08. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி
ஆண்களின் வெறித் தொடுகையின் அருவருப்பு, நடந்துவிட்ட நிகழ்ச்சியின் அதிர்ச்சி, படபடப்பு, பதற்றம், குமுறல் இவை இன்னும் சங்கல்யாவிற்குள் குறையவில்லை. அதில் அரண் அந்த பார்சலை குனிந்து எடுத்த நொடி அது ஒரு விஷயமாகக் கூட படவில்லை அவளுக்கு. அடுத்துதான் அவளுக்கு அந்த செயலின் பின் விளைவே மெல்ல உறைத்தது.
அந்த நொடி வரை இவளுக்கு மொத்த உலகமும் அநீதி இழைத்து விட்டது போல் உணர்ந்து கொண்டிருந்தவள் இப்பொழுது தன்னை அப்படி அநீதி இழைத்தவளாக, குற்றவாளியாக உணர்ந்தாள்.
அந்த போதை கூட்டம் இவளுக்கு செய்ய முனைந்ததற்கும், இவள் அரணுக்கு செய்ய நினைத்ததற்கும் இப்பொழுது ஏராளமான ஒற்றுமை தோன்றி உயிர் போகிறது இவளுக்கு. வன் புணர்ச்சி என்ற பெயரில், இவளது பெண்மையில், அவளது ஏக போக உரிமையில், அவளுக்கே அவளுக்கான உள் வாழ்க்கையில் தலையிட்டு அதை தங்கள் சுய வெறிக்காக கடை பரப்பத்தானே அந்த காமுகர் கூட்டம் முயன்றது,
இவளும் பழி முயற்சி என்ற பெயரில் அரண் வாழ்க்கையில், அவனது ஏக போக உரிமையில். அவனுக்கான உள் வாழ்க்கையில் தலையிட்டு அதை தன் வெறிக்காக கடை பரப்பத்தானே முயன்றாள்…. என்ன செய்துவிட்டாள் இவள்???
அவர்கள் போதையில் இருந்தார்கள்…அதோடு ஆண் என்ற திமிரும், இவள் பெண் தானே என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்திருக்கும்…. ஆனால் இவளுக்கு என்ன? ஏன் இப்படி நடந்து கொண்டாள்? அதுவும் இவள் செயல் அரணை மட்டுமா பாதிக்கும் சுகவியையும் தானே…. ஒரு பெண்ணுக்கு எதிராய் நடந்து கொள்ள இவளுக்கு எப்படி முடிந்தது?
அரணுக்கு அந்த பார்சல் என்னவென்று தெரிந்திருக்காது அதனால் தான் இன்னும் அமைதியாய் வருகிறான் போலும். மெல்ல அவன் முகம் நோக்கிப் பார்த்தாள். ஒரு வித அழுத்த முகபாவத்துடன் இருந்தான் அவன். அதற்குள் கார் இருந்த இடத்தை அடைந்திருந்ததால் கார் கதவை இவளுக்காக திறந்துவிட்டான் அவன். இவளைத் தொடர்ந்து தானும் உள்ளே ஏறி அமரவும் கதவை அடைத்து மூடியவன்
“வேற விஷயம்னா நீ கேட்காம எடுத்துகிட்டதுக்கு நீயே வச்சுக்கோன்னு குடுத்றுப்பேன் லியா…இது சுகாக்கு மட்டுமே உரிமையுள்ள விஷயம்….அதான் என்னால தர முடியலை…சாரி…” என்றபடி தன் டைரியை டேஷ் போர்டில் வைத்தவன் காரை கிளப்ப
அவமானத்தில் செத்தே போனாள் சங்கல்யா. முதன் முறையாக ஒரு ஆண் முன் குற்றவாளியாக உணர்ந்தாள் இவள். சாரி என சொல்ல மனம் துடிக்கிறது தான். ஆனால் அறியாமல் செய்துவிட்ட பிழைகளை தவிர வேறு எதற்கும் எப்பொழுதும் அந்த வார்த்தை அவளுக்கு போதுமானதாக பட்டதே கிடையாதே!!!
