(Reading time: 10 - 19 minutes)

பிரசவத்தின் முதல் நாள் வரை வேலைக்குச் சென்றவள் பிறகு மூன்று மாதம் விடுமுறை எடுத்தாள். அந்த கல்வியாண்டு வரை அங்கே வேலை பார்த்தாள். பிறகு அவளது படிப்புக்கேற்ற வேலையாக தற்போது வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் தேடிக் கொண்டாள். அவளுடைய திருமண வாழக்கை வெறும் எட்டு மாதங்களே. கடந்த 4 வருடங்களாக அவளுக்கு ஷ்யாம்தான் உலகம். வேறு எதைப் பற்றியும் நினைப்பதில்லை.

இவற்றையெல்லாம் எண்ணிக் கொண்டு  ராம், மைதிலி இருவரும் வெகு நேரம் உறங்காமலிருந்து பிறகு கண்ணயர்ந்தனர். அதிகாலை மூன்றரை மணிக்கு அலாரம் அடித்ததில் விழித்த ராம். முதலில் எழுந்து பிரெஷ் செய்துவிட்டு வர, அவன் வருவதற்குள் விழித்திருந்த மைதிலியும் ரெடியாகி வந்தாள். அறையைக் காலி செய்து விட்டு ராம் வர,  உறங்கும் குழந்தையை எழுப்பாது காருக்குச் சென்றனர்.

நான்கு மணி அளவில் கிளம்பியவர்கள் சென்னையில் வீட்டை அடையும் போது மணி 10. ராம் இரவுதான் வருவதாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் கார் வந்து நிற்கவும் யார் என்று பார்க்க வந்தவர்கள், ராம் மைதிலியுடனும் குழந்தையுடனும் இறங்கவே திகைத்து நின்றார்கள்.

அன்று காலையில்தான் ராமின் தாத்தா, பாட்டி வந்திருந்தனர். அதனால் அவர்களைப் பார்க்க ராமின் அத்தை வீட்டில் மற்றும் சபரி அவள் கணவன் குழந்தையோடு எல்லோரும் வந்திருந்தார்கள். முதலில் சுதாரித்த தாத்தா பாட்டியிடம் கண்ணைக் காண்பிக்க, போய் ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்து கௌசல்யாவிடம் கொடுத்தார். கௌசல்யாவும் ஆரத்தி கரைத்து அழைக்க,  அந்த வீட்டின் முதல் கொள்ளுப்பேரனான ஷ்யாமை கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து பார்த்தனர்.

எல்லோரையும் நேராகப் பார்த்த ராம் “நான் நேற்றே இந்தியா வந்து விட்டேன்.  மைதிலி எங்கு இருக்கிறாள் என்று கடந்த இரண்டு மாதமாக எனக்குத் தெரியும். இந்த வீட்டில் என் மனைவிக்கும், மகனுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்க வைக்க வேண்டியது  என்னுடைய கடமை. என்னுடைய தப்பைத் திருத்தத்தான் அவளைக் கையோடு அழைத்து வந்து விட்டேன். அப்பாவுடைய சஷ்டியப்த பூர்த்தியில் நான் கலந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் இவர்களும் கலந்து கொண்டால்தான் நம் எல்லோருக்கும் பெருமை. இந்த வீட்டு மருமகளுக்குண்டான உரிமை, கடமை இரண்டுமே அவளுக்குண்டு. அதை அவளும் புரிந்து நடந்து கொள்வாள். நீங்களும் நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.” என்று முடித்தான்.

தாத்தாவே முதலில் தன் கொள்ளுப்பேரனை அணைத்து “உன் பெயரென்ன கண்ணா?” என்றார். குழந்தை அழகாக “ஷ்யாம் நாராயணன்” என்றது. எல்லோரும் ஆச்சரியமடைந்தனர்.

