(Reading time: 13 - 25 minutes)

12. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ரபரப்பான மதிய நேரம்..

சாரதா சமையலறையில் எதையோ அவசர அவசரமாக உருட்டி கொண்டிருந்தார்..  அவர் கையில் பாத்திரங்கள் அதகளப் பட்டுக் கொண்டிருந்தது..

அந்த சமயத்தில் அங்கே வந்த ராமமூர்த்தி,  "சாரு.. எல்லாம் ரெடியா?.. மணி மூணாக போகிறது?.. இன்னுமா முடியவில்லை? .. நீ எப்ப ரெடியாக போகிறே?.. என்ன நீ இப்படி தலையும் வேஷமுமாக வேர்த்து விறு விறுத்து இருக்கே?.. ஏம்மா மஹி.. நீ என்னம்மா இங்கே கிச்சன்ல பண்ணரே?.. போம்மா கல்யாண பொண்ணா போய் நன்னா டிரஸ் பண்ணிக்கோ"..

vasantha bairavi

ஒன்றும் சொல்லாமல் தன் தந்தையை பார்த்து சின்ன புன்னகையை சிந்தினாள் மஹதி.. கை மாத்திரம் அதன் பாட்டுக்கு, வாழைக்காயை சீவி கொண்டிருந்தது.

என்றும் அமைதியாக, சாந்தமாக எந்த விஷயத்தையும் நிதானமாக செயல் படுத்தும் சாரதாவுக்கே அன்று கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது.. பின்னே, என்ன?.. தன் கணவர் ராமமூர்த்தியிடம் பொரிய ஆரம்பித்தாள்..

"என்னன்னா பண்ண சொல்லறீங்கோ?.. உங்க இரண்டு பொண்ணும் காலங் கார்த்தாலேயே அவா அவா குடும்பத்தோடு வந்து இறங்கியாச்சு.. காலையில் டிபன் காப்பி,  இதோ மத்தியான சாப்பாடு எல்லாம் ஆச்சு.. ஏதோ ஆத்துலே விஷேஷம் இருக்கே.. கூடமாட ஒத்தாசைக்கு வருவமோன்னு இல்லாமா, உள்ளே பெட் ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கா.. ஒத்தாசை பண்ணலேன்னாலும் பரவாயில்லை, அம்மா கஷ்டப் படராலே, எதையோ இன்னிக்கு சிம்பிளா சமைப்போம், மத்த வேலைகளை பார்ப்போம்ன்னு இல்லாமா, எங்காத்துக்காரருக்கு, பூசணிக்காய் போட்டு மோர் குழம்பு பண்ணா பிடிக்காது.. வெண்டைக்காய்  போட்டால்தான் பிடிக்கும்.. இப்படி வரும் பொழுது எல்லாம், இந்த மாதிரி செஞ்சா, வெறுத்து போறது".

"விடும்மா.. அவா குணம் தான் தெரிஞ்சது தானே.. அவா இரண்டு பேர் கிட்டேயும் சொல்லாமலும் எதையும் செய்ய முடியாதும்மா.. மூத்த மாப்பிள்ளை ஏற்கனவே நம்ம மேலே என்னவோ கோபாமாவே இருக்கிறார்.. நம்ம கஷ்டத்தை எங்கே புரிஞ்சுக்கிறார்? .. போகட்டும்.. கார்த்திக் மாப்பிள்ளை வேறு ஏதாவது வேணுமான்னு கேட்கச் சொன்னார்..  மஹதிக்கு பூ வாங்கிண்டு வர கடை பக்கம் இப்ப போறாராம்".

"ஒன்னும் வேண்டாம்.. அவரே ஊரிலிருந்து வரும் பொழுதே, எக்கச்சக்கமா காய்கறி, பழங்கள் எல்லாம் அவாத்து தோட்டத்திலேர்ந்து கொண்டு வந்து குவிச்சிருக்கார்.. துளிர் வெத்தலை கூட நிறைய இருக்கு.. நல்ல மனசு அவருக்கு.. நம்ம பொண்ணு அவரை கல்யாணம் பண்ண கொடுத்து வைச்சிருக்கனும்" 

அந்த சமயத்தில் மாடி வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்தாள் பைரவி.