இப்பொழுது இவள் சாரி மட்டும் அரணுக்கு எப்படி போதுமானதாக முடியும்? மனம் எத்தனை குமுறியதோ அத்தனைக் கத்தனையாய் வாயை இறுக மூடி உள்ளுக்குள் உடைந்து விழும் வலியுடன் அவள்.. யாரிடமாவது கத்தி அழ வேண்டும், மனதிலுள்ளதையெல்லாம் கொட்ட வேண்டும் என முட்டிக் கொண்டு வருகிறது. யாரிருக்கிறாள் இவளுக்கு. ஜோனத் நியாபகம் வருகிறான்.
நேத்து ஜோனத்துடன் பேசும் போது இந்த காரியங்களின் பின் விளைவு மன வேதனையும் குற்றமனப்பான்மையையும் தவிர வேறு எதாயும் இருக்கப்போவதில்லை என இவளுக்கு தெளிவாய் புரிந்தது தானே. பின்பும் இவள் அதே தவறை செய்து வைத்திருக்கிறாளே? ஜோனத் கெட்டவனாகவே இருக்கட்டுமே அவன் சொல்லிக் கொடுத்த பாடம் உண்மையல்லவா? பின்னும் அந்த ஜோனத் மேலுள்ள கோபத்தில் என்ன செய்துவிட்டாள் இவள்?
இதற்குள் அரண் தன் மொபைலை இவளிடமாக நீட்டுகிறான். என்ன ஏதென்று புரியாமல் அவனிடம் மருந்துக்கு கூட மறுப்பு சொல்லும் தெம்பின்றி அதை கையில் வாங்கி காதில் வைத்தாள். யாருக்கோ அழைப்பு போய்க் கொண்டிருந்தது. இவளுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட யோசிக்கத் தெரியவில்லை.
அதற்குள் இணைப்பு ஏற்கப் பட “ என்னாச்சுடா…..எல்லாம் ஓகே தான…? உன் ஹெல்த் நல்லா இருக்குதுல்ல? வீட்டுக்கு ரீச் ஆகிடீங்களா?..இந்த நேரத்துல கால் பண்ற….அம்மா……சே அவங்கதான் எதுனாலும் எனக்கே கால் பண்ணிறுப்பாங்களே…..? லியாக்கு எதுவும் ப்ரச்சனையா….? அவ இப்ப எப்டிடா இருக்கா….? போர்ட் ஆகப் போறோம்… “
பேசுவது அரண் என நினைத்துக் கொண்டு கட கடவென மறைக்கப்பட்ட தவிப்புடன் கேள்விகளை அள்ளிக் கொட்டியது ஜோனத். நடு மண்டையில் நச்சென்று அடித்தது போல் தெள்ளத்தெளிவாக புரிகின்றது இவளுக்கு அனவரதன் சொன்ன விஷயத்திற்கும் இவனுக்கும் சம்பந்தமில்லை…. இவளுக்கான அத்தனை அக்கறை அவன் குரலில். எது சொல்லவும் தெரியாமல் இவள் விழித்த அரை நொடி மௌனத்தில் கேட்டுவிட்டான்
“ சிக்ஸர் நீயா ? என்னாச்சு? “
“ஏன்டா ஒன் மந்த் பார்க்க முடியாது…போர்ட் ஆக முன்னால லியாக்கு கால் பண்ணி சந்தோஷாமா பை சொல்லிட்டு கிளம்ப மாட்டியா? நான்லாம் கால் பண்ணாம போர்ட் ஆகிட்டனோ சுகா கொன்னுடுவா…” அருகிலிருந்த அரண் சொல்ல, ப்ரபாத்திற்கும் நிச்சயம் கேட்டிருக்கும்.
இவளுக்கும் ஜோனத்தை சந்தோஷமாய் வழி அனுப்பு என அரண் மறைமுகமாக சொல்வதும் புரிகின்றதுதான். அதே நேரம் அரணும் ஜோனத்திடம் பேச முயல்வதை உணர்ந்து ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.
“பொண்ண விட்டுட்டு இது மாதிரி ட்ரிப் போய் எனக்கென்ன அனுபவமா? நெக்ஸ்ட் டைம்ல இருந்து கரெக்ட்டா பண்ணிறேன்டா…” என அரணுக்கு பதில் சொன்ன ப்ரபாத்
“சிக்ஸர் கேர்ள் ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு உன்ட்ட கொஞ்சம் பேசனும் “ என்றான்.
அரண் காதில் இது விழும் என அவனுக்குத் தெரியும் தானே. இவளுக்குத் தான் ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால் ஆண்கள் இருவருமே அதை சட்டை செய்ததாக தெரியவில்லை. ஜோனத் சொன்னது போல் ஸ்பீக்கரை ஆஃப் செய்தாள் சங்கல்யா.
“ என்ன விஷயம்னாலும் நீ என்ட்ட பேசலாம்……இப்ப நான் போர்டாகிட்டா லண்டன் ரீச் ஆக 9 அவர்ஸ் ஆகும்……அல்மோஸ்ட் 10 அவர்ஸ் நான் ரீச்ல இருக்க மாட்டேன்…..இப்ப எதாவது நீ சொல்ல ஆரம்பிச்சு முழுசா சொல்லி முடிக்காம நான் அது என்னதுன்னு தெரியாம 10 அவர்ஸ் டென்ஷன்ல இருக்க வேண்டி இருக்குமேன்னுதான் அரண் சந்தோஷமா பை சொல்லுன்னு சொல்றது. அவன் என்ட்ட உன்னை விஷயத்தை மறைக்க சொல்றான்னோ பொய் சொல்லுன்னு சொல்றான்னோ புரிஞ்சுக்காத….என்ன விஷயம்னு கடகடன்னு சொல்லு…இன்னும் 2 மினிட்ஸ் இருக்குது…என்னால முடிஞ்சத செய்து தர்றேன்….”
அரணுக்கும் ஜோனத்துக்கும் இடையில் உள்ள அந்த புரிதல், அந்த அன்பு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடாத்தன்னமை ஒரு பக்கம் இவளைப் பந்தாடுகிறது என்றால்….அவர்கள் இருவரும் இவள் மீது காண்பிக்கும் அக்கறை அடுத்த புறம் தாக்க, ஏன் என்றே அவளுக்கு முழுதாய் புரியாமல், மனதிற்கு முக்காடிடும் எண்ணமும் வராமல், இருந்த மன அழுத்தத்தில்
“ஐ மிஸ் யூ வெரி பேட்லி…. உங்கட்ட பேசனும் போல தோணிச்சு” என அந்த நொடி மனதிலிருந்ததை சொல்லி வைத்தாள்.
அவன் புறம் சில நொடி மௌனம்.
அரணுக்கும் இவள் பேசுவது கேட்டிருக்கும். எப்படிப்பட்ட தில்லுமுல்லு செய்துவிட்டு என்ன கதை சொல்கிறாள் இவள் என அவன் நினைத்துக் கொண்டிருப்பானாயிருக்கும், ஜோனத்தும் என்ன ஒரு கேவலமான பொண்ணு இவன்னு தான் நினைப்பான்…அதுவும் நாளைக்கு இன்று நடந்த விஷயம் தெரிய வரும் போது அப்படித்தான் கட்டாயம் நினைப்பான்….ஆனால் இப்பொழுது இருக்கிற வேதனையில் உண்மையில் அவளுக்கு ஜோனத்திடம் கொட்டித் தீர்க்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது…..அவள் வரையில் இந்த வார்த்தைகள் 100% உண்மை.
ப்ராபாத்தைப் பொறுத்தவரை இது பௌன்ஸரல்லவா…..திக்குமுக்காடிப் போயிருந்தான் அவன். அவனிடமிருந்து உடனடியாக பதில் வரவிலை எனவும் இவள் மனம் இங்கு இன்னுமாய் குற்றம் சுமத்த