(Reading time: 11 - 21 minutes)

01. ஐந்து - பார்த்தி கண்ணன்

ன்ன அர்ஜுன்..முக்கியமா ஏதோ இன்னிக்கு சொல்லியே தீருவேன்னு சொன்ன..எதுமே பேச மாடேங்குற",புன்சிரிப்புடன் கேட்டாள் அனிதா.

அந்த அறை முழுவதும் மெழுகுவர்த்தி ஒளியால் ஜொலித்தது. அறையின் நடுவே இருந்த டைனிங் டேபிளில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர் அனிதாவும்,அர்ஜுனும். ஏதோ ஒரு பழைய ஆங்கிலப் பாடல் மென்மையாக பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

டேபிளிக்குக் கீழே கையில் வைத்திருந்த கிரீட்டிங் கார்டையும்,தங்க நிறக் கவரில் சுற்றப்பட்டிருந்த கையடக்கமான அந்த கிப்டையும் இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டான்.

ainthu“சொல்றேன்..கொஞ்சம் வெய்ட் பண்ணேன்" என்றான் அர்ஜுன் கையில் இருந்த வைன் கிளாஸில் ஒரு சிப் அருந்தியபடியே.

“ஹ்ம்ம் .. சஸ்பென்ஸ் நல்லா தான் இருக்கு" என்றாள். அவள் முகம் மஞ்சள் ஒளியில் பிரகாசித்தது. 

அடுத்த சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டே சாப்பிட்டனர்.

திடீரென காற்று கொஞ்சம் பலமாக வீச மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாய் படபடவென அனைந்துபோகத் தொடங்கின.

“அர்ஜுன்...இதுக்கு தான் சொன்னேன்..ஜன்னல க்ளோஸ் பண்ணுனு"  சொல்லிக்கொண்டே எழுந்தாள்.

“ம்ம்ம்..க்ளோஸ் பண்றேன்" என்று சொன்னவன் தனது கோட்டின் உள்பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தான்.  அரையிருளில் அதை அவள் அதை கவனிக்கவில்லை. அவளை நெருங்கினான்.

அவள் ஜன்னலை மூடிக்கொண்டிருந்தாள். பின்னால் இவன் நிற்பதை அவள் அறியவில்லை. சரியான தருணம் இதுதான் என்று  தோன்றியது அவனுக்கு.  கண்ணிமைக்கும் நொடியில் கத்தியை அவளின் கழுத்திற்குக் கொண்டு சென்றான்.

The video cannot be loaded further. Please bear with us until we fix the error  என்று திரையில் தோன்றியது.

“ஹோலி ஷிட்..எகைன் இதே ப்ராப்ளம்,,ச்சே"  பல்லைக் கடித்துக்கொண்டிருந்தாள் சாரா. இத்தோடு ஐந்தாவது முறையாக இந்த படத்தை பார்த்துவிட்டாள். ஒவ்வொரு முறையும் சரியாக இதே காட்சியில் வீடியோ நின்றுவிடுகிறது. மயிர்கூச்செறியும் த்ரில்லர் படமொன்று கிளைமாக்ஸில் இப்படி நின்றுபோனால் எரிச்சல் வராதா என்ன ?

யூ-டியூபில் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது எதார்த்தமாய் கண்ணில் பட்டது இந்தப் படம். 'உயிர்' என்கிற   டைட்டில் ஏதோ செய்தது. உடனே க்ளிக் செய்துவிட்டாள். பத்து நிமிடப் படமான இதை இந்த ஒருமணி நேரத்தில் ஐந்தாவது முறையாக முழுமையாய் பார்க்க முயற்சித்துவிட்டாள்.  சரியாக கிளைமாக்சில் நின்றுவிடுகிறது.

“அய்யோ.. பைத்தியம்பிடிக்கிற மாதிரி இருக்கே.. காலைல ட்ரை பண்ணிப் பாப்போம்",என்று எண்ணியபடியே கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்துவிட்டு எழுந்தாள்.  விரிந்து கிடந்த முடியை அள்ளி ஹேர்பேன்ட் சுற்றிக்கொண்டாள்.

சாரா, இருபத்துநான்கு வயது சாப்ட்வேர் என்ஜினியர். சென்னையில் தனியாக பிளாட் எடுத்துத் தங்கியிருக்கிறாள். எக்கச்சக்க  சம்பளம். ஜாலியான நண்பர் கூட்டம், தலைகால் புரியாத போதையில் மிதக்கும் வாரயிறுதி நாட்கள் என துள்ளலான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் பேரழகி.

தன் அறையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். தொண்டை வறண்டு போயிருந்தது. தண்ணீர் குடிக்க கிட்சனை நோக்கி நடக்கத் துவங்கினாள்.   ஹாலை அடைந்த போது பட்டென வீடு இருண்டது.  

“ஓ காட்..இந்த பவர் கட் வேற" ,சலித்துக்கொண்டே தன் பாக்கெட்டைத் தடவினாள். செல்போன் இல்லை.   இருட்டிலே நிதானமாக சமையலறையை நோக்கி நடந்தாள். அவளது செருப்பின் ஹீல்ஸ் சத்தம் அந்த  பேரமைதியான நள்ளிரவில்,சுவரில் பட்டு எதிரொலித்தது. 