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

சிம்பிளான காட்டன் சூடிதாரிலும் அழகு கொஞ்ச வந்த பைரவியை கண்ட சாரதா புன்னகைத்து, "வாம்மா பைரவி.. மதியம் சாப்பிட்டாயா?.. நீயும், அஜய்யும் கீழேயே வந்து சாப்பிடுங்கமான்னா, மாட்டேன்னு சொல்லிட்டே?" என்றவரை,

"அதில்லை மாமி.. ஏற்கனவே, உங்காத்துலே நிறைய பேர் வந்திருக்கா..  இதுல நாங்க வேறே உங்களுக்கு தொந்தரவு குடுக்கணுமா.. அதான் குழம்பு, தொட்டுக்க காய்கறி எல்லாம் கொடுத்து அனுப்பினேளே.. வெறும் சாதம் மாத்திரம் குக்கரில் வைக்க எத்தனை நேரம் ஆகப் போகிறது?.. எல்லாம் நன்னா சாப்பிடாச்சு.. அது சரி, மஹதி மணி மூன்றாக போகிறது? இன்னும் நீயும், மாமியும் கிச்சன்லே என்ன பண்ணறீங்க?. நாலு மணிக்கு ராகு காலத்துக்கு முன்னாலே மாப்பிள்ளையாத்துக்காரா வந்துடுவான்னு மாமி சொன்னாளே?..ரெடியாகலையா?"

"அதைதான் நானும் சொல்லிண்டு இருக்கேன்.. இன்னும் என்னத்தையோ சமைச்சிண்டு இருக்கா.. அம்மாடி பைரவி, நீ கொஞ்சம் மஹதியை அழைச்சுண்டு போய் ரெடி பண்ணும்மா?"

"சரி அங்கிள் " என பைரவி சொல்ல, ராமமூர்த்தி வேறு ஏதாவது வேலை பாக்கி இருக்கிறதா என்று பார்க்கக் கூடத்திற்கு நகர்ந்தார்.

"மஹதி, நீ வேணா போய் கொஞ்சம் உன் முகத்துக்கு ஃபேஸ் பாக் அப்ளை செஞ்சுக்கோ.. கிச்சனில் இத்தனை நேரம் இருந்தது பார்த்தா கொஞ்சம் டல்லா இருக்கிறது?.. வேண்டுமானால் ஒரு சின்ன குளியல் போடு.. நான் மாமிக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்யறேன்.. நீ போ போ.. நான் ஜஸ்ட் டென் மினிட்ஸில் உன் ரூமிற்கு வருகிறேன்"  என்று அவளை துரத்தி அனுப்பியவள்,

"சாரதா மாமி,  கொஞ்சம் தள்ளுங்கள்.. வாழைக்காய் பஜ்ஜி தானே.. நானே போட்டு விடுகிறேன்.. இன்னும் வேறு என்ன செய்யனுமோ நான் செய்யறேன்.. நீங்க வேண்டுமானால் போய் ரெடியாகி வேறு புடவை மாற்றிக் கொள்ளுங்கள்"  என்றாள்.

"தாங்க்ஸ் பைரவி.. ஆல்ரெடி நான் மைசூர் போண்டா போட்டு முடித்து விட்டேன்.. ரவா சொஜ்ஜி பண்ணி வைச்சாச்சு.. ஜஸ்ட் எக்ஸ்ட்ராவா கொஞ்சம் பஜ்ஜி போடலாம்ன்னு வாழைக்காயும், உருளை கிழங்கும் மஹதி கிட்ட சீவச் சொன்னேன்.. சரிடா நீ கொஞ்சம் பார்த்துக்கோ.. நான் பத்தே நிமிஷத்திலே ரெடியாகி வரேன்.. வந்து பாலை காய்ச்சினா போதும்.. புதுசா இறக்கின டிகாஷன் ரெடியா இருக்கு..  பஜ்ஜி கூட ஒரு வாட்டி, ஏற்கனவே ஒரு ரவுண்ட் போட்டு குட்டி பசங்க எல்லாத்தையும் காலி பண்ணிடுத்துங்க.. அதான் திரும்பவும் செய்யறா மாதிரி ஆகிவிட்டது".

"கவலை படாதீங்க மாமி.. நான் பார்த்துக் கொள்கிறேன்"  என்ற பைரவி வாழைக்காயை எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணையில் போட்டவளை, மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, "ம் .. பாரு எங்கேயோ இருந்து வந்த பொண்ணு நமக்கு ஒத்தாசையா இருக்கா.. ஆத்து பொண்ணுங்க என்னவோ விருந்தாளி மாதிரி நடந்து கொள்கிறதுகள்"  என்று அலுத்து கொண்டபடி தனது அறைக்கு சென்றார்.