பிறகு அவர்களை குளித்து, ரெடியாகி வரச் சொல்ல மைதிலி ராமின் முகத்தைப் பார்த்தள். அவன் பெட்டி எல்லாம் நம்முடைய அறைக்குப் போய்விட்டது என்றான். ஒரு நிமிடம் யோசித்தவள் பிறகு தங்கள் அறைக்குச் சென்றாள். அங்கே ஹாலில் வைத்திருந்த பெட்டிகளை எடுத்தக் கொண்டு தன்னுடைய தனி அறைக்குச் சென்றாள்.

முதலில் குழந்தைக்கு குளித்து விட்டு, உடை மாற்றி ஹாலில் உட்கார வைத்து விளையாட்டுச் சாமானைக் கொடுத்தாள். பிறகு தானும் குளித்து உடை மாற்றி வெளியே வந்தவள், குழந்தையைத் தூக்கிக் கொண்டு கதவை திறக்கும் போது வந்த ராம்,

“மைதிலி, என் பெற்றோர், மற்றவர்கள் உன்னிடம் பேசத் தயங்கலாம். நீ அதை பெரிது படுத்தாமல் விட்டு விடு. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும். அடுத்த வாரத்தில் சஷ்டியப்தபூர்த்தி இருக்கிறது. நீயும் உன்னுடைய கோப தாபங்களை விட்டு விட்டு ஒத்துழைப்புக் கொடு” என்றான்.

“எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. என்னால் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

பெருமூச்சோடு கீழே வந்த ராம், தன் அப்பா, அம்மாவைத் தேடிப் போனான். தாத்தாவின் அறையில் எல்லோரும் இருந்தனர். எல்லோரையும் பார்த்துவிட்டு “எங்கள் இருவரின் பிரச்சினைகளைப் பற்றியோ, அவள் வீட்டைவிட்டுச் சென்றதைப் பற்றியோ நீங்கள் யாரும் அவளிடம் கேட்காதீர்கள். அவளும் யாரிடமும் தன் வருத்தத்தை காமிக்க மாட்டாள். எங்கள் பிரச்சினைகளை நான் சமாளித்துக் கொள்கிறேன்.” என்றான்.

கௌசல்யா “நீ சொல்லாவிட்டாலும் அவள் எங்களிடம் நன்றாக நடந்து கொள்வாள் என்று எனக்குத் தெரியும். எனக்கு நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதை நீ பார்த்துக் கொள்.” என்றாள்.

பிறகு எல்லோரும் டைனிங் ஹாலுக்கு வர ஷ்யாமிற்கு மட்டுமல்லது, சபரியின் பையன் அஸ்வினுக்கும் பருப்பு சாதம் ஊட்டிக் கொண்டிருந்த மைதிலியைப்  பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ராம் எப்படி அவளால் இப்படி இருக்க முடிகிறது என்று எண்ணினான்.

குழந்தைகள் சாப்பிட்ட பிறகு, ஷ்யாமிடம் எல்லோரையும் அறிமுகப்படுத்த எண்ணி ராம் “ஷ்யாம் கண்ணா, இவர்கள் யார் தெரியுமா?” என்க, குழந்தை அழகாக ஒவ்வொருவரையும் கை நீட்டி, “கொள்ளுத் தாத்தா, கொள்ளு பாட்டி, கௌசி பாட்டி, தாத்தா, அத்தை, சுபா பாட்டி, மாமா, சித்தி” என்று கூறியது. எல்லோருக்கும் சந்தோஷத்தில் கண்ணில் நீர் கட்டியது.

மைதிலி எல்லாரையும் பார்த்து “கல்யாண ஆல்பத்தில் உள்ள நம் குடும்ப போட்டோ பார்த்துப் பழக்கம். தினமும் ஒரு முறையாவது அதைப் பார்க்காமல் தூங்க மாட்டான்” என்றாள். ராம் தான் அவளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என எண்ணி வருத்தப்பட்டான்.

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.