்க, அவரோ “ஏன் நீயே போக முடியாதா? ஓவ்வொரு முறையும் யாராவது வர முடியுமா? அம்மா, அப்பா இல்லாதவளை திருமணம் செய்தால் எல்லாம் மாமியார் வீட்டில்தான் செய்ய வேண்டும். ஹாஸ்பிடல் செக்கப்பில் இருந்து வளைகாப்பு, பேறு காலம் எல்லாம் பார்க்க வேண்டும். எல்லாம் என் தலையெழுத்து.” என்று பொரிந்து கொட்டவும் அதிர்ந்து நின்றாள். சுற்றி வர வேலையாட்கள் நிற்க அவளால் தலை நிமிர முடியாமல், கண்ணீரை உள்ளிளத்தபடி மேலே சென்றாள்.

அன்று மதியம் சாப்பிட வரவில்லை. மாலையில் அவளே ஒரு கால்டாக்ஸி வரச் சொல்லி டாக்டரிடம் சென்றாள். ஒரு மாதம் சென்றது. கௌசல்யாவைத் தவிர மற்ற யாருக்கும் ராம் மைதிலி பிரச்சினை தெரியாது. அந்த சம்பவத்திற்குப் பின் அவள் செக்கப்பிற்கு யாரையும் அழைத்துச் செல்வதில்லை. மேலும் அனாவசியமாக யாரிடமும் பேசுவதுமில்லை. ராம் தினமும் இரவில் லேட்டாக வருவதால் அவளிடம் பேசுவதுமில்லை. அவளை எதற்கும் தேடுவதுமில்லை.

ந்நிலையில் சபரியை முரளி வீட்டினர் பெண் பார்த்துச் சென்றனர். அவர்கள் சபரியைப் பிடித்திருப்பதாகக் கூற, ராம் வீட்டிலும் எல்லோருக்கும் முரளி வீட்டினரைப் பிடித்திருந்தது.  இதைப் பற்றி அன்று இரவு பேசும் போது கௌசல்யா “அவர்கள் சற்று பெரிய குடும்பம் போல். சபரி சமாளிப்பாளா ? என்க

ராம் “அம்மா அவள் என்ன மைதிலியா? நம் எல்லோரோடும் வளர்ந்தவள். அவளால் சமாளிக்க முடியும்” இந்த பேச்சு வார்த்தை அப்போது அங்கே தண்ணீர் குடிக்க வந்தவள் கேட்டாள். சத்தமில்லாமல் தன் அறைக்குச் சென்று கண்ணீர் விட்டாள்.

சபரியின் திருமணம் ஒரு மாதத்தில் என முடிவு செய்யப்பட்டது. அதனால் எல்லோரும் ஏற்பாடுகளில் பிசியாகி விட மைதிலியின் உடல்நிலை கருதி அவளை யாரும் தொந்தரவு செய்ய வில்லை. கௌசல்யாவிற்கு மனம் சற்று சஞ்சலப்பட்டாலும், வேலையாள்களிடம் அவளை கவனிக்குமாறு கூறிவிட்டு திருமண ஏற்பாடுகளில் கலந்து கொண்டார். மொத்தத்தில் மைதிலி தான் பழையபடி தனியாக உணர ஆரம்பித்தாள். சந்தோஷிற்கு மட்டும் ஏதோ பிரச்சினை என்று தோன்றியது. அவன் ராமிடமும், மைதிலியிடமும் தனித்தனியாக விசாரித்த போதும் இருவரும் ஒன்றுமில்லை என்று மறுக்கவே அவன் விட்டுவிட்டான்.

சபரியின் திருமணமும் வந்தது. முதல் நாள் நிச்சயதார்த்தம், ரிசெப்ஷன் மறுநாள் திருமணம் நலுங்கு அதையொட்டிய சடங்குகள் என எந்த ஒரு சம்பிரதாயமும் விடாமல் நடந்தது. மைதிலி எட்டு மாத கர்ப்பிணி என்பதால் அவள் அதிகம் கலந்து கொள்ளாததை யாரும் கவனிக்கவில்லை.

அப்போதும் ஒரு உறவுக்காரர் ராமிடம் “இதே மாதிரி உன் திருமணமும் நடந்திருக்க வேண்டியது. நீதான் அவசரப்பட்டுவிட்டாய்” என ராமும் “ ஆமாம் நான் அவசரப்பட்டு விட்டேன்” என்றது அவள் காதுகளில் விழுந்தது.

முதலில் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வர வேண்டிய சாமான்களோடு அவளும் வந்துவிட்டாள். சபரியை புகுந்த வீட்டிற்கு கொண்டு விட அவளைத் தவிர எல்லோரும் சென்றனர். யாரும் அவளிடம் கேட்கவும் இல்லை. சொல்லவும் இல்லை. அதையும் குறைப்படாமல் வீட்டில் உள்ள மற்ற உறவினரை கவனித்து விட்டு உறங்கச் சென்றாள். ஆனால் அவள் மனதில் வெறுமை சூழ ஆரம்பித்தது. இப்படியே ஒரு வாரம் மறுவீடு விருந்து என்று செல்ல, ராம் மைதிலியிடம் எதுவும் பேசுவதில்லை. திருமணத்திற்கு வந்திருந்த தாத்தா பாட்டியும் ஊருக்குச் சென்றனர்.

ரண்டு நாள் யோசித்தவள், அவனிடம் கடைசி முறையாகச் சென்று பேசிப் பார்க்க முடிவு செய்தாள். ஆனால் இம்முறையும் அவன் அவள் கூற வந்ததை கேட்காமல் விடவே, தன்னுடைய முடிவை செயல் படுத்த நினைத்தாள். அதன்படி மறுநாள் காலை யாரிடமும் எதுவும் சொல்லாமல் ராமிற்கு கடிதம் எழுதி விட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாள்.

வீட்டை விட்டு வெளியேறிய மைதிலி, அவளை அறியாத ஊரான மதுரைக்குச் சென்றவள், ஒரு வாரம் நடுத்தர ஹோட்டலில் தங்கி அடுத்துச் செய்ய வேண்டியதை திட்டமிட்டாள். தன்னுடைய ஸிம் கார்டை தூக்கிப் போட்டாள். அவளுடைய சேமிப்பை போஸ்ட் ஆபீஸ் பத்திரமாக மாற்றியிருந்ததால், அங்கே டெபாசிட் உடைத்து ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்தாள். முதலில் ஒரு வருடம் அருகில் உள்ள ஒரு ப்ரைமரி ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.