டுத்த அரை மணியில் பஜ்ஜிகளை செய்து அடுக்கிவிட்டு, சாரதா மாமி செய்து வைத்திருந்த போண்டா, ரவா ஜொஜ்ஜி எல்லாவற்றையும் எடுத்து அழகாக கேசரோல்களில் வைத்தவள், வருபவர்களுக்கு கொடுப்பதற்கு ஏதுவாக, அழகான தட்டுகள், சின்ன கின்னங்கள், டம்ளர்கள், ஸ்பூன்கள், எல்லாவற்றையும் எடுத்து சமையலறை மேடையில் அடுக்கி வைத்தாள்.. அத்துடன், ஒரு தாம்பாளத்தில் வருவர்களுக்கு கொடுக்க வேண்டிய வெற்றிலை, பாக்கு, மஞ்சள் எல்லாவற்றையும் சரி படுத்தி வைத்தவள்,  அடுப்பில் காஃபிக்காக பாலை வைத்தவள், ஏதோ சமையலறை வாசலில் சத்தம் கேட்கத் திரும்பினாள்.

அங்கே இரண்டு பெண்கள் கண்களை பறிக்க பெரிய ஜரிகை பட்டு புடவையில் கழுத்து வரை நகைகளை பூட்டிக் கொண்டு சர்வ அலங்கார பூஷிதைகளாக அங்கே பைரவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.. அவர்களுடன் மூன்று சின்ன பெண்களும், ஒரு பத்து வயது பையனும் நின்று கொண்டிருந்தனர்.

அந்த மூன்று பெண் குழந்தைகளில் சற்றே பெரியவள்,  மற்றவர்களிடம் "ஏய் இந்த ஆண்ட்டி ரொம்ப அழகாக இருக்காங்கடி.. ஆக்ட்ரஸ் திரிஷா மாதிரியே பார்க்கரதுக்கு இருக்காங்க.. ஒரு வேளை அவங்கதானோ"  என கிசுகிசுக்க,

"ஏய் வானரங்களா.. வாயை மூடிண்டு கொஞ்சம் அந்த பக்கம் போறீங்களா"  என்று சற்றே பெரியவள் ஒருத்தி அதட்ட, குழந்தைகள் ஏதோ முணுமுணுத்து விட்டு  "பாட்டி" என்று அழைத்தபடி வெளியே சென்றனர்.

"நீ யாரும்மா?.. எங்க வீட்டு சமையலறையில் உரிமையா நின்னுன்டு என்ன பண்ணரே?.. முதல்ல உன்னை யார் உள்ளே விட்டா" என்று அதட்ட,

அந்த சமயத்தில் அங்கே வந்தான் வசந்த்..

"ஹாய் பைரவி இங்க கிச்சனில் என்ன செய்யறீங்க?.. அம்மா எங்கே போனாங்க?"  என கேட்க,

அதற்குள், "டேய் வசந்த், யாருடா இந்த பொண்ணு.. உரிமையா நம்மாத்து சமையல் கட்டுல நிக்கிறது?"

"ரஞ்சனிக்கா, இவங்க தான் புதுசாக மாடிக்கு குடித்தனம் வந்திருக்கிற பைரவி.. அமெரிக்காவில் டாக்டரா இருக்காங்க.. ஏதோ ரிசர்ச் பண்ண இந்தியாவுக்கு கொஞ்ச நாள் வந்திருக்காங்க.. கர்னாடிக் பாட்டுல ரொம்ப இண்ட்ரெஸ்ட்.. அம்மாகிட்ட இப்ப பாட்டு கத்துக்கறாங்க.. நீ எங்கே காலையிலேர்ந்து அத்திம்பேர் பின்னாடியே சுத்திண்டு இருக்கே.. அதான் உனக்கு இவங்களை பற்றி ஒன்னும் தெரியலை" என்று குறை பட்டான்.

"ஓ"..  என்ற இளையவள் கல்யாணி,  "அது சரி மாடியில குடித்தனம் இருக்கிறவங்களுக்கு இங்கே என்ன வேலை.. அப்படியே பாட்டு கற்று கொள்ள வந்தாலும், இன்னைக்கு ஞாயிற்று கிழமை.. அம்மா எப்பவுமே லீவ் நாளில் கிளாஸ் வைச்சுக்க மாட்டாளே?? .. அமெரிக்ககாரா அப்படின்னே.. கண்டவாளும் சமையல் கட்டு வரை உள்ளே வரா.. அம்மாவுக்கு புத்தி எங்கே போச்சாம்.. வர வர இந்த வீட்டிலே ஆச்சாரமே இல்லை", என்று கழுத்தை நொடித்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.