அப்போது அந்த பாடல் ஒலித்தது.  சற்றுமுன் அந்தப் படத்தில் கேட்ட அதே பாடல்.  இருளில் பக்கென்றது இதயம். ஒரு நொடி நின்றவள் இருளில் சுற்றிப் பார்த்தாள். கும்மிருட்டு.  யாரும் இல்லை. மின்சாரமும் இல்லை. ஆனால் பாடல் தெளிவாகக் கேட்டது இன்னும்.  குழம்பிப் போனாள்.

“ஒரு வேளை மன பிரம்மையோ?” யோசித்தாள். பாடல் இன்னும் கொஞ்சம் ஒலி கூடியது. அந்த மென்மையான பெண் குரல் இனிமையும் மர்மமும் கலந்த ஒரு புது வகையான திகிலாக இருந்தது.  அதனுடன் இசைந்து வரும் பியானோ இசை இதயத் துடிப்பைக் கூட்டியது. லேசான பயம் மனதைப் பற்றிக்கொண்டது.

“ஜீசஸ்", வேண்டிக்கொண்டாள். கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையைப் பற்றிக்கொள்ள அவளது கைகள் விருட்டென அவள் கழுத்தை அடைந்தன.  செயின் கழுத்தில் இல்லை. பதற்றம் மேலும் எகிறியது.  

 பாடல் வரும் திசையை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். பால்கனியிலிருந்து தான் வந்து கொண்டிருந்தது அந்தப் பாடல்.

“ஹேய்..யார் அங்க?” குரல் நடுங்கக் கேட்டாள்.

திரைச்சீலை காற்றிலாடி லேசாக விலகியது.  வெள்ளை நிற ஒளி அதன் வழியே தென்பட்டது.  ஸ்தம்பித்து நின்றாள். 

பேச்சுக்குரல் கேட்டது. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் பேசும் ஒலி. என்ன பேசுகிறார்களென்று சரியாகப் புரியவில்லை. ஆனால் பேசிக்கொண்டிருந்தார்கள். வியர்வைத்துளிகள் உடலெங்கும் பொத்துக்கொண்டன.

“ஹலோ.. “ , கிட்ட நெருங்கிவிட்டாள்.

இப்போது அவர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

கைகள் நடுங்க திரைசீலையை விலக்கினாள். அந்த வெண்ணிற ஒளி கண் கூசச் செய்தது. ஒரு நொடி கையால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.  பின்னர் மெதுவாக உள்ளே சென்றாள். அப்படியே உறைந்து போனாள்.

“ஏய்,,நீ,,நீங்க எப்படி இங்க..I cannot believe this..”

அவர்கள் இவளைக் கண்டுகொள்ளவேயில்லை.

பதறியடித்து பின்னால் விழுந்தாள். இருளில் தட்டுத்தடுமாறி எழுந்து தன அறைக்கு ஓடினாள். அவளது செல்போன்திரை ஒளிர்ந்துகொண்டிருந்ததது. கைகள் நடுங்க டயல் செய்தாள்.

ண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை பசேலென புல்வெளி.  தூரத்தில் சில யூகலிப்டஸ் மரங்கள். கொஞ்சம் அதிகமாகவே குளிர் வீசிக்கொண்டிருந்தது.  ஆள் நடமாட்டத்தின் அறிகுறி ஏதும் இல்லாத அந்த மலை அடிவாரத்தின் அழகை காணக் காணத் தீரவில்லை.  இந்த அழகை ரசித்தபடியே இயர்போனில் தனக்கு பிடித்த மெலடிகளை கேட்டு மனதுக்குள் துள்ளித் திளைதுக்கொண்டிருந்தான. மணி ஐந்து என அவன் கடிகாரம் காட்டியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும்.  சீக்கிரம் அவள் வந்தாள் பரவாயில்லை என ஆவலோடு காத்திருந்தான் அரவிந்த்.  அடுத்த சில நிமிடங்கள் கரைந்தன.

தூரத்தில் பிங்க் நிற ஸ்கூட்டியில் அவள் வருவது தெரிந்தது.  நீல நிற சல்வார், பெரிய சன்கிளாஸ்,முகத்தை துப்பட்டாவால் சுற்றியிருந்தாள்.  தானாய் கால்கள் எழுந்துகொண்டான். காதிலிருந்து இயர்போனை பிடுங்கி அவசரமாய் பாக்கெட்டில் செருகிக்கொண்டு,  அவளை நோக்கி நடந்தான்.  நெருங்கி வந்து விட்டாள். ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ஓடி வந்து கட்டிக்கொண்டாள். 

“அஞ்சலி"

“ஹாய்..சாரி. I am late. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”

“இல்ல இல்ல..ஜஸ்ட் ஒரு பதினஞ்சு நிமிஷம் இருக்கும். நீ இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் ஓகே. "

“அப்பா கெளம்ப லேட் ஆயிடுச்சு.அதான்